<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

25.11.04

தேநீரில் பலவகைகள் 

சுவையான தேநீர் குறித்த சந்திரவதனாவின் பதிவைப் படித்ததும் எனக்கு இந்தப் பதிவை எழுதத் தோன்றியது.

பாலும் சர்க்கரையும் தேயிலையும் சேர்ந்த வழக்கமான தேநீருக்குப் பதிலாக வேறு சில சுவையான தேநீர் தயாரிப்பு முறைகள் இதோ:

1. பொதினா தேநீர்
ஒரு கோப்பை தண்ணீரைக் கொதிக்கவைத்து ஐந்து அல்லது ஆறு இலைகள் பொதினாவும் அரை தேக்கரண்டி தேயிலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்து அருந்தலாம். (நிறைய பொதினாவோ தேயிலையோ சேர்த்தால் கசப்பாக இருக்கும்). பால் தேவையில்லை.

2. எலுமிச்சை தேநீர்
மேலே குறித்தபடி தயாரித்த தேநீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். பொதினா இல்லாமல் வெறும் தேயிலையைக் கொதிக்க வைத்தும் எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்தலாம். பால் சேர்த்தால் திரிந்து போய்விடும்.

3. இஞ்சி தேநீர்
ஒரு கோப்பை தண்ணீரைக் கொதிக்கவைத்து தேவையான அளவு தேயிலையும் அத்துடன் சிறிது இஞ்சியை அம்மியில் இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்து அருந்தலாம். பால் தேவையில்லை. வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

4. ஏலக்காய் தேநீர்
இஞ்சி தேநீர் போலவே ஏலக்காயைப் பொடியாக்கி சேர்த்தும் தேநீர் தயாரிக்கலாம்.

வழக்கமாகப் பாலுடன் தயாரிக்கும் தேநீரில் ஏலக்காய் இஞ்சி இரண்டுமோ அல்லது இவற்றுள் ஏதாவது ஒன்றோ சேர்த்துக் கொள்ளலாம்.

| (2) விரிவான மறுமொழி

21.11.04

எடை குறைய வேண்டுமானால் நிறையச் சாப்பிடுங்கள் 

ஆமாம் உண்மை தான். உங்கள் எடை குறைய வேண்டுமானால் நிறையச் சாப்பிடுங்கள். என்ன பாமரத்தனமாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 7500 பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நிறைய என்பதைவிட எத்தகைய உணவு என்பது கவனிக்க வேண்டிய செய்தி.

காய்கறிகள், பழங்கள், கீரைகள் நீர்ச் சத்து நிறைந்த உணவாக நிறைய உண்ணலாம். உண்ணும் உணவு மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, ஆற்றல் குறைந்தவையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

எண்ணெயில் வறுத்த முறுக்கு, சீடை, வற்றல், வடகம், வடை (பணியாரம் உட்பட) உண்பதெல்லாம் தொந்தியைப் பெருக்கச் செய்கின்றன. இவற்றை நிறைய உண்ண உண்ண உடலின் கொழுப்புச் சத்து, தேவையற்ற எடை கூடுகிறது. இவற்றைக் குறைத்துக் கொண்டு நீர்ச் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை நிறைய உண்ணுங்கள். உடல் எடை கூடாது. குறையவும் செய்யும். ஆரோக்கியமாக வாழலாம். இந்த ஆய்வுக் கட்டுரை குறித்த மேலதிக விபரங்களுக்கு : பென்சில்வேனியப் பல்கலைக் கழகத் தளம்.

எங்கள் ஊரில் நூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆரோக்கியமாக வாழும் பெரியவர் ஒருவர் இருக்கிறார். சில தினங்கள் முன்பு அவரது மகனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது பெரியவரின் பழக்க வழக்கங்களைப் பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார்: "நம்மைப் போல எப்போதுமே நொறுக்குத் தீனியை அவர் விரும்பியதில்லை. நேரத்துக்கு அளவாக உண்பார். சில ஆண்டுகளுக்கு முன்பு நல்ல உடல் இயக்கத்துடன் இருந்தவரை காலையும் மாலையும் பல கல் தொலைவு நடந்து வருவார்"...
| (0) விரிவான மறுமொழி

15.11.04

அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும். 

ஒருவர் நமக்கு மணிக்கணக்காக ஆலோசனை சொல்கிறார். நம் காதுகளில் விழுந்தாலும் அவை எதுவும் நம் கவனத்தில் வருவதில்லை. ஆழமாகப் பதிவதில்லை. எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தி விடுவதில்லை.

வேறு ஒரு சமயத்தில் யாரோ போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போகும் (அதே கருத்திலான) சொற்கள் நமக்குள் அழுந்துகின்றன. ஆழச் சென்று தைக்கின்றன.

ஏன் இப்படி என்று கேட்டால் வழக்கமாக இப்படித்தான் பதில் சொல்கிறார்கள்:

"அதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்."

அல்லது

"அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்"

ஒரு பிரபலமான சாமியார் ஒருவரிடம் எனது உறவினர் ஒருவருக்கு மிகுந்த ஈடுபாடு. அவரது பேச்சுக்களை கேட்பது - அவரது குழுவோடு பக்திப் பாடல்கள் பாடுவது இப்படி. இதைப் பற்றி எனக்குத் தெரிய வந்ததும் நான் அவரைப் பலவிதமாக எச்சரித்தேன். அந்த சாமியார் பற்றி வெளியான பல செய்திகளைத் தொகுத்து அனுப்பினேன். ஆபிரகாம் கோவூர் இவர்களது உண்மையான முகத்தை எப்படி வெளிப்படுத்தினார் என்று இணையத்தில் கிடைத்த தகவல்களை எல்லாம் அனுப்பினேன்.

ஆனால் அவரிடம் இவையெல்லாம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவே இல்லை. அவர் இதற்கெல்லாம் ஒரே பதில் தான் வைத்திருக்கிறார். "நான் மிகுந்த மனத்துயரில் இருந்த போது இந்த குருதான் எனக்கு அமைதியை வழங்கினார். இவரைப் பற்றி அறிந்து இவரது வழிக்கு வந்த பிறகு தான் நான் நிம்மதியாக எதைப் பற்றியும் கவலை இல்லாமல் வாழ்கிறேன். மற்றவர்களது விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இவரைப் பற்றித் தெரிய வந்த பிறகும் நீ இவரைப் பின்பற்றவில்லையானால்,

உனக்குக் கொடுப்பினை இல்லை".

இது எப்படி இருக்கிறது?
| (0) விரிவான மறுமொழி

13.11.04

வலைப்பதிவுகளில் என்ன செய்யலாம்? 

ஐந்து மாதங்களுக்கு முன்பே வலைப்பூவில் ஆசிரியராகும்படி மதியிடமிருந்து மடல் வந்தது. நேரமின்மையின் காரணமாக நவம்பரில் வாய்ப்பு வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டேன். "காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ளத் தெரியாதவன்" என்று என்னைப் பற்றிச் சொல்லப்படும் வழக்கமான வார்த்தைகளுக்கு மீண்டும் ஒரு சான்று கிடைத்து விட்டது. ஏற்பட்டு விட்ட மாற்றங்களால் தமிழ்மணத்தில் இந்தப் புதிய அவதாரம் எடுக்கும்படி ஆயிற்று.

ஒளிவிளக்குகள் உங்களை நோக்கித் திருப்பப்படுகின்றன என்று காசி அறிவித்த போது எனக்குள் "பயனில் சொல் பாராட்டு வானை..." என்று திருவள்ளுவர் வந்து எச்சரித்தார். கூடுமானவரை பயனுள்ள பதிவுகளாகவும் முரண்பாடுகள், தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கும் வகையிலும் எழுத முயன்றேன்.

தமிழ்மணம் வலைவாசல் அறிமுகம் இருந்ததால் எப்போதையும் விட நிறையப் பேர் வந்து சென்றனர். சிலர் தமது பொன்னான நேரத்தைச் செலவிட்டு மறுமொழியிடவும் செய்தனர்.

கோபி, நவன், மூர்த்தி, அன்பு, சந்திரவதனா, இராம.கி., செல்வராஜ், சுந்தரவடிவேல், சிவகுமார் போன்று மறுமொழி அளித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாரத்தில் தொடங்கிய பலவற்றைப் பற்றி இனிவரும் வாரங்களில் தொடரலாம் என்று எண்ணியுள்ளேன். நினைவாற்றல் பற்றிக் குறைந்தது பத்து வகையான எளிய பயிற்சி முறைகளையாவது சொல்லலாம். உடற்பயிற்சி முறைகளைக் கூறலாம். அழுத்த சமைகலன் போல அறிவியலை அன்றாட வாழ்வில் பயன்படுத்திய இன்னும் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். வலைப்பதிவுகளின் பயன்கள் பற்றி நிறைய எழுதலாம். இவற்றுக்கெல்லாம் இந்த வாரம் ஒரு தொடக்கமாக அமைந்தது குறித்து மகிழ்கிறேன்.

ஆனாலும் இவையெல்லாம் போதாது என்று தோன்றுகிறது. வளர்ந்த தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் தேவைப்படும் குழுக்களுக்கு எடுத்துச் செல்லவில்லையோ என்று தோன்றுகிறது. திறமையாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களது ஆற்றல் சரியான திசையில் எடுத்துச் செல்லப்படவில்லை.

சந்தைப்படுத்துதல் தொடர்பாக மீனாக்ஸ் மேற்கொண்டதும், பங்குச்சந்தை தொடர்பாக தமிழ்சசி மேற்கொண்டதும், குவாண்டம் அறிவியலை அறிமுகப்படுத்த சங்கர் மேற்கொண்டதும் சரியான திசையிலான நல்ல முயற்சிகள். பல்வேறு துறைகள் தொடர்பாக அத்துறை வல்லுநர்கள் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளுதல் தமிழ் வலைப்பதிவுகளை மிக உயர்ந்த தளத்துக்குக் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். (அடுத்தவருக்கு ஆலோசனை சொல்வதிருக்கட்டும் நீ என்ன செய்தாய் என்று யாரோ முணுமுணுப்பது என் காதுகளில் விழுகிறது.. கொஞ்சம் பொறுங்கள். உருப்படியாக ஏதாவது செய்வேன்.)

வலைப்பதிவாளர்களில் பலரும் கணினி வல்லுநர்கள் தான். ஆனால் இன்று தமிழ்நாட்டில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பி.ஈ., எம்.சி.ஏ., படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் நிலை இவர்களுக்குத் தெரியாது. காலத்துக்கு ஒவ்வாத பாடத்திட்டம், கற்றுக்குட்டிகளான, திறனற்ற ஆசிரியர்கள், மோசடியாய்ப் பணம் பறிக்கும் தனியார் கணினிக் கல்வி நிறுவனங்கள், சரியான வழிகாட்ட யாருமற்றுப் பரிதவிக்கும் மாணவர் கூட்டம்.

அது மட்டுமல்ல. குடும்பச் சொத்தை எல்லாம் விற்று ஒரு பட்டத்தை வாங்கி விட்டால் அதன்பின் மாதம் 2000 அல்லது 3000 சம்பளத்தோடு கிடைப்பது பயிற்சியாளர் அல்லது கெளரவ விரிவுரையாளர் வேலைதான். திறமை இருக்கிறது முயற்சி இருக்கிறது ஆனால் எந்தத் திசையில் செல்வதென்ற வழிகாட்டல் இல்லை. இதன் விளைவாக மரக்கட்டைகளை இழுத்துச் செல்லப் பயன்படும் யானைகள் நம்மைச் சுற்றி... நிலைமை இன்னும் மோசமாகுமோ என்றும் அச்சமாக உள்ளது.

தமிழ்க் கம்ப்யூட்டர் போன்ற இதழ்களில், வினாவிடை பகுதிகளில் என்ன பிராஜெக்ட் செய்வது என்று புலம்பும் மாணவர் தொகைதான் மிகுதி.. அவர்களும் எதையோ எழுதுகிறார்களேயன்றிச் சரியான வழிகாட்டுதல் இல்லை.

இதையெல்லாம் பார்க்கும் போது, கணினி அறிவியல் கருத்துக் களம் சார்ந்த பதிவொன்று தொடங்கப்பட, ஆர்வமுடையவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வகையில் பத்ரியின் எழுத்துக்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. இன்று பத்ரி தமது வலைப்பதிவில் இவ்வாறு எழுதியுள்ளார் :

"பல இந்தியர்கள் சிலிகான் வேலியில் இருந்துகொண்டு அதிகம் வெளியே தெரியாமல் தகவல் தொழில்நுட்ப உலகையே மாற்றி அமைத்துள்ளனர்.............அவர்களது தொழில்நுட்ப வாழ்க்கையைத் தோண்டித் துருவி அவர்கள் என்ன சாதித்தனர் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அத்துடன் நான் அறிந்து கொண்டதை என் பதிவில் எழுதிப்போடுகிறேன்."

நாட்டு நடப்புகளை, திரைப்படங்களை, புதுக்கவிதைகளைப் பற்றிப் பேசத்தான் நிறையத் தளங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆயினும் நிலைமை மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாளை இரவுதான் இந்தப் பதிவை வலையேற்றியிருக்க வேண்டும். ஆயினும் பலருடைய கருத்துக்களை அறிவதற்காக முன்னதாகவே இதனை வலையேற்றுகிறேன். நாளைக்குள் பகிர்ந்து கொள்ள இன்னும் பல கருத்துக்கள் தலைக்குள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கும் வாய்ப்பிலும் நிச்சயமாக ஜெயேந்திரர் பற்றியெல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணடித்து விடமாட்டேன்.
| (8) விரிவான மறுமொழி

புதிர்கள் சில: 

1.அதை வாங்கியதும் வெளிப்புறத்தை துாக்கி எறிந்து விட்டு உட்புறத்தை சமைக்கிறோம். சமைத்த பிறகோ வெளிப்புறத்தைச் சாப்பிட்டு விட்டு உட்புறத்தைத் துாக்கி எறிகிறோம். அது என்ன?

2.வாங்கும் போதோ அது கருப்பு வண்ணத்தில் இருக்கிறது. பயன்படுத்தும் போதோ சிவப்பாகிறது. பயன்படுத்திய பிறகு துாக்கி எறியும் போதோ வெண்மையாய் இருக்கிறது. அது என்ன?

3.அதன் பெயர் சொன்னாலே உடைந்து காணாமல் போகும் மென்மையான அது என்ன?

4.சென்னையில் உள்ள மருத்துவரின் தம்பி கோவையில் வழக்குரைஞராக இருக்கிறார். கோவையில் உள்ள அந்த வழக்குரைஞரின் அண்ணன் சென்னையில் மருத்துவராக இல்லை. இது எப்படி முடியும்?

5.அது ஓடும் ஆனால் நடக்காது. தலை இருக்கும் அழாது படுக்கை இருக்கும் துாங்காது. எது?

6.எல்லாவற்றுக்கும் தொடக்கம் எது? முடிவு எது?

7.அந்த மின்சாரத் தொடர்வண்டி மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் தென்மேற்குத் திசையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போது காற்று வடகிழக்குத் திசையில் 70 கி.மீ. வேகத்தில் வீசுமானால், வெளிப்படும் புகை எந்தத் திசையில் செல்லும்?

8.மூன்று அடி ஆழம் ஆறு அடி விட்டத்தில் ஒரு பள்ளம் தோண்டுகிறீர்கள். அதில் எவ்வளவு மணல் இருக்கும்.

9.25லிருந்து 5ஐ எத்தனை முறை கழிக்கலாம்?

10.அந்தப் பெண்ணின் இரண்டு பையன்களும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் ஒரே மணிப் பொழுதில் பிறந்தவர்கள். ஆனால் அவர்கள் இரட்டையர் அல்ல. இது எப்படி சாத்தியம்?

11.1985ல அவனது வயது 15. 1990ல் அவன் வயது 10. இது எப்படி சாத்தியம்?

12.எப்போதுமே தவறாக உச்சரிக்கப் படும் சொல் எது?

13.மேலே செல்லும் கீழே வரும். பக்க வாட்டில் நகராது. எது?

14.கூடையிலே மூன்று பழங்கள். இரண்டை எடுத்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் எத்தனை இருக்கும்?

15.அது உங்களுக்குச் சொந்தமானது. ஆனால் அதைப் பிறர்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். பிறர் அதிகம் பயன்படுத்துவதில் தான் உங்களுக்கும் மகிழ்ச்சி. அது என்ன?


விடைகாண எனது பதிவுக்கு வாருங்கள் : சின்னப்பையன்
| (0) விரிவான மறுமொழி

கண்ணால் வெட்டப்பட்ட வாழைப்பழம். 

தேவை : வாழைப்பழம், ஊசி.

செய்முறை : ஒரு வாழைப்பழத்தை எடுத்து அதை ஊசியால் சரியாக நடுப்பக்கத்தை சுற்றி குத்த வேண்டும். (அல்லது நீண்ட ஊசி ஒன்றை எடுத்து பழத்தின் நடுப்பகுதியில் நுழைத்து அதன் பின்புறத்தை மெதுவாக அசைத்து பழத்தை வெட்ட வேண்டும்.) ஊசியை எடுத்த பிறகு பார்வையாளர்களை அழைத்து "நான் இப்பொழுது கண்களால் இந்த வாழைப்பழத்தை வெட்டப்போகிறேன்" என்று சொல்லி வாழைப்பழத்தோலை உரிக்க வேண்டும். உரிக்கும் பொழுதே பார்வையாளர்களிடம் 'என் கண்களைப் பாருங்கள் - இதோ கத்தி போல் கூர்மையாகிறது - பழத்தை வெட்டப்போகிறது' என்று கூறிக்கொண்டே வாழைப்பழத்தோலை உரிக்க வேண்டும் வாழைப்பழத்தோலை உரித்த உடன் வாழைப்பழம் கீழே விழும். இதைக் கண்ட பார்வையாளர்கள் வியப்படைவார்கள்.

.. சின்னப்பையன்
| (0) விரிவான மறுமொழி

12.11.04

எனக்குப் பிடித்த இலக்கியம்  

மரத்தடி சிறுகதைப் போட்டிகளுக்கு நடுவராய் இருந்த எஸ். ராமகிருஷ்ணன் நல்ல சிறுகதைகள் சிலவற்றைப் பரிந்துரைத்திருந்தார்.

தமிழில் அவர் பரிந்துரைத்த கதைகள் இணையத்தில் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தனின் நுால்கள் அனைத்தையும் தேடித்தேடி நான் வாங்கி வைத்திருந்ததால் 'தேவன் வருவாரா' என்ற கதை எளிதில் எனக்குக் கிடைத்தது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் சொல்வதைப் போல என்னை அது அவ்வளவாகக் கவரவில்லை. ஜெயகாந்தனின் 'யாருக்காக அழதான்'. 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' போன்ற நுால்களை நான் மிகுந்த ஆர்வத்துடன் பலமுறை படித்துள்ளேன்.

கார்க்கியின் 'வான்கா'வையும் செக்காவின் 'ஆறாவது வார்டை'யும் தேடி எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தேடினேன். வான்காவும் செக்காவால் எழுதப்பட்டதுதான் என்று தெரியவந்தது. குடன்பர்க் திட்டத்திலேயே அது கிடைத்து விட்டது. ஏழு... எட்டு பக்க அளவிலேயே இருந்த சிறுகதை. பத்து வயதிலேயே உழைத்துப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த சிறுவனின் துயரங்களை அவன் வாய்மொழியாகவே சொல்வதாக எழுதியிருந்தார். நெஞ்சை நெகிழச் செய்தது.

ஆனால் ஆறாவது வார்டு கிடைப்பது சற்று எளிதாக இல்லை. வார்டு எண் ஆறு என்று எண்ணிலும் எழுத்திலும் தேடியதில் ஒரு வழியாக நாளந்தா பல்கலைக்கழகத் தளத்தில் கிடைத்தது. அங்கே செக்காவின் கதைகள் அனைத்தையும் நான்கு தொகுதிகளாக (பிடிஎப்) வைத்திருந்தார்கள். நான்காவது தொகுதி மட்டுமே 5 MB க்கு மேல் இருந்தது. வலையிறக்கிப் பார்த்த போது சுமார் 2855 பக்கங்கள் இருந்தன. நான்காவது தொகுதியில் இருந்த ஆறாவது வார்டு சிறுகதை(?) மட்டும் 130 பக்கங்கள் உள்ளது. மனநோயாளிகளான ஐந்து மனிதர்களைப் பற்றிய கதை. அடுத்த சில நாட்களுக்குள் படித்து விடுவேன் என நினைக்கிறேன்.

நான் சிறுவனாய் இருந்த நாளிலிருந்து ஆண்டு தோறும் சோவியத் புத்தகக் கண்காட்சியைக் கண்டு வந்திருக்கிறேன். எங்கள் ஊரில் முன்பெல்லாம் டிசம்பர் மாதந்தோறும் தவறாமல் நடைபெறும் புத்தகக் கண்காட்சி அது மட்டும் தான். அப்போதெல்லாம் எவரும் வாங்கக் கூடிய மலிவு விலையில் சோவியத் நாட்டின் நுால்கள் மட்டுமே கிடைத்தன. குறும்பன், ஜமீலா, மண்கட்டியைக் காற்றடித்துப் போகாது போன்ற பல நுால்களை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது என்று தோன்றுகிறது.

சுவாமியும் நண்பர்களும், தாம் சாயர் போன்ற சிறுவர்களின் குறும்புக் கதைகளைப் படிப்பதற்கு முன்பே ருசியச் சிறுவன் ஒருவனின் குறும்பைப் (குறும்பனில்) படித்துச் சிரித்திருக்கிறேன்.

தன் மண்ணோடும் மக்களோடும் இறுகப் பிணைக்கப் பட்ட முதியவரான உமர்தாதா என்பவரின் வாழ்வைப் பற்றிய சித்தரிப்பு, 'மண்கட்டியைக் காற்றடித்துப் போகாது' என்ற நாவலில் உள்ளத்தைத் தொடும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தகைய முதியவர்களை நம் கிராமங்களிலும் கண்டு வந்திருக்கிறேன்.

நான் வளர்ந்த கிராமத்தில் சேதய்யா என்ற முதியவர் வாழ்ந்தார். மிகுந்த வறுமையிலும் கூட ஊர் நன்மைக்காக அவர் எடுத்துக் கொண்ட செயல்கள்,.. பொதுக் கூட்டங்களில் நியாயத்துக்காக அவர் முன் வைத்த வாதங்கள்,.. பொது நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிட்டுச் செயலாற்றிய தன்மை.. ஒவ்வொருவர் வாழ்விலும் துயர நாட்களில் முதல்வராக வந்து ஆறுதல் கூறிக் கூடவே இருந்து கடைசியாகச் செல்லும் அவர் பாங்கு இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவரைப் போல நம்மைச் சுற்றி எத்தனையோ உமர்தாதாக்கள்!

ஜமீலா ஒரு அழகிய காதல்கதை. அதிலும் நாட்டுப்பற்றை முன்னிறுத்திப் போரில் காயம்பட்ட தானியார் என்ற வீரனுக்கும் ஜமீலாவுக்கும் காதல் ஏற்படும் விதத்தை ஒரு காவியமாகவே வடித்திருப்பார் கதாசிரியர்.

தமிழில் எழுதப் பட்ட நாவல்கள் சிறுகதைகள் என்று பேசத் தொடங்கும் போதெல்லாம் எனக்கு நா.பா. தான் நினைவுக்கு வருகிறார். சிறுவனாய் இருந்த காலத்தில் கல்கியில் வெளியிடப்பட்டு வாராவாரம் வந்த கதையைத் தொகுத்து வைத்த நிலையில் நான் படித்த “குறிஞ்சி மலர்” இப்போது நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கிறது.

தமிழ்நாட்டில் எத்தனையோ குடும்பங்களில் அரவிந்தன் âரணி என்று இந்தத் தொடர்கதை வெளியான பிறகு குழந்தைகளுக்குப் பெயர் வைத்தார்கள்.

ஒவ்வொரு வாரமும் ஒரு அழகிய கவிதையுடனோ சிந்தனைக்கு ஏற்ற பழம் பாடல் ஒன்றுடனோ எழுதத் தொடங்குவார். அப்படி எழுதப்பட்ட இந்தக் கவிதை என் நினைவில் என்றும் நிழலாடும்:

நிலவைப் பிடித்துச் - சில
கறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதித்த முகம்.

நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி.

தரளம் மிடைந்து - ஒளி
தவழக் குடைந்து - இரு
பவழம் பதித்த இதழ்.

முகிலைப் பிடித்துச் - சிறு
தெளிவைக் கடைந்து - இரு
செவியில் திரிந்த குழல்.

அமுதம் கடைந்து - சுவை
அளவில் கடந்து - மதன்
நுகரப் படைத்த எழில்

இன்றைய இலக்கியவாதிகள் இவரையெல்லாம் எழுத்தாளர் என்று கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அன்று ஒரு சாதாரண வாசகனுக்கு நா.பா.வும் ஜெயகாந்தனும் தான் மிகப்பெரிய அளவில் படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.
| (0) விரிவான மறுமொழி

மருத்துவரிடம் செல்லலாமா.. வேண்டாமா? 

காலை எழுந்ததும் எங்காவது வலி இருப்பது தெரிகிறது. முதுகில் மூட்டில் கழுத்தில் அல்லது கைகளில். என்ன செய்வது? உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறலாமா இல்லை சற்று பொறுத்திருந்து பார்த்துக் கொள்ளலாமா?

இதற்கெல்லாம் என் நண்பர் அனந்தசயனன் சொன்ன வழியைத்தான் பல ஆண்டுகளாக நான் பின்பற்றி வருகிறேன்.

அழுத்தம் கொடுக்கும் போது (அசைக்கும் போது, திருப்பும் போது) மட்டும் வலி இருந்தால் கவலை இல்லை. விட்டு விடுங்கள். வலி தானாக சரியாகிவிடும்.

ஒன்றும் செய்யாமல் இருக்கும் போதே வலித்தால். சற்று கவனிக்க வேண்டும். சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம் கொடுக்கலாம். ஏதாவது வலி நீக்கும் மருந்துகளைப் âசலாம். வலி பொறுக்க முடியாமல் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.

நாற்பதை நெருங்கும் பலரும் கண் பார்வைக் கோளாறில் தொடங்கி இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு என்ற பல நோய்களுக்கு ஆளாகி, மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவதையும் உணவை விட அதிகமாக மருந்து மாத்திரைகளை உட்கொள்வதையும் அன்றாடம் காண்கிறோம்.

உடற்பயிற்சி இன்மைதான் இதற்கான ஒரே காரணம். பல் தேய்ப்பதும் குளிப்பதும் உடை உடுத்துவதும் உண்பதும் போல உடற்பயிற்சியும் நம் அன்றாடக் கடமைகளுள் ஒன்றாக வேண்டும். இதில் ஆண் பெண் வேறுபாடுகள் ஏதுமில்லை.

சோம்பேறியாக இருந்து கொண்டு, நேரமின்மை என்று காரணம் காட்டி, உடற்பயிற்சி செய்யாமல் தப்பித்து விடுபவர்கள் தான் மிகுதி.

நோய் தொற்றிக் கொண்ட பிறகு தினமும் ஊசி போட்டுக்கொள்ளவும் மாத்திரைகள் என்ற நச்சுப் பொருட்களை உண்பதற்கும் யாரும் மறுப்பு சொல்வதில்லை என்பதுதான் வேடிக்கை.

நல்ல குரு ஒருவரிடம் முறைப்படி எளிய யோகாசனங்களைக் கற்றுக் கொள்ளலாம். குறைந்தது சூரிய வழிபாடு என்ற யோகாசனப் பயிற்சியையாவது கற்றுக் கொண்டு தினமும் செய்யலாம். அதுவும் முடியாதவர்கள் பள்ளியில் கற்றுக் கொண்ட உடற்பயிற்சிகளை நினைவு கூர்ந்து செய்யலாம்.

உடலின் அத்தனை உறுப்புக்களையும் ஈடுபடுத்தும் வகையில் உடற்பயிற்சி அமைய வேண்டும்.

காலாற நடப்பதை மட்டும் செய்தால் அது பொழுது போக்கு. உடற்பயிற்சியா என்று தெரியவில்லை.

தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டியதே இல்லை.
| (7) விரிவான மறுமொழி

11.11.04

வலைப்பதிவின் சில பயன்கள் 

"பதினைந்து நிமிடப் புகழுக்காக" நாமெல்லாம் வலைப்பதிவு செய்வதாகப் பிரபலமான ஒருவர் எழுதிய வரிகளைக் கண்டு வலையுலகில் பலரும் கொதித்தெழுந்ததை நாம் கண்டோம். "பிறரது பொருளற்ற கருத்துக்களைப் புறக்கணிப்பது தான் சரி" என்ற நிலையை நான் உட்படப் பல வலைப்பதிவாளர்களும் மேற்கொண்டோம். இந்த வலைப்பதிவுகளால் ஏதாவது பயன் உள்ளதா என்று இப்போது ஓய்வாக நினைத்துப் பார்க்கிறேன்..

நமது பிறப்பும் வளர்ப்பும் வாழும் சூழலும் பெற்றோர் ஆசிரியர் நண்பர்களின் தாக்கமும் நமது இளமைப் பருவம் வரை நமது சிந்தனைகளுக்குக் காரணமாக அமைந்தாலும் வளர்ந்த ஒரு மனிதனாக நமது வாழ்நாள் முழுவதும் ஊடகங்கள் தான் நமக்குள்ளே கருத்துக்களை உருவாக்குகின்றன. நமது எண்ணங்களை வடிவமைக்கின்றன.

ஆனால் அச்சு ஊடகங்கள் (இன்றைய நிலையில் தொலைக்காட்சியும்) சில தனிமனிதர்களின்.. சில பணம் படைத்த முதலாளிகளின் ..கைப்பாவைகள் என்றும் அவை தமது சுயநல நோக்கிற்காக நம்மைக் காலங்காலமாகத் தவறான திசையிலேயே அழைத்துச் செல்கின்றன என்பதும்..தான் வலைப்பதிவுகளின் தாக்கத்தால் எனக்குத் தோன்றுவது.

இதற்குச் சான்றாகப் பெரியாரைப் பற்றி நான் கொண்டிருந்த கருத்துக்கள். சைவமும் தமிழும் இருகண்ணெனக் கருதும் குடும்பத்தில் பிறந்தவன் நான். தமிழனைக் காட்டுமிராண்டி என்று சொல்லிய ஒருவர் ஆன்மீகத்திற்கு எதிராகவும் இருந்தார் என்று தெரியவந்தால். அவரைப் பற்றியும் அவரது கருத்துக்கள் பற்றியும் அறிந்து கொள்ள என்ன ஆர்வம் இருக்கும்? அவரைப் பற்றிய தவறான புரிதல் தான் மீண்டும் மீண்டும் பல வகைகளில் இந்த ஊடகங்கள் வாயிலாக நான் அறிய வந்தது.

அவர் வெள்ளையனை இந்த நாட்டை விட்டுப் போய்விடாதே என்று கெஞ்சியதாகவும் மிகுந்த கஞ்சத்தனத்தோடு பணம் சேர்ப்பதே குறிக்கோளாய் வாழந்ததாகவும் இந்த ஊடகங்கள் எனக்குள் ஒரு கருத்தை உருவாக்கி வைத்திருந்தன.

வலைப்பதிவுகளில் தங்கமணி போன்றவர்களின் பதிவுகளைப் படிக்கும் போது இதன் மறுபக்கம் தெரிய வருகிறது. இன்னும் நிறையப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஓசோவின் மீது இந்த ஊடகவியலாளர்கள் எத்தகைய சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்கள் என்று நாம் அறிவோம். இன்று ஓசோவின் நுால்கள் எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் கடைகள் தோறும் விற்கப்படும் போது அவரது கூற்றுக்கள் எவ்வளவு உண்மையானவை என்றும் மறுக்க முடியாதவை என்றும் தெரிய வருகிறது. நம்மீது திணிக்கப் பட்ட பொய்மைகளை உடைக்க அவர் எவ்வளவு போராடி இருக்கிறார்.

ஒரு சாதாரண மனிதனை வாழ்வின் உண்மைகள் சென்றடைய இன்று வலைப்பதிவுகள் மிகுந்த பயனுடையதாக இருக்கின்றன. இவற்றின் தாக்கம் இன்னும் பரவ வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனின் சரியான சிந்தனையும் பிறர் யாவரையும் அடைய வேண்டும்.

வலைப்பதிவுகள் சுயநலமற்று உருவாக்கப்படுகின்றன. அவற்றில் எழுதுவதால் நமது சமுதாயக் கடமையைச் செய்தோம் என்ற நிறைவு கிடைக்கிறது. பணத்தின் பின்னாலும் புகழின் பின்னாலும் ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு இது புரியாது.

வலையுலகில் உலா வந்ததன் பயனாக நான் படித்த, எனக்குப் பிடித்த சில பதிவுகளைப் பற்றிக் கூற விரும்புகிறேன்:

ஒரு தந்தையின் பாசத்தை இவரை விட நெகிழ்ச்சியாக யாரும் சொல்லிவிட முடியாது. குழந்தைகளைப் பற்றி இவர் பேசும் போதெல்லாம் அதைப் படிக்கும் நாமே உருகிப் போகிறோம். செல்வராஜின் பயணக்கதை

காலங்காலமாகத் தாளிகைகளும் நாளிதழ்களும் நமக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மூடக்கருத்துக்களைத் தப்பெண்ணங்களைக் களைவதற்கு தங்கமணி போன்றவர்களின் எழுத்துக்களை நிறையப் படிக்க வேண்டும். இவரது ஆழமான கருத்துகள் அடங்கிய ஒவ்வொரு கட்டுரையையும் பலமுறை படித்து உள்வாங்கிக் கொள்ள முயல்கிறேன். இவரது பதிவிலிருந்து:
வாழ்வின் முகம் - பாரதி-1
"சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை
தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினிலே - நான்
வேடிக்கையுறக் கண்டு நகைப்பதற்கே
கோத்த பொய் வேதங்களும் - மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய்நடையும் - இள
மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் "

அமெரிக்க நாட்டில் மரங்கள் நிறம் மாறினாலும் சரி, ஆப்பிள் தோட்டங்களுக்கோ திருவிழாக்களுக்கோ சென்று வந்தாலும் சரி, அல்லது பிரபஞ்சன் போன்ற பிரபலங்கள் அங்கே வருகை தந்தாலும் சரி அவற்றையெல்லாம் அழகிய தமிழில் எளிய நடையில் சுவைபடத் தருகிறார் சுந்தரவடிவேல். அருந்ததி ராயின் பேச்சை இவர் மொழி பெயர்த்து வழங்கியிருந்ததை பல முறை படித்துவிட்டேன்.

எளிமையான நடை பற்றி அழகான கருத்துக்களை சிவகுமார் சொல்கிறார். அது எப்படி பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை போல எதைப் பற்றி எழுதினாலும் பக்கம் பக்கமாக இவரால் எழுத முடிகிறது என்பது என் வியப்பு. சமையலும் எழுத்தும்

வலைப்பதிவுகளில் நகைச்சுவைக்குப் பஞ்சமா என்ன? இட்லி வடை, குசும்பன் தளங்களில் படித்துச் சுவைக்க நிறையவே உள்ளன நான் வயிறுவலிக்கச் சிரித்த ஒரு துணுக்கு: கணினி.

இவையெல்லாம் சில சான்றுகள் தான். இத்தகைய பல பதிவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டும்....
| (1) விரிவான மறுமொழி

10.11.04

தீபாவளி குறித்த வலைப்பதிவுகள் சில  

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த இனிய நன்னாளில் நம் அறியாமை இருள் அகன்று அறிவொளி பிறக்கட்டும்!

தீபாவளியின் வரலாறு அதன் சிறப்புக்கள் பற்றி சந்திரலேகா மிக விரிவாக எழுதியுள்ளார். இவ்வளவு விபரங்கள் உங்களுக்கு எங்கே கிடைத்தது சந்திரலேகா?

அகரதுாரிகையில் அருண் ஒரு நடுத்தரவர்க்க தீபாவளி பற்றி அழகாக எழுதியுள்ளார். பழைய நினைவுகளை எப்போது நினைத்துப் பார்த்தாலும் அலுப்பதேயில்லை!


ஃபிஜியில் தீபாவளி கொண்டாட்டங்கள் பற்றி துளசி கூறியிருக்கிறார். ஃபிஜி இந்தியாவிற்கு வெளியே ஒரு இந்தியா போலவே இருக்கிறதாம்.


இதுவரை தீபாவளி குறித்து எழுதப்பட்ட சில பதிவுகளைப் பார்த்தோம். நாளைக்குள் இன்னும் பல பதிவுகள் எழுதப் படக்கூடும். வரவேற்போம்.
| (0) விரிவான மறுமொழி

தீபாவளிப் பலகாரம் 

தீபாவளிக்கு மட்டுமல்ல எங்கள் வீடுகளில் நடைபெறும் எல்லாச் சிறப்பு நிகழ்ச்சிகளிலும் இடம் பெறும் பலகாரம் "வெள்ளைப் பணியாரம்". இதன் செய்முறையை இன்று என் மனைவியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு எழுதுகிறேன்.

200 மி.லி. அளவு பச்சரிசி 25 மி.லி. அளவு உளுத்தம் பருப்பு இரண்டையும் சுமார் 1 மணி நேரம் நீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். (Mixie, Grinder எதுவானாலும் பரவாயில்லை) மாவில் நிறைய நீர் ஊற்றித் தோசைக்குக் கரைப்பது போல் கரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். புளிக்க வைக்க வேண்டியதில்லை. அரைத்த உடனேயே வெள்ளைப் பணியாரம் சுடலாம்.

வாணலியில் எண்ணையைச் சூடாக்கி, தட்டையான (குழிவற்ற) கரண்டி ஒன்றில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்ற வேண்டும். மாவை மெதுவாக. சீராக ஊற்ற வேண்டும். ஊற்றும் போதே அழகிய விளிம்புடன் கூடிய பணியாரம் உருவாகிவிடும்.. ஒருமுறை திருப்பி விட்டு, வெந்ததும் எடுத்து மிளகாய்த் துவையலுடன் சூடாகச் சாப்பிடலாம்.

ஒவ்வொன்றாகத் தான் இதனைச் செய்ய முடியும். அடுப்பும் மிதமாகத்தான் எரிய வேண்டும். ஒவ்வொரு பணியாரத்துக்கும் மாவை நன்கு கலக்கிய பிறகு தான் கரண்டியில் எடுக்க வேண்டும். மிகவும் வெந்து முறுக்குப் போல ஆகி விடக் கூடாது. தண்ணீர் கூடிப் போனால் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம். விரும்பினால் சிறிது பாலும் மிகச்சிறிதளவு சீனியும் சேர்த்துக் கொள்ளலாம்.

அழகிய விளிம்புடன் வெள்ளைப் பணியாரம் செய்வதுதான் இதிலுள்ள சிறப்பு. இதைக் “கரை கூடி வருதல்” என்பார்கள். இதற்காக வேண்டுதல்கள் பல செய்வதும், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பதாக நேர்ந்து கொள்வதும் உண்டு.

ஒரு பணியாரத்துக்கு என்ன இவ்வளவு சிறப்பு என்கிறீர்களா. ஒரு முறை அதனைச் சாப்பிட்டுப் பாருங்கள். பிறகு இந்தக் கேள்வியே எழாது.
| (1) விரிவான மறுமொழி

நினைவாற்றல் வளர்ந்திட....1 

ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. பேசுபவர் உங்கள் உறவினர். தமது புதிய தொலைபேசி எண்ணை அவர் உங்களுக்குத் தெரிவிக்கிறார். உடனடியாகத் தாள், எழுதுகோல் எதுவும் கையில் கிடைக்காதால் அவர் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லச் சொல்ல நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள். பேசி முடித்ததும் எண்ணைத் தாளில் வடிப்பதற்குள் அடுத்தடுத்த பணிகள் உங்களை ஆக்கிரமிக்கின்றன. எல்லா வேலைகளையும் முடித்து எண்ணை எழுத ஆரம்பிக்கும் போது அது மறந்து போகிறது.

மறக்காமலே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏன் இந்த மறதி என்று நம் மீதே கோபம் வருகிறது. ஆனால் மறதி என்பது நமக்குக் கிடைத்த நல்ல வரம் என்று சற்று சிந்தித்தால் புரியும். நேற்று சாப்பிட்ட உணவு அதற்கு முந்தைய நாள் உடுத்திய உடை என்றெல்லாம் மறக்காமல் நினைவில் வைத்திருந்து ஆகப் போவதென்ன. பயனற்றவை நமது நினைவில் இருந்து நீக்கப் படத்தான் வேண்டும். பயனுள்ளவை தொடர்ந்து நிலைத்திருக்கவும் வேண்டும்.

பயனுள்ளவை தொடர்ந்து நினைவில் இருக்க நாம் சில எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதற்காகத் தான் இந்தத் தொடர்.

நினைவாற்றலைத் தற்காலிக நினைவாற்றல் என்றும் நிரந்தர நினைவாற்றல் என்றும் இரண்டு வகைப் படுத்துகிறார்கள். தொலைபேசி எண், மளிகைக் கடையில் வாங்க வேண்டிய பொருட்கள் இவையெல்லாம் சிறிது நேரம் மட்டும் (குறித்த வேலை முடியும் வரை) நம் நினைவில் இருப்பதால் தற்காலிகமானவை. வாழ்வில் நடந்த நல்ல அல்லது துயர நிகழ்வுகள் நாம் பெற்ற பாராட்டு அல்லது வசை... நிரந்தரமானது.

ஒரு மனிதனால் ஒரு நேரத்தில் 5 முதல் 9 எண் வரை அவனது தற்காலிக நினைவில் வைத்திருக்கலாம். இதைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு சிறிய வேடிக்கை விளையாட்டு விளையாடலாம்.

இருவர் விளையாடும் எண் விளையாட்டு இது. உங்களோடு நண்பர் .. வாழ்க்கைத் துணைவர் .. போன்ற யாரையாவது உடன் அழைத்துக் கொள்ளுங்கள். இருவரிடமும் ஒவ்வொரு தாளும் எழுதுகோலும் தேவை. விளையாட ஆரம்பிக்கலாமா?

முதலில் உங்கள் தாளில் 4 இலக்க எண் ஒன்றை எழுதிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக 7382.

இதை எழுதிய பிறகு நண்பரிடம் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லுங்கள்

7 .. 3 .. 8 .. 2

நீங்கள் சொல்லி முடித்த பிறகு நண்பர் இந்த எண்ணைத் தம் தாளில் எழுத வேண்டும். சரியாக எழுதியிருக்கிறாரா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நான்கு இலக்க எண்ணை அனைவரும் சரியாக எழுதி விடுவார்கள்.

பிறகு உங்கள் தாளில் 5 இலக்க எண் ஒன்றை எழுதிக் கொள்ளுங்கள்.

(உ..ம்) 94361

முன்பு போல நண்பரிடம் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லுங்கள் சொல்லி முடித்த பிறகு அவர் எழுத ஆரம்பிக்கட்டும்.

இப்படியே 6, 7, 8, 9 இலக்கங்களுடைய எண்களைக் கொண்டு விளையாட்டைத் தொடருங்கள். ஏதாவது ஒரு நிலையில் அவர் நினைவு படுத்த முடியாமல் தடுமாறக் காணலாம். பலரும் 8, 9 இலக்கங்களை நினைவு கூற முடிவதில்லை. 9 இலக்கங்களைத் தாண்டி 10 அல்லது 11 இலக்கம் வரை நினைவில் கொள்வாரானால் அவருக்குப் பெரிதாகப் பாராட்டு விழா நடத்தலாம்.

இப்போது அவரிடம் சவால் விடுங்கள்.. உங்களால் 16, 24, 32 இலக்கங்களுடைய எண்ணைக் கூடத் தவறின்றி நினைவில் இருந்து சொல்ல முடியும் என்று.

அவரை 16 இலக்க எண் ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு படிக்கச் சொல்லுங்கள். அவர் படிக்கும் போது எண்களை ஒவ்வொன்றாக இல்லாமல் இரட்டை இலக்க எண்ணாக மனதில் வாங்கிக் கொள்ளுங்கள். சான்றாக அவர் 3 .. 7 .. 9 .. 1 .. 2 .. 5 .. 6 .. 8 .. என்று படிக்கும் போது மனதில் 37 .. 91 .. 25 .. 68 என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்களால் 16 இலக்கங்களையும் தவறின்றி எழுத முடியும்.

அல்லது 379... 125 ... என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்களால் 24 இலக்கங்களையும் தவறின்றி எழுத முடியும்.

இதில் உள்ள மறைபொருள் (இரகசியம்) இதுதான்: தற்காலிக நினைவாற்றலுக்கு 8 இடங்கள் தான் காலியாக உள்ளன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் 8ன் மடங்காகிய எத்தனை இலக்கங்களை வேண்டுமானாலும் பொதிந்து வைக்கலாம். நீங்கள் நினைவில் வைப்பது இரட்டைப் படை எண்ணா மூன்றிலக்க எண்ணா என்பது பொருட்டில்லை. நல்ல பயிற்சி இருந்தால் 40 இலக்கங்களைக் கூட நினைவு படுத்தலாம். (கணித மேதைகள் வேறு என்ன செய்கிறார்கள்.? இதுதான் அவர்களது தந்திரம்)

இப்போது தொலைபேசி அழைப்புக்கு வருவோம். உங்கள் உறவினர். தமது புதிய தொலைபேசி எண்ணை உங்களுக்குத் தெரிவிக்கிறார். உடனடியாகத் தாள், எழுதுகோல் எதுவும் கையில் கிடைக்காதால் அவர் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லச் சொல்ல மூன்றிலக்க எண்ணாக நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள். பேசி முடித்ததும் எண்ணைத் தாளில் வடிப்பதற்குள் அடுத்தடுத்த பணிகள் உங்களை ஆக்கிரமிக்கின்றன. எல்லா வேலைகளையும் முடித்த பிறகும் எண் பாதுகாப்பாக நினைவில் இருக்கிறது. சரிதானா?
| (0) விரிவான மறுமொழி

எங்களுக்கும் சிரிப்பு வரும் 

ஒளியியல் ஆய்வுக் கூட நுழைவாயிலில் இப்படி எழுதப்பட்டிருந்ததாம்:
"உங்களிடம் எஞ்சியுள்ள நல்ல கண்ணால் லேசர் ஒளிக்கற்றையை நேரடியாகப் பார்த்துவிடாதீர்கள்".

*****************************************************************

நத்தை ஒன்று தெருவைக் கடக்கும் போது ஆமை ஒன்று அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டு விட்டது. அதன் பிறகு மருத்துவ மனையில் நினைவு திரும்பிய போது "என்ன நடந்தது" என்று நத்தையைக் கேட்டதற்கு "என்னால் எதையுமே நினைவு படுத்திச் சொல்ல முடியவில்லை.. மிக மிக வேகமாக நடந்த விபத்து அது" என்றதாம்..

*****************************************************************

இவான் இவானோவிச் என்ற ருசிய அறிவியலறிஞர், "வெப்பமானி எவ்வளவு விரைவாகக் கீழே விழுகிறது" என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். வெப்பமானி ஒன்றையும் மெழுகுவர்த்தி ஒன்றையும் எடுத்துக் கொண்டு தமது ஆய்வுக்கூடத்தின் மூன்றாவது மாடிக்குச் சென்றார். மெழுகுவர்த்தியை ஒளியேற்றி, அதையும் வெப்பமானியையும் ஒரே நேரத்தில் கீழே போட்டார். இரண்டும் ஒரே நேரத்தில் தரையை அடைவதை உறுதி செய்து கொண்டார். "வெப்பமானி ஒளியின் வேகத்தில் கீழே விழுகிறது" என்று தமது அறிவியல் நுாலில் எழுதினார்.

*****************************************************************

மூலக்கூறுகளைப் பிளந்தால் அணுக்கள் கிடைக்கின்றன. அணுக்களைப் பிளந்தால்.. நேர் எதிர் மின்னுாட்டமுள்ள பகுதிப் பொருட்கள் மட்டும் தானே கிடைக்க வேண்டும். ஆனால் பயங்கரமான ஆற்றல் வெளியாகிறது. என்ன கோமாளித் தனமான அறிவியல்?

*****************************************************************

சி.வி.ராமன் தனது வாழ்வின் பிற்பகுதியில் வைரங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவற்றைப் பற்றிப் பல விதமான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாராம். அப்போது ஒரு கல்லுாரியில் அவரை வைரங்கள் தொடர்பாகப் பேச அழைத்திருக்கிறார்கள். அவர் பேசி முடித்ததும் ஒரு மாணவர் எழுந்து "இத்தகைய அற்புதமான வைரங்களை நம்மால் உருவாக்க முடியுமா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராமன், "வைரங்களை உருவாக்குவது மிக மிக சுலபம். கொஞ்சம் நிலக்கரியை எடுத்துக் கொள்ளுங்கள் சற்று கனமான பாறைகள் உள்ள இடமாகப் பார்த்துத் தரையை ஆயிரம் அடி தோண்டுங்கள். நிலக்கரியைப் பத்திரமாக அங்கே வைத்துவிட்டு மண்ணை மூடி ஒரு ஆயிரம் ஆண்டுகள் காத்திருங்கள்.. வைரம் தயார்" என்றாராம்.

*****************************************************************

| (0) விரிவான மறுமொழி

9.11.04

விக்கலை நிறுத்துவது எப்படி? 

பலருக்கும் தண்ணீர் குடித்தால் விக்கல் நின்று விடும். அப்படி நிற்கவில்லை என்றால் சற்று போராடத்தான் வேண்டும்.

சிறிது சர்க்கரையை (சீனி.. நாட்டுச் சர்க்கரையில்லை) வாயில் போட்டுக் கொண்டு அது கரையும் முன் சிறிது தண்ணீருடன் விழுங்கி விடுங்கள். விக்கல் உடனே நிற்கக் கூடும்.

நிற்காத விக்கலை நிறுத்த உங்களுக்கு வேண்டியவர்கள் சில முயற்சிகள் செய்து பார்க்கலாம் :

ஏதாவது அதிர்ச்சியான தகவலைச் சொல்லலாம்..

திடீரென முதுகில் தட்டலாம்.

நீங்கள் எதிர்பாராத (?) ஒன்றைச் செய்யலாம்.

சிறுவர்களானால் "அந்தக் காணாமல் போன பொருளை நீதானே திருடினாய்" என்பது போலக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.

விக்கல் உடனே நின்று விடும்.

அப்படியும் நிற்காத விக்கலுக்கு நீங்கள் இன்னும் சற்று தீவிர முயற்சி செய்ய வேண்டும்.

உங்கள் மூக்கையும் வாயையும் நீங்களே அழுத்தி மூடிக் கொண்டு சற்று நேரம் (குறைந்தது ஒரு நிமிடம்) மூச்சை நிறுத்திப் பார்க்கலாம்.. அல்லது நாக்கை முடிந்த வரை வெளியே நீட்டி விரல்களால் பற்றி இழுத்துக் கொள்ளலாம்.

ஒரு பெரிய கோப்பை நிறையத் தண்ணீரை எடுத்துக் கொண்டு மெதுவாக ஆனால் மூச்சு விடாமல் அதனைக் குடிக்கலாம்.

எலுமிச்சை ஒன்றை உரித்துக் கொண்டு அதைப் பாதியாக வெட்டி அதில் சீனியைத் துாவிச் சாப்பிடலாம்.

நல்ல புளிப்பான ஊறுகாய் எதையாவது சிறிது சாப்பிடலாம்..

விக்கல் நின்று விட்டதா? இல்லையா? இல்லையென்றால் இந்தத் தளங்களுக்குச் சென்று இன்னும் விரிவான விளக்கங்களைப் பெறுங்கள்:http://www.kidzworld.com/site/p452.htm


http://www.netlaputa.ne.jp/~tokyo3/e/hiccup_e.html


http://www.robynsnest.com/comments-hiccups.htm


http://www.htby.org/archives/000313.html


http://vanderbiltowc.wellsource.com/dh/content.asp?ID=734
| (1) விரிவான மறுமொழி

தும்மலை நிறுத்துவது எப்படி 

திடீரென வரும் தும்மலை நிறுத்துவது எப்படி?

உங்கள் ஆட்காட்டி விரலால் நடுமூக்கிற்கு அடியில் மேல் உதட்டுக்கு மேலே அழுத்துங்கள். தும்மல் உடனே நின்று விடும்.

திடீரென தும்மலை வரச்செய்வது எப்படி?

இது பலருக்கும் நன்கு தெரிந்த தகவல்தான். கைக்குட்டையின் ஒரு முனையைக் கூராக்கி மூக்கில் நுழைத்துச் சுழற்றினால் உடனே தும்மல் வரும்.

இவ்வாறு தும்மலை வரச்செய்வதில் சில நன்மைகள் உள்ளன. மூக்கில் நீர் கோர்த்துக் கொண்டு அதனால் தலைவலி வருமானால் இவ்வாறு தும்மி நீரை வெளியேற்றியதும் தலைவலி சரியாகி விடும்.

ஆனால் இது கூடத் தொடக்க நிலையிலான தலைவலிக்கு ஏற்புடைய தீர்வாக இருக்கலாமே அன்றி முற்றிய நிலையில் தீவிர சிகிச்சை தேவைப்படலாம்.
| (0) விரிவான மறுமொழி

8.11.04

அழுத்த சமையற்கலன் குறித்த சில பார்வைகள் 

“எங்கள் வீட்டு அழுத்த சமையற்கலனுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு வளையம் (gasket) வாங்க வேண்டியிருக்கிறதே. இதற்குத் தீர்வே இல்லையா?' என்று ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவர் கேட்டார்.

“பதினாறு ஆண்டுகளாக ஒரே அழுத்த சமையற்கலனைத் தான் எங்கள் வீட்டில் பயன்படுத்துகிறோம். இந்தப் பதினாறு ஆண்டுகளில் ஒரே ஒரு முறை (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) வளையத்தை மாற்றினோம். அதுவும் பாத்திரம் கழுவும் போது அரிவாள்மனையில் சிக்கிப் பழைய வளையம் வெட்டுப் பட்டதால் தான்” என்று நான் சொன்ன போது அவர் என்னை வேடிக்கையான பிராணியைப் பார்ப்பது போலப் பார்த்தார். “இவர்களெல்லாம் சமைப்பதோ சாப்பிடுவதோ உண்டா” என்ற சிந்தனை அவருக்குள் ஓடிக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன்.

“இந்தப் பதினாறு ஆண்டுகளில் தினசரியும், ஒருநாளில் பலமுறையும் சோறு சமைப்பது மட்டுமின்றி காய்கறிகள், பருப்பு முதலிய பலவும் வேகவைப்பது அதில் தான்” என்று நான் சொன்ன போது அவரின் வியப்பு மேலும் கூடியது.

அதன் பிறகு நான் பொறுமையாக அவருக்கு இது எப்படி சாத்தியமாயிற்று என்று விளக்கினேன். அந்த விளக்கங்களைத் தான் இந்தப் பதிவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சமையற்கலம் இருக்கட்டும். பொதுவாக நாம் வாங்கும் எந்தப் பொருளுக்கும் வாங்குபவரின் நோக்கில் இரண்டு தகவல்கள் அவசியமானவை.

1.வாங்குவதற்கு ஆகும் செலவு
2.பயன்படுத்த ஆகும் செலவு.

இவ்விரண்டையும் சேர்த்து, “உடைமையாளருக்கு ஆகும் மொத்தச் செலவு” (TCO : Total Cost of Ownership) என்று சொல்வார்கள்.

(விற்பவரின் நோக்கில் பல கருத்துக்களையும் சிறப்பாக மீனாக்ஸ் எழுதிக் கொண்டிருக்கிறார். எனக்கு அது குறித்து ஏதும் தெரியாது. பயனாளரின் நோக்கில் மட்டும் நான் பேசுகிறேன்)

ஒரு அழுத்த சமையற்கலனை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி மூன்று மாதங்களுக்கு ஒரு வளையம் ரூ. ஐம்பது வீதம் பயன்படுத்த பத்து ஆண்டுகளுக்கு என்ன செலவாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்: 1000 + (40 x 50) = 3000. பத்து ஆண்டுகளில் சமையற்கலனை விட இரண்டு மடங்கு வளையங்களுக்காகச் செலவிடுகிறோம்.

வளையம் மாற்றத் தேவையற்ற மற்றொரு வகை சமையற்கலன் அதே ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் அல்லது சில நுாறு அதிகமிருக்கலாம். ஆனால் பயன்படுத்தும் போது பிற உபகரணங்கள், வளையம் போன்ற எதுவும் வாங்கத் தேவையில்லாததால் எவ்வளவு மிச்சமாகிறது!

பொருளாதாரத்தை விட்டுவிட்டு அறிவியலுக்கு வருவோம். ஏன் பல அழுத்த சமையற்கலங்களில் அடிக்கடி வளையம் மாற்ற வேண்டியிருக்கிறது?

இதற்குக் காரணம் பல அழுத்த சமையற்கலங்களில், சமையற்கலனின் மூடி வெளிப்புறமாக அமைவதும் அதனால் சமைக்கும் போது நீராவி நேரடியாக வளையத்தைத் தாக்குவதும் தான்.

மூடி வெளிப்புறமாக அமைந்து, பாத்திரம், மூடி இவற்றுக்கு இடையே வளையம் வருவதால் சமைக்கும் போது மொத்த நீராவியும் வெளியேறாமல் வளையம் மட்டுமே காக்கிறது. மொத்த வெப்பமும் வளையத்தைத் தாக்குகிறது. வளையம் விரைவில் விரிவடைந்து வீணாகிறது. பாரக்க படம் 1.
மூடி உட்புறமாக அமையும் அழுத்த சமையற்கலங்களில் மூடியின் உலோக விளிம்பே ஒட்டு மொத்த நீராவியும் வெளியேறாமல் தடுக்கிறது. கசியும் சிறிதளவு நீராவிதான் வளையத்தைத் தாக்குகிறது. மேலும் வளையம் எப்போதும் மூடிக்கும் பாத்திரத்திற்கும் இடையே மிகுந்த (எந்திரவியல்) அழுத்தத்திற்கும் உள்ளாவதால் அது விரிவடைவதில்லை. பல ஆண்டுகள் உழைக்கிறது. பாரக்க படம் 2.
இது மட்டுமில்லை சமையற்கலங்கள் கருப்பு வண்ணத்தில் இருப்பதும், வெப்பத்தை எளிதில் உட்கொண்டு விரைவில் சூடேற உதவும். எரிபொருள் செலவு குறையும்.

1988ல் ஒரு எங்கள் ஊரில் ஒரு பிரபலமான சமையற்கலங்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்று, மூடி உட்புறமாக அமையும், கருப்பு வண்ணத்திலான அழுத்த சமையற்கலன் ஏதாவது இருக்கிறதா என்று கேட்ட பொழுது சிப்பந்தி உதட்டைப் பிதுக்கி இல்லையென்று தலையாட்டி விட்டு “எதற்கும் முதலாளியைக் கேட்கிறேன். சற்று பொறுங்கள்” என்று கூறிச் சென்றார். சில நிமிடங்களில் தன் இருக்கையில் இருந்து ஓடிவந்த முதலாளி என்னை ஒரு சிறப்பு விருந்தினரைப் போலக் கவனித்தார். குளிர்பானம் வாங்கி வரச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் உள்ளறையிலிருந்து ஒரு சமையற்கலன் கொண்டு வரப்பட்டது.

நான் எதிர்பார்த்தபடியே அது இருந்ததால் பணத்தைக் கொடுத்து வரவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டேன். சமையற்கலன் உறையிடப்பட்டுக் கட்டப்படும் நேரத்தில் முதலாளியிடம் பேசியபோது அவரது சிறப்பான கவனத்திற்குக் காரணம் புரிந்து விட்டது. “நான் உங்களுக்குப் பழைய விலையில்தான் தருகிறேனாக்கும்” என்று பெருமை பேசிய அவர். “ஐந்தாறு ஆண்டுகளாக இதனை யாருமே கேட்காமலும் விற்க முடியாமலும்” வைத்திருப்பதான உண்மையையும் உடைத்து விட்டார். ஆயினும் நான் கவலைப் படவில்லை. வாங்கி வந்தேன். பதினாறு ஆண்டுகளில் என் நம்பிக்கை பொய்த்து விடவில்லை.

பி.கு. அறிவியல் தகவல் என்ற முறையில் எழுதுவதால் நான் சமையற்கலங்களின் நிறுவனங்கள் (Brand Name) பற்றி எழுதவில்லை.
| (2) விரிவான மறுமொழி

முட்டையை வேகவைப்பது எப்படி? 

முட்டையைத் தண்ணீரில் போட்டு அடுப்பில் வைக்க வேண்டும் : இவ்வளவு தானே என்கிறீர்களா?

சரி கேள்வியைச் சற்று மாற்றி விடுகிறேன்:
அறிவியல் முறையில் முட்டையை வேகவைப்பது எப்படி?

முட்டை.. அவியல் சரி.. அறிவியலா.?. ஒரே குழப்பமாய் இருக்கிறதா?

அறிவியல் முறையில் முட்டையை வேகவைப்பது எப்படி என்றுதான் சொல்லப் போகிறேன்.

சாதாரணமாக முட்டையை வேகவைப்பதில் உள்ள சிக்கல்களைப் பார்ப்போம்:

1.முட்டை வேகும் போது உடைந்து போகிறது..

2.வெந்த பிறகு ஓட்டை உடைத்துப் பார்த்தால் உட்பகுதியில் சரியான அழகிய முட்டை வடிவம் இல்லாமல் போகிறது.. தலையில் யாரோ அடித்து வைத்தது போலத் தலைப் பகுதி மட்டமாகி இருக்கிறது.

3.மஞ்சள் கரு மஞ்சளாக இல்லாமல் அதன் மேல் பகுதியில் பச்சை, கரும்பச்சை அல்லது கருநீலப் âச்சு காணப் படுகிறது.

இத்தகைய தன்மைகள் இல்லாமல் அழகிய வடிவில் - அறிவியல் முறையில் - முட்டையை வேகவைக்கலாம். வெந்தபின் ஓட்டை உடைத்துப் பார்த்தால் உட்பகுதி அழகிய முட்டை வடிவிலேயே இருக்கும். வெந்நிறப் பகுதியை பிளந்து பார்த்தால் உள்ளே மஞ்சள் கரு மஞ்சளாகவே இருக்கும்... அதன் மேல் பகுதியில் வேறு வண்ணப் âச்சுக்கள் எதுவும் இருக்காது.. எப்படி என்று பார்ப்போம்:

1.முட்டையைக் குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுத்து அப்படியே வெந்நீரில் போடக் கூடாது. ஓடும் நீரில் சிறிது நேரம் வைத்திருந்து அறை வெப்ப நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

2.முட்டைக்கு குறுகிய முனை ஒன்றும் அகன்ற முனை ஒன்றும் உள்ளது. அகன்ற முனை உள்ள பகுதியின் நடுவில் சிறிய குண்டூசியால் துளை ஒன்று போட வேண்டும்.

3.முட்டையைத் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டுப் பிறகு பாத்திரத்தை அடுப்பில் வைத்துக் கொதிக்கச் செய்ய வேண்டும்.

4.சுமார் 15 நிமிடங்கள் முட்டை வெந்ததும் வெந்நீரை வடித்து விட்டு ஓடும் தண்ணீரில் முட்டை ஆறும் வரை வைக்க வேண்டும்.

பிறகு உடைத்துப் பார்த்தால் அழகிய முட்டை - அறிவியல் முறையில் வேக வைக்கப் பட்ட - முட்டை தயார்.

எல்லாம் சரி இதில் என்ன அறிவியல் இருக்கிறது என்கிறீர்களா?

முட்டையைக் குளிர்பதனப் பெட்டியில் இருந்து எடுத்து அப்படியே வேகவைத்தாலோ அல்லது முதலில் தண்ணீரைக் கொதிக்கச் செய்து அதன் பிறகு முட்டையை அதில் போட்டாலோ முட்டை சீரற்றுச் சூடாவதால் அது உடனே உடைந்து அதன் பகுதிகள் அசிங்கமாக வெளியேறும்

எனவேதான் முட்டையை அறை வெப்ப நிலைக்குக் கொண்டு வந்து பிறகு தண்ணீரில் போட்டுச் சிறிது சிறிதாக, சீராக அதன் வெப்பநிலையைக் கூட்ட வேண்டும்.

முட்டை வேகும் போது அதிலிருந்து பல் வேறு வாயுக்கள் வெளியேறுகின்றன. வாயுக்கள் உருவாகும் வேகத்தில் வெளியேற முட்டையில் உள்ள நுண்துளைகள் போதுமானவையாய் இல்லை. எனவே இந்த வாயுக்கள் முட்டையின் அகன்ற தலைப்பகுதியில் தங்கி அதன் தலையை யாரோ தட்டி வைத்தது போல் தோற்றமளிக்கச் செய்கின்றன.

அந்த அகன்ற பகுதியில் ஒரு சிறிய குண்டூசி அளவு துளை ஏற்படுத்தினால் இந்த வாயுக்கள் வெளியேறி விடுகின்றன. முட்டையை அதன் வடிவில் எந்த மாற்றமும் அடையாமல் வேக வைக்க முடிகிறது.

வெந்த முட்டை குளிரும் போது எஞ்சியுள்ள வாயுக்கள் மஞ்சள் கருவின் மேல் படியும். அதனால் அது பச்சை, கரும்பச்சை போன்ற வண்ணங்களை அடைகிறது.

பொதுவாக வாயுக்கள் முட்டையின் மிகக் குளிர்ந்த பகுதியை நோக்கியே சென்று தங்கும். வேக வைத்த உடன் முட்டையை, ஓடும் தண்ணீரில் வைப்பதால் இந்த வாயுக்கள் மஞ்சள் கருவின் மேல் சென்று படியாமல் முட்டைக்கு வெளியே சென்று விடுகின்றன. மஞ்சள் கரு மஞ்சளாகவே இருக்கிறது.

என்ன சரிதானா? வேக வைத்துப் பார்த்து உங்கள் கருத்தைச் சொல்கிறீர்களா?
| (0) விரிவான மறுமொழி

முட்டை சைவமா அசைவமா? 

இது பலரும் அடிக்கடி கேட்கும் கேள்வி.

இதற்கு ஒரு வரியில் பதில் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம்: :
பண்ணைக் கோழி முட்டை சைவம்.. நாட்டுக் கோழி முட்டை அசைவம்

அல்லது இப்படியும் சொல்லலாம்: :
கருவுற்ற முட்டை அசைவம்.. கருவுறாத முட்டை சைவம்.

இவையெல்லாம் பதில்களாய் இருந்தாலும் தெளிவான பதில்களாய் இல்லை என்று தோன்றுகிறது. தெளிவான பதில் வேண்டுமானால் கொஞ்சம் உயிரியல் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். பரிமாண வளர்ச்சி.. ஓரறிவு உயிர் என்றெல்லாம் தொடங்கி உங்களுக்குப் பயம் காட்ட மாட்டேன். சுருக்கமாகவே பார்க்கலாம். பொதுவாக உயரின உயிர்களை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பன (பறவைகள்) என்றும் குட்டி போட்டுப் பால் கொடுப்பன (விலங்குகள்) என்றும் நமக்குத் தெரியும்..

குட்டி போட்டுப் பால் கொடுக்கும் விலங்கினத்தில், உரிய பருவ வயதை அடைந்ததும் பெண்பால் விலங்கின் உடலில், கரு முட்டைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இந்த முட்டைகள் சில நாட்கள் கருப்பையில் தங்கி இருக்கும். அந்தக் காலக் கட்டத்திற்குள் கருமுட்டைகள் ஆண் உயிரணுவால் கருவடையச் செய்யப்படுமானால், கருப்பையில் சிறிய உயிர் ஒன்று வளர ஆரம்பிக்கிறது. இல்லையென்றால் கருமுட்டை அழுகி வெளியேறுகிறது. புதிய கரு முட்டை தோன்றுகிறது. இந்தச் சுழற்சி ஒரு தொடர்கதையாகிறது. இதில் நாம் நமது வினாவைப் புரிந்து கொள்ள நமக்குத் தெரிய வேண்டியது இதுதான்: சரியான பருவம் அடைந்ததும் முட்டைகள் உருவாகின்றன. முட்டைகள் கருவுறத்தான் ஆண் உயிரணு தேவையே தவிர முட்டை உருவாக அவை தேவையில்லை.

இப்போது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைப் பார்ப்போம்: இவையும் உரிய பருவ வயதை அடைந்ததும் முட்டைகள் உருவாகின்றன. ஆனால் அந்த முட்டைகள் உருவாகும் போதே ஆண் உயிரணுவால் அவை கருவுறுமானால் பறவை முட்டையிட்ட பிறகு அந்த முட்டைக்குள்ளே ஒரு சிற்றுயிர், (பறவையின் உடலுக்கு வெளியே) வளரத் தொடங்குகிறது. அதன் வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் முன்னதாகவே தாய்ப் பறவையால் இந்த முட்டைக்குள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. பறவை உரிய வெப்பநிலையை மட்டும் அளித்து (அடைகாத்து) குஞ்சு பொரிக்கிறது.. கருவுறாத முட்டையோ அழுகும். அந்த முட்டையில் வளரும் உயிரணு ஏதும் இல்லை. நாம் உண்டாலும் உண்ணாவிட்டாலும் அவை வீணாகும். பாலை சைவம் என்றால் இந்த முட்டையும் சைவம் தான்.

பண்ணை முட்டைகள் தனித்தனிக் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளால் இடப்படுகின்றன. முட்டைகள் கருவுறுமானால் ஒவ்வொரு கோழியும் இடும் முட்டைகளின் எண்ணிக்கை குறையும் என்பதால் அவற்றைத் தனித்தனியாக அடைத்து வைத்து முட்டையிட மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். (மனிதன் தனது சுயநலனுக்காக இயற்கைக்கு இழைத்த எத்தனையோ கொடுமைகளில் இதுவும் ஒன்று.) இந்தப் பண்ணை முட்டைகள் எல்லாமே கருவுறாத சைவ முட்டைகள் தான்.

| (3) விரிவான மறுமொழி

முட்டை அறிவியல் 

எல்லாமே முட்டையில் தான் தொடங்குகிறது அல்லவா?

பண்டிகைக் காலமாகிய இந்த வாரத்தையும் முட்டையில் தொடங்குகிறேன்.

முட்டை பற்றி எல்லோருக்கும் தெரிந்த ஒரு அறிவியல் வினா:

வெந்த முட்டையா வேகாத முட்டையா?
உங்களிடம் இரண்டு முட்டைகள் தரப்படுகின்றன. பார்ப்பதற்கு ஒரே போல் தோற்றமளிக்கும் இவற்றுள் ஒன்று வேக வைக்கப் பட்டு ஆற வைக்கப்பட்டது. மற்றது வேகாத (பச்சை?) முட்டை. முட்டைகளை உடைக்காமல், எது வெந்தது எது வேகாதது என்று சொல்ல முடியுமா?

இது மிகவும் சுலபம். வெந்த முட்டை முழுவதும் திடப்பொருளாக மாறி விடுகிறது. வேகாத முட்டை உட்புறம் திரவ வடிவில் உள்ளது. இரண்டையும் தரையில் அல்லது ஒரு தட்டில் வைத்துச் சுழற்றினால், வேகாத முட்டை விரைவில் நின்று விடும், ஏனெனில் உட்புறமுள்ள திரவம் சுழற்சிக்கு மிகுந்த தடையை ஏற்படுத்துகிறது. அது உள்ளே மறுபுறமாகச் சுழல்கிறது. எனவே சுழற்சி விரைவில் நின்று விடுகிறது,. ஆனால் வெந்த முட்டை அதிக நேரம் சுழன்று கொண்டேயிருக்கும். இதிலிருந்து முட்டை வெந்த முட்டையா அல்லது வேகாத முட்டையா என்று எளிதில் பிரித்தரியலாம்.
| (3) விரிவான மறுமொழி

என்னைப் பற்றிச் சில 

"இந்த வார நட்சத்திரமாகத்" தமிழ்மணத்தில் என்னையும் என் மகனையும் அறிவித்திருப்பதாகவும் எனவே நாங்கள் சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்றும் மதியும் காசியும் தெரிவித்திருந்தார்கள். எனவே என்னை/எங்களைப் பற்றிச் சில வரிகள்:


காரைக்குடி அருகே உள்ள கண்டனுார் சிட்டாள் ஆச்சி நினைவுப் பள்ளியில் பள்ளிப் படிப்பு. அழகப்பா கலைக் கல்லுாரியில் இயற்பியல் பட்டப் படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பு. 20 ஆண்டுகளாக ஆசிரியப் பணி. பிறந்ததும் வளர்ந்ததும் வாழ்வதும் எல்லாம் காரைக்குடியிலும் அதனைச் சுற்றியுள்ள சிற்றுார்களிலுமே. பத்து ஆண்டுகளாகக் கணினியோடும் ஐந்து ஆண்டுகளாக இணையத்தோடும் அறிமுகம்.

என் மகன், விவேக் எட்டாம் வகுப்பில் இங்குள்ள பள்ளியொன்றில் படிக்கிறான். மூன்று வயதிலேயே கணனி அறிமுகம். பெரும்பாலும் கணினி விளையாட்டுக்கள் தான் அவனது பொழுது போக்கு. நான் வலைப்பதிவில் எழுதத் தொடங்கியதும் அவனும் வலைப்பதிவொன்றைத் தொடங்கினான். அவனது பதிவில் அவன் எழுதுவது எல்லாம் அவனது நோக்கம் தான். சில சமயங்களில் எழுத்துப் பிழைகளைத் திருத்துவது மட்டுமே எனது குறுக்கீடு. அவனுக்கு ஒரு தமக்கை இருப்பதால் அவனைச் 'சின்னப்பையா' என்று தான் அழைப்போம். எனவே அவன் அந்தப் பெயரிலேயே எழுதுகிறான்.

என்னை 'ஆச்சிமகன்' என்று அன்போடு அழைத்து வந்தவர் என் தாய்மாமன். என் அம்மாவின் தம்பி. நான் என் பாட்டி வீட்டில் தான் பள்ளிப் பருவம் முழுதும் வளர்ந்தேன். என்னை விட ஆறேழு ஆண்டுகள் மூத்தவர் அவர். தினமும் பாட்டி வீடிருந்த அழகாபுரி என்ற சிற்றுாரில் இருந்து கண்டனுார் பள்ளிக்கு இரண்டு கல் தொலைவு நடந்து சென்றே படித்து வருவோம். எனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் மிகப் பெரிய துணையாக அவர் விளங்கினார். பிரச்சினைகள் வரும் போதெல்லாம் அவர் பக்கத்தில் இருந்தது மிகப் பெரும் ஆறுதலாக இருந்தது. அவரைப் பற்றிய நல்ல நினைவுகள் மட்டுமே என்னிடம் இருந்தன. என்னைப் பற்றிய பெருமிதமும் அளவற்ற அன்பும் அவரிடம் இருந்தன. ஒரு மருத்துவரின் மடத்தனத்தால் அவர் மிக இளம்வயதில் இறக்க நேர்ந்தது எனக்குள் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. அவருக்குப் பிறகு 'ஆச்சிமகன்' என்று என்னைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேச யாருமில்லாத வெற்றிடத்தை உணர்ந்தேன். வலைப்பதிவில் நாமும் எழுதலாம் என்று எண்ணிய போது 'ஆச்சிமகன்' என்ற பெயர்தான் எனக்குள் தோன்றியது. எனவே அப்பெயரில் எழுதத் தொடங்கினேன்.

தமிழார்வம் என்பது என் தாயும் பாட்டியும் பாடிய தாலாட்டில் தொடங்கியது. சிட்டாள் ஆச்சி நினைவுப் பள்ளியிலும் அழகப்பா கலைக் கல்லுாரியிலும் படித்ததும் தமிழார்வம் வளரக் காரணம். அழகப்பா கலைக் கல்லுாரியில் தேசிகனார் என்ற மகத்தான தமிழறிஞரிடம் படிக்கும் பேறு பெற்றேன். சிறுவயதில் கதை படிப்பதும் (மரபுக்) கவிதைகளை மனப்பாடம் செய்வதுமே பிடித்த காரியங்கள்.

கல்லுாரியில் இயற்பியல் பட்ட வகுப்பில் நாராயணசாமி என்ற அற்புதமான பேராசிரியர் எங்கள் வாழ்வைப் பண்படுத்தினார். அறிவியலைப் பட்டத்திற்கான வெறும் படிப்பாக இல்லாமல் வாழ்வுக்கான அடிப்படைத் தேவையாகக் கருதச் செய்தார். ஒழுங்கை, கட்டுப்பாட்டை உள்ளார்ந்த பண்புகளாக வளர்த்தெடுத்தார்.
இத்தகைய நல்ல ஆசிரியர்கள் இல்லையென்றால் நாம் ஒன்றுமேயில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

யோகாசனம், தியானம், நாட்டு மருத்துவம், உளவியல், மின்னணுவியல், கணினி வன்பொருள் நிறுவுதலும் பராமரிப்பும், ஒளிப்படக்கலை போன்ற பல துறைகளிலும் ஈடுபாடு உண்டு. இவ்வளவுதான் என்னைப் பற்றி.
| (2) விரிவான மறுமொழி

7.11.04

மூலத்தட்டை மாற்றுங்கள் 

அந்த நண்பரிடம் இருந்து வந்த அவசரமான தொலைபேசி அழைப்பு என்னை அதிரச் செய்தது.

“ஒரு வார காலமாக எனது கணினி இயங்கவில்லை. பொறியாளர் ஒருவர் வந்து பார்த்து விட்டு மூலத்தட்டும் செயலியும் செயலிலழந்து போய் விட்டது. அவை இரண்டையும் மாற்றுங்கள். அதற்கு சுமார் ரூ.10,000 செலவாகும் என்று சொல்கிறார்” என்றது அவரது செய்தி.

நீங்களும் ஒரு முறை வந்து பார்த்து விட்டு குறையிருப்பது மூலத்தட்டிலும் செயலியிலும் தான் என்று உறுதிப்படுத்தினால் மாற்றி விடுகிறேன் என்றார் அவர். செலவைப் பற்றிய கவலையும் அவரது குரலில் ஒலித்தது.

நான் சென்று பார்த்த போது, கணினியின் குமிழை அழுத்தியதும் அடையாள விளக்குகள் ஒளிர்ந்தன. மின் வழங்கி இயங்குவதைக் காற்றாடியின் சுழற்சி உறுதி செய்தது. ஆனால் ஒளித்திரையில் தகவல் ஏதும் காணப்படவில்லை.

பீப் என்ற தொடக்க ஒலியும் இல்லை. நினைவகச் சில்லில் குறைபாடு இருந்தாலும் கணினி இயங்காமல் போகும் என்பதால் அதனை மாற்றிப் பார்த்தேன். பலனில்லை.

மூலத்தட்டிலிருந்த சிறிய மின்கலனைச் சோதித்த போது அது மிகக் குறைந்த மின் அழுத்தத்தைக் காட்டியது. புதிய மின்கலன் ஒன்றை வாங்கி மாற்றினோம். அப்படியும் கணினி இயங்கவில்லை.

பிறகு சட்டென ஒரு பொறி தட்டியது. இப்போது வரும் மூலத்தட்டுக்களில் உள்ளிணைந்த காட்சித்திரை கட்டுப்படுத்திகளைத் தான் (Display controllers) பயன்படுத்துகிறார்கள். தனித்த அட்டைகளைப் (PCI Display card) பயன்படுத்துவதில்லை.. இவற்றைப் பற்றிய அறிவிப்பை முதன்முறை கணினியைக் கட்டமைக்கும் போது படிப்பு நினைவகத்தில் (BIOS ROM) பதிவு செய்திருப்பார்கள்.

மின்கலம் செயலிழந்ததால் பதிவு செய்யப் பட்ட அந்தத் தகவல்கள் அழிந்து போயிருக்கும். இப்போது கணினியைத் தொடங்கும் போது முன்னிருப்பு நிலைப்படி (By default condition) தனித்த காட்சித்திரை அட்டையைக் கணினி தேடக் கூடும். அது இல்லாததால் இயக்க நிலையை அதனால் தொடங்கவே முடியவில்லை.

இந்த சிந்தனை தோன்றியதும் மின்கலம், நினைவகச் சில்லு, காட்சித்திரை இணைப்பான் போன்ற எல்லா பாகங்களையும் மொத்தமாக ஒருமுறை கழற்றி வைத்து விட்டுப் பிறகு ஒவ்வொன்றாக மீண்டும் இணைத்தேன்.

குமிழியை அழுத்தியதும் கணினி பீப் ஒலியோடு கணினி இயங்கத் தொடங்கியது. Del குமிழை அழுத்தி படிப்பு நினைவகத்திற்குள் சென்றேன். நான் எதிர்பார்த்தபடி ஒன்றிணைக்கப் பட்ட துணைக்கருவிகள் (Integrated Peripherals) என்ற பகுதியில் முதலாவது காட்சித்திரை தொடக்கம் (Init Display first:) என்பதற்கு எதிராக தனித்த அட்டை (PCI Slot) என்ற வரி இருந்தது. அதை மூலத்தட்டிலே தேடுக (On Board) என மாற்றினேன்.

பிறகு ஒவ்வொரு பக்கமாகச் சென்று இந்தக் கணினிக்கு ஏற்ற இயக்க நிலைகள் உள்ளதா என்று சரிபார்த்த பிறகு படிப்பு நினைவகத்தைச் சேமித்து விட்டு வெளியேறினேன். அதன் பிறகு கணினி ஒவ்வொரு முறையும் சரியாக இயங்கத் தொடங்கியது.

மின்கலனுக்கான 15 ரூபாய் செலவில் 10,000 செலவில் இருந்து தப்பிய மகிழ்ச்சி நண்பருக்கு.

அந்தப் பொறியாளர் இவற்றை எல்லாம் அறியாமல் இருக்கிறாரா இல்லை வேண்டும் என்றே ஏமாற்றித் திரிகிறாரா என்ற சந்தேகம் எனக்கு.
| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?