<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

26.9.04

கண்ணாடியில் கவிபாடும் கலைஞர்கள் 

24.9.2004 வெள்ளிக்கிழமையன்று காரைக்குடி மின்வேதியல் ஆய்வுக் கூடத்தைப் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைத்திருந்தார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை பெருமாள் கோவிலில் திருக்கதவம் திறப்பதைப் போல இதுவும் இப்போதெல்லாம் ஒரு சடங்காக மாறிவிட்டது.

அறிவியல் ஆர்வலர்களுக்கு எந்த வசதியும் இல்லாத - ஏன் பொழுது போக்குவதற்குக் கூட வழியற்ற - சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு இது ஒரு வரவேற்கத் தக்க நிகழ்வாக எண்ணி áற்றுக்கணக்கான பள்ளிகளிலிருந்து மாணவர்களை அன்று அங்கே அழைத்து வந்தார்கள்.

காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறையில் பொழுது போகாமல் திண்டாடிக் கொண்டிருந்த என் பையனின் வற்புறுத்தலால் அவனை அழைத்துக் கொண்டு நானும் அங்கே சென்றிருந்தேன்.

ஆய்வுக் கூடத்தில் பெரும்பாலும் அட்டைகளில் எழுதப்பட்ட விளக்கங்களும் சிற்சில மாதிரி வடிவங்களும் கொண்டு, இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளைப் பற்றிய (தட்டையான) விளக்கங்கள் மறுபடி மறுபடி சொல்லப்பட்டன.

கழிவு நீரிலிருந்தும் கடல்நீரிலிருந்தும் குடிநீர் வடிக்கும் முறைகள்.. கடல் அரிப்பு காப்பு வழிகள்.. மின்முலாம் âச்சு.. புற ஊதாக் கதிரில் ஒளிரும் வேதியியல் பொருட்களைப் பற்றிய ஆய்வு.. புதுயுக மின்கலங்களைப் பற்றிய ஆய்வு.. உயிர்ப் பொருட்களிலிருந்து ஆற்றல் பெரும் வழிகள்.. இப்படிச் சொல்லிக் கொள்ளும்படியான சில காட்சிகளைக் கண்டோம்.

இவற்றையெல்லாம் விட கண்ணாடி ஊதும் கூடம் தான் எங்களை மிகவும் கவர்ந்தது. அங்கே கண்ணாடியாலான ஆய்வுக் கருவிகளை, வெவ்வேறு வடிவிலான குழாய்களை, உருவாக்கித் தரும் கலைஞர்கள் தமது கலைத்திறனால் அற்புதமான கலைப் பொருட்களையும் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.

நாங்கள் சென்ற போது கண்ணாடிக் குழாய் ஒன்றை நெருப்பில் வாட்டி, ஊதி, வளைத்து ஒரு அழகிய குருவி ஒன்றை செய்து காட்டினார் ஒருவர்.

அங்கே இருந்த காட்சிக் கூடத்தில் கண்ணாடியால் அழகழகாக உருவாக்கப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. யானையும் மயிலும் பாம்பும் தேரும் கடவுளர் உருவங்களும் அவர்களது கைத்திறனால் (ஊது திறனால்) கண்ணாடியில் உருவாக்கப் பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

அவற்றையெல்லாம் கண்ட பிறகு மிகுந்த மன நிறைவோடு வீடு திரும்பினோம்.

எந்த நிறுவனத்திலும் சம்பளம் மட்டும் வாங்கும் அற்பர்கள் சிலரும், வாங்கிய சம்பளத்திற்கு உழைக்கும் (கூலிக்கு மாரடிக்கும்) எந்திர மனிதர்கள் சிலரும் இருக்கக் கூடும். ஆனால் செய்யும் தொழிலில் முழு ஈடுபாடு கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யும் சிலரால் தான் இந்த உலகம் இன்னும் நாம் வாழத்தக்க உலகமாக இருக்கிறது. அவர்கள் தான் கல்லிலும் கலை வடிக்கிறார்கள் கண்ணாடியிலும் கவிதை படைக்கிறார்கள்.
| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?