<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

30.8.04

நல்ல உணவு.. 

பக்கத்து வீட்டுக்காரர் நுண்ணலை அடுப்பு ஒன்றை வாங்கியிருப்பதாகச் சொல்லி முத்ன்முதலாக அந்த அடுப்பில் செய்த கேக்கைக் கொண்டு வந்தார். அப்போது வழக்கம் போல் கணினி முன் அமர்ந்து இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தேன். அருகில் உட்கார்ந்து சற்று நேரம் அதைக் கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு "நுண்ணலை அடுப்பைப் பற்றியும் அதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பது பற்றியும் தேடிப் பார்த்துச் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டார்.

அவர் சென்ற பிறகு நுண்ணலை அடுப்பு என்று கூகிளில் குறிப்பிட்டுத் தேடிய எனக்கு மிகுந்த அதிர்ச்சி காத்திருந்தது. நுண்ணலைகளால் உணவுப் பொருளிலுள்ள மூலக் கூறுகள் மிகுந்த அதிர்வுக்கு உள்ளாக்கப் பட்டு இரசாயன மாற்றத்திற்கு உட்படுவதாகவும் அந்த உணவை உண்பதால் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புக்கள் மிகுதி என்ற வகையிலும் பல தகவல்கள் எழுதப் பட்டிருந்தன. சோவியத் ருசியா போன்ற நாடுகளில் மக்களின் உடல் நலன் கருதிப் பல ஆண்டுகள் முன்பே நுண்ணலை அடுப்புக்கள் தடை செய்யப் பட்டுள்ளன என்ற தகவலும் தெரிய வந்தது.

இவற்றையெல்லாம் படித்த பிறகு அந்தப் பக்கத்து வீட்டுக் காரரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன். பல ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து வாங்கிய பொருளைப் பயன்படுத்தாதீர்கள் என்பது எப்படி?

ஆனால் அவர் நலமாக வாழ வேண்டுமானால் அதை மிக அரிதாகப் பயன்படுத்த வேண்டும் என்று எப்போதாவது சொல்லி விடுவேன்.

இவை குறித்து மேற்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டுமானால் கீழ்க்கண்ட இணைய தளங்களுக்குச் சென்று பாருங்கள்:

http://www.mercola.com/article/microwave/hazards.htm

http://www.all-natural.com/microwa1.html

http://www.relfe.com/microwave.html

http://www.geocities.com/missionstmichael/MicrowaveCooking.html

1. பொதுவாக நல்ல ஊட்டச் சத்துள்ள உணவு என்பது முளை விடும் தானியங்களும், பழங்களும், பச்சையாக உண்ணக்கூடிய காய்களும், கீரை வகைகளும் எனலாம்.

2. பச்சையாக உண்ண முடியாதவற்றை நீராவியிலோ நீரிலோ வேகவைத்து உண்ணலாம்.

3. குறைவான எண்ணையில் வதக்கிச் சமைத்தவற்றை கூட ஓரளவு பரவாயில்லை.. சாப்பிடக் கூடியவைதான் என்று சொல்லலாம்.

4. எண்ணையில் வறுத்தெடுத்த உணவுகளில் உயிர்ச் சத்துக்கள் எல்லாம் அழிந்து போய் விடுவதால் அவை வயிற்றை நிரப்பப் பயன்படுகின்றனவே அன்றி அவற்றில் நலமான வாழ்விற்கான எந்தச் சத்துப் பொருட்களும் இருப்பதில்லை. வறுத்ததும் பொரித்ததும் மறுத்தால்.. நல்ல உடல் நலம் பெறுவது உறுதி.

5. நுண்ணலை அடுப்பு போன்றவை தீங்கு பயக்கும்.. அவற்றில் சமைத்து உண்பது நல்ல உடல் நலத்துக்கு உதவாது..
| (2) விரிவான மறுமொழி

10.8.04

சிரிக்கும் புத்தர் 

வாழ்வின் அன்றாட சிக்கல்கள் உங்களைக் கவலை நிறைந்தவராகத் தோன்றச் செய்கின்றனவா? இங்கே ஒரு வடிவம் உள்ளது.. அதனைப் பார்த்தவுடன் உங்களுக்குள் உற்சாகம் ஊறச் செய்யும்.. மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்.. அது தான் சிரிக்கும் புத்தரின் வடிவம்.





ஒன்பதாம் நுாற்றாண்டில் சீன நாட்டில் புதே (Pu-tai) என்றழைக்கப்பட்ட புத்த துறவி ஒருவர் வாழ்ந்திருக்கிறார். சப்பான் நாட்டில் இவர் ஓட்டே (Hotei) என்று அழைக்கப்படுகிறார்.





சென்ற இடமெல்லாம் அவர் சிரிக்கும் பழக்கத்தை மட்டுமே கொண்டிருந்திருக்கிறார். பேசியதோ உபதேசம் செய்ததோ இல்லை. குழந்தைகளைக் கண்ட போதெல்லாம் அவர்களுக்கு இனிப்புக்களை வாரி வழங்கியிருக்கிறார். அவர் சென்ற இடமெல்லாம் அவரது சிரிப்பு மக்களை ஈர்த்திருக்கிறது. அவர்களும் வாய்விட்டு சிரித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.





மிகப் பெரிய தொந்தியுடனும் பெரிய துணிமூட்டை ஒன்றுடனும் காணப்படும் இவரது உருவம் சீன சப்பான் நாடுகளில் உள்ள புத்தர் ஆலயங்கள் தோறும் உள்ளதாம். புதே என்ற சீன மொழிச் சொல்லுக்கும் ஓட்டே என்ற சப்பானியச் சொல்லுக்கும் பொருள் துணிமூட்டை என்பது தானாம்.

ஆடையின்றித் திறந்தே காணப்படும் இவரது பருத்த வயிறு வளத்துக்கும் மகிழ்ச்சிக்கும் பெருந்தன்மைக்கும் அடையாளம் ஆகிறது. அவரது துணிமூட்டைக்குள் குழந்தைகளுக்கான இனிப்புக்களும் பரிசுகளும் அத்துடன் அவரிடம் வரும் மக்களின் துன்ப துயரங்களும் கூட நிரம்பியுள்ளதாம். துன்பங்களையும் துயரங்களையும் பெற்றுக் கொண்டு அவற்றுக்குப் பதிலாக மகிழ்ச்சியை. சிரிப்பை அவர் வாரி வழங்கியிருக்கிறார் என்றெல்லாம் அங்கே கதைகள் உலாவருகின்றன.

சப்பானில் நற்பேறுகளை வழங்கும் ஏழு கடவுளர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

ஓசோ இவரை பற்றி நிறைய எழுதியிருக்கிறார். தமிழாக்கம் செய்யப்பட்ட ஓசோவின் நூலாகிய "வாழ்வு அன்பு ம்கிழ்ச்சி" யில் ஓட்டே பற்றிய குறிப்புகளை நான் படித்தேன்.

இந்த வடிவம் நமது நாட்டிலும் இப்போது பரவலாகி வருகிறது. ஆனால் இதனைக் குபேரனின் சிலை என்றும் இது இருப்பதால் செல்வம் குவியும் என்றும் பலவிதமான நம்பிக்கைகளையும் பலர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பல்வேறு வடிவிலான சிரிக்கும் புத்தர் சிலைகளைப் பார்க்க இங்கே செல்லுங்கள்.


| (0) விரிவான மறுமொழி

8.8.04

திருமணத்தின் நோக்கம் 

இது ஆடி மாதம். மிக அரிதாக சில முகமதிய நண்பர்களின் திருமணங்கள் தவிரப் பிறர் யாரும் இந்த மாதம் திருமணம் செய்வதில்லை. ஆடி மாதம் விதைப்புக் காலம் என்பதால் இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்திருப்பார்கள் போலும்.

சில மாதங்கள் முன்பு ஒரு திருமண வீட்டில் பேச்சு வாக்கில் "திருமணம் எதற்காக" என்று கேட்டு விட்டேன். அப்போது தான் பெரும்பாலும் மனிதர்கள் எவ்வளவு பாமரர்களாக இருக்கிறார்கள் என்று தோன்றியது. ஏனென்றால் என் கேள்வியையே அருவருப்பாக நோக்கிய சிலர்.. பொது இடத்தில் இதையெல்லாம் எப்படிச் சொல்வது என்ற சிலர்..

பிறகு அதற்கான பதிலை நான் சொன்னேன். திருமணம் பெண்ணுக்குப் பாதுகாப்பையும் (security) ஆணுக்கு அடையாளத்தையும் (identity) தருகிறது. திருமணத்தின் நோக்கம் அதுதான்.பெண்ணுக்கு சமுதாய பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்பு போன்ற பலவும் திருமண உறவால் உறுதி செய்யப் படுகின்றன.

ஆணோ திருமண நாளில் தான் ஒரு மனிதனாக அடையாளம் காணப்படுகிறான். அதுவரை அவன் சிறுவன் தான். இங்கெல்லாம் அவனைத் திருமணத்திற்குப் பிறகு ஒரு புள்ளி என்று குறிப்பிடுகிறோம். அதுவரை அவன் சுழி தான்.

திருமணங்கள், பொருளாதாரச் சமனிலை உடைய இரு குடும்பங்கள் தமது சொத்தைப் பங்கீடு செய்து கொள்வதற்கான ஒப்பந்தமாகக் குறுக்கிய போதிலும், அன்பு பாசம் காதல் எல்லாம் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப் படும் நிலையிலும், தொடர்புடைய ஆணுக்கும் பெண்ணுக்கும் சமுதாய உறவுகளில் குறிப்பிடத் தக்க திருப்பு முனையாகத் திருமணம் அமைந்துவிடுகிறது.
| (0) விரிவான மறுமொழி

3.8.04

அடிப்படை அறிவியல்.. 

பார்டீன், பிரெட்டெயின் என்ற இரண்டு இயற்பியலாளர்கள் 1947ல் கண்டுபிடித்த குறைக்கடத்தித் தத்துவம் தான் கணினித் துறையிலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கெல்லாம் ஆதாரம் எனலாம்.

வெற்றிடக்குழாய்களைக் கொண்டு கணினி வடிவமைக்கப்பட்ட ஆரம்பக் காலத்தில் அது மிகப் பெரும் வடிவிலானதாகவும் அதிக மனித சக்தியையும் மின்னாற்றலையும் கொண்டு நிர்வகிக்க வேண்டியதாகவும் இருந்தது.

பார்டீன், பிரெட்டெயின் போன்றோரின் கண்டுபிடிப்பால் சிறுமமாக்கல் எளிதாயிற்று. தொடக்க நிலையில் இருந்த தனித்த மின்னணுச் சுற்றுக்கள் உருவாக்கக் கடினமானதாகவும் விரைவில் பழுதடையும் தன்மையதாயும் இருந்தன. பழுதைக் கண்டறியவும், பழுதை அகற்றவுமே பெருமளவு மனித முயற்சி தேவைப்பட்டது.

தொகுப்பு மின்னணுச் சுற்றுக்கள் (IC) உருவாக்கப்பட்டதும் மின்னணுத்துறையிலும் அதன் தொடர்ச்சியாகக் கணினி வன்பொருள் துறையிலும் வியக்கத் தக்க மாற்றங்கள் மிகக் குறைந்த கால அளவில் ஏற்பட்டன.

ஆக இவற்றுக்கெல்லாம் ஆதாரம் அடிப்படை அறிவியலில், இயற்பியலில் தோற்றுவிக்கப்பட்ட குறைக்கடத்தித் தத்துவம் தான் என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

எளிய மொழியில் சொல்வதானால் பார்டீன், பிரெட்டெயின் இருவரும் டிரான்சிஸ்டரைக் கண்டறிந்த பிறகு தான் மின்னணு இயலும் கணினி இயலும் வளர்ச்சி கண்டன.

இருநுாறு ஆண்டுகளுக்கு முன் மைக்கேல் பாரடே தன்னுடைய மகத்தான கண்டுபிடிப்பான மின்துாண்டல் விதிகளை அறிவியல் மாநாடு ஒன்றில் விளக்கிக் கூறிய போது அங்கே பார்வையாளர் ஒருவர், “உங்கள் கண்டுபிடிப்பால் என்ன பயன்?” என்று கேட்டாராம். அதற்கு பாரடே, “புதிதாகப் பிறந்த குழந்தையால் என்ன பயன் என்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று பதில் கேள்வி கேட்டிருக்கிறார்.

அவரது மின்துாண்டல் தத்துவத்தால்தான் இன்று உலகில் உருவாக்கப்படும் மின்சாரத்தில் 90 விழுக்காட்டுக்கும் மேல் உருவாக்கப்படுகிறது. மின்விசிறியில் தொடங்கி அனைத்து சுழலும், ஓடும் மின்சாதனங்களுக்கும் அவரது மின்துாண்டல் தத்துவமே காரணம்.

ஓப்பன்கைமர் என்ற அணுக்கருவியலாளர் முதலாவது அணுகுண்டைச் சோதித்து வெற்றி கண்டார். இருபதாம் நுாற்றாண்டில் இயற்பியலின் தந்தையாகக் கருதப்பட்ட ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அணுவெடிப்பில் வெளியாகும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது என்பதைத் தனது புகழ்வாய்ந்த நிறை-ஆற்றல் சமன்பாடு வழியாகத் தெளிவுபடுத்தினார்.

பார்டீன், பிரெட்டெயின், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மைக்கேல் பாரடே போன்ற எண்ணற்ற இயற்பியலாளர்கள் உருவாக்கிய அடிப்படை அறிவியல் கருத்துக்கள் இன்றளவும் மனித இன மேன்மைக்கு வழிவகுத்தே வந்துள்ளன.

ஆனால் நம் நாட்டில் பயன்பாட்டு அறிவியலின் மீதான மக்களின் மோகம் சிந்திக்க வேண்டியதாயுள்ளது.

கருத்துக்களை உருவாக்குதலா.. பொருட்களை வடிவமைத்தலா.. எது முதன்மையானது.

கவிஞனை விடத் தச்சனும் கொத்தனும் காசு ஈட்டுதல் எளிது என்பதால் கவித்துவ உணர்வுகளைச் சுட்டெரித்துக், காசு தேடும் வாழ்வே மேலானது என்று பேசித் திரிவோமா?

வாழ்வின் உன்னதங்கள் எல்லாம் நம் அளவீடுகளில் அடங்காதவை.

ஆதார உண்மைகளைத் தேடுதல் நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கக் கூடும்.
| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?