<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

12.3.05

நீதிபதி கற்பக விநாயகம் மீதான விமர்சனம் 

சென்னை உயர்நீதி மன்றத்தின் பிரபலமான நீதிபதியை அருகிலிருந்து கவனிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இன்று மாலை அழகப்பா அரசு கலைக்கல்லுாரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் நீதிபதி கற்பக விநாயகம் உரையாற்றினார்.

வழக்கமான பட்டமளிப்பு விழா உரை போல இல்லாமல் அவருடைய உரை உணர்ச்சி மிகுந்ததாகவும் தமது உடன்பிறப்புக்களுடன் கலந்துரையாடுவது போல எளிமையாகவும் இருந்தது.

காரணம் அவர் அந்தக் கல்லுாரியின் பழைய மாணவர். அவர் மட்டுமல்ல சென்னை உயர்நீதி மன்றத்தின் மற்றொரு நீதிபதி சொக்கலிங்கமும் அக்கல்லுாரியின் பழைய மாணவர்தான்.

சென்ற ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சொக்கலிங்கம் உரையாற்றினார். இருவரும் எழுபதுகளில் அக்கல்லுாரியில் பொருளாதாரம் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்கள் (கற்பக விநாயகம் ஓராண்டு முன்னதாகப் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்)

கற்பக விநாயகத்தின் சமுதாய நோக்கு படித்த காலத்திீலிருந்தே அவரை இயக்கி வந்திருக்கிறது. தமிழறிஞர் வ.சுப. மாணிக்கம் கல்லுாரியின் முதல்வராக நியமிக்கப்பட்ட போது தமிழாசிரியரை முதல்வராக்குவதா என்று சிலரால் துாண்டப்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். கற்பக விநாயகமோ தமிழறிஞர்தான் கல்லுாரி முதல்வராக வேண்டும் என்று தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார். இவ்வாறு அந்த நாட்களை நினைவு கூர்ந்தார் அவர்.

சமுதாய நோக்கமற்ற எந்தப் பணியும் வாழ்வும் வீணே என்று பேசிய அவர் அதற்காக உவமை ஒன்றும் சொன்னார்.

மூன்று பொம்மைகள் இருந்தனவாம். களிமண் பொம்மை ஒன்று பஞ்சாலான பொம்மை ஒன்று கற்கண்டாலான பொம்மை ஒன்று. மூன்றும் தனித்தனியாக மூன்று கோப்பை நீரில் மூழ்கடிக்கப்பட்டன. களிமண் பொம்மை கரைந்து நீரைச் சேறாக்கியது. பஞ்சு பொம்மை நீரை உறிஞ்சித், தான் கொழுத்தது. கற்கண்டாலான பொம்மையோ தான் கரைந்ததே தெரியாமல் மறைந்தது. ஆனால் அது அந்த நீரை இனிக்கச் செய்தது.

சமுதாயத்தில் வாழும் மனிதன் அந்தக் கற்கண்டாலான பொம்மையைப் போல சமுதாயம் பயன்படும்படி வாழ வேண்டும் சமுதாய நோக்கமற்ற எந்தப் பணியும் சிறக்காது என்ற வகையில் அவர் பேசினார்.

ஒழுக்கம் உண்மை உழைப்பு இவற்றையும் வலியுறுத்திப் பேசினார்.

வழக்குரைஞராகப் பணியாற்றிய போது கூடப் பொய் பேசி வழக்கறிஞர் தொழில் செய்ததில்லை என்றும் கடவுள் நம்பிக்கையோடு ஓயாது உழைத்தால் உயர்வு நிச்சயம் என்ற வகையிலும் பேசினார்.

சத்திய சோதனையும் விவேகானந்தர் உரைகளுமே தம்மை வழிநடத்தும் நுால்கள் என்ற அவர் தாம் படிக்கும் காலத்தில் நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் போன்ற நுால்களைக் கையில் வைத்திருப்பதையே பெரிய கெளரவமாகக் கருதியதாகவும் சொன்னார். இப்போதெல்லாம் மாணவர்கள் அதிகம் படிப்பதில்லை என்று வெளிப்படையாகச் சொல்லாமல் படி படி என்று படித்தால்தான் வாழ்வில் படிப்படியாக முன்னேற முடியும் என்றார்.

தேடிச் சோறு நிதம் தின்று என்ற பாரதியாரின் பாடல் வரிகளையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.

பெரும்பாலும் அவருடைய பேச்சு அறிவு சார்ந்ததாக மூளையிலிருந்து வந்தது என்று சொல்வதைவிட உணர்வு சார்ந்ததாக இதயத்திலிருந்து வந்தது என்று சொல்வதுதான் பொருந்தும்.

எல்லாவற்றையும் விட எனக்குப் பெரும் வியப்பளித்தது அவரது இறைநம்பிக்கை. தனது பாதையைத் தான் தேர்ந்தெடுப்பதாகவும் பயணத்தின் முடிவை இறைவன் முடிவு செய்வதாகவும் கூறிய அவர் சத்யசாய் பாபாவை வணங்கித் தான் தனது உரையைத் தொடங்கினார்.
| (1) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?