<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

17.7.04

யாருடைய தவறு?  

 

அன்றாடம் இரவில் நான் எங்கள் ஊரில் காணும் காட்சிகளில் ஒன்று: சுமையுந்துகள் சிலவும் சிறு சுமையுந்துகள் பலவும் ஒரு முகப்பு விளக்கை மட்டுமே எரிய விட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பது. வேறு விளக்குகள் ஏதுமில்லாத கிராமத்துச் சாலைகளில் எதிரில் வருபவர், இந்தச் சுமையுந்துகளை இருசக்கர வாகனங்களாக நினைப்பதற்கும் அதனால் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் மிகுதி. எதனால் இப்படி ஒருவிளக்கோடு ஒட்டுகிறார்கள் என்பது எனக்குப் புரிந்ததே இல்லை.  இரண்டு முகப்பு விளக்குகளையும் எரியவிடாத காரணம் மின்கலனைப் பாதுகாக்கவா இல்லை விளக்கின் தேய்மானத்தைத் தவிர்க்கவா என்பதும் தெரியவில்லை.

ஒருமுறை நள்ளிரவில் மிக அவசரமாகப் பக்கத்து ஊரில் உள்ள உறவினருக்குத் தகவல் தெரிவிக்கச் சென்று கொண்டிருந்த நானே அப்போதிருந்த அவசரத்தில், ஒரு விளக்கு மட்டும் எரியவிட்டு வந்து கொண்டிருந்த ஒரு சுமையுந்தில் மோத இருந்தேன். ஒரு விநாடி விழிப்பில் அன்று தப்பித்தேன். நான் மோத இருந்ததைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அந்த சுமையுந்து என்னைக் கடந்து சென்றது.

அதன் பிறகு பல முறை அவ்வாறு ஒரு முகப்பு விளக்கோடு ஓடும் சுமையுந்துகளை நிறுத்தி ஏன் ஒரு விளக்கு எரியவில்லை என்று கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் அதற்கான பதில் “உன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்பதாகவோ அல்லது இன்னும் தரக்குறைவான பேச்சாகவோ தான் இருந்திருக்கிறது.

போக்குவரத்துக் காவல்துறை என்று ஒன்று எங்கள் ஊரிலும் உள்ளது. அவர்களுக்கெல்லாம் இந்த நிலைமை தெரியாமல் இருக்காது. நிச்சயமாக இது சட்டவிரோதமான செயல்தான்.  இப்படி ஓடும் வண்டிகள் அவர்கள் பார்வையிலும் படும்.  அப்படி மாட்டிக்கொண்டால் இவர்களுக்குக் கொஞ்சம் வருமானம் அவர்களுக்குக் கொஞ்சம் செலவு என்ற வகையில்தான் இந்த நாட்டில் சட்டத்தின் பராமரிப்பு இருக்கிறது.

சுமையுந்து உரிமையாளர் சமுதாயத்தின் மற்ற எல்லாத் தரப்பையும் போல லாப நட்டக் கணக்குப் பார்க்கிறார். புதிய மின்கலனை மாற்றுவதைவிடக் காவலர் ஒருவருக்கு கொடுக்கும் செலவு குறைவாக இருக்கிறது. அதனால் அவர் தெரிந்தே சட்ட விரோதமாக நடக்கிறார்.

எல்லா மனிதர்களும் சட்டப்படி நடந்தால் காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கு மாத வருமானம் மட்டும் தானே கிடைக்கும்? எனவே அவர்களும் முறையற்ற செயல்களை வரவேற்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது.

காவல்துறை என்றில்லை.  அரசுத்துறை அத்தனையும் இப்படித்தான் இருக்கிறது. இதில் ஓரளவுக்காவது ஊழலற்ற துறையாகக் கல்வித்துறை இருந்து வந்திருக்கிறது. பெரும்பகுதி ஆசிரியர்கள் நேர்மைக்கு மதிப்பளிப்பவர்களாக, சட்டப்படி வாழும் நல்ல குடிமக்களாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள்.

கல்வி தனியார் மயமானதும் அங்கும் லாபமே நோக்கமாகக் கொண்ட சுயநலவாதிகள் புகுந்து குழப்ப ஆரம்பித்து விட்டார்கள். கண்ட இடமெல்லாம் நர்சரிப் பள்ளிகளும் மெட்ரிகுலேசன் பள்ளிகளும் வியாபாரக் கூடங்கள் போலத் தோன்றலாயின. அங்கே முதலீடு தேவைப்பட்டது. லாப நட்டக் கணக்குப் பார்ப்பதும், சட்டத்தை மீறி, அதற்காக அதிகாரிகளைச் சரிக்கட்டுவதும் வழக்கமாகியது.

இத்தகைய நிலைமையால் ஏற்பட்ட கொடுமைதான் கும்பகோணத்தில் ஏற்பட்ட துயரமும் என்று எண்ணத் தோன்றுகிறது. அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் ஓலைக் கூரையின் கீழே பள்ளி நடத்தியிருக்க முடியுமா? இதில் “எத்தனை பேருக்குப் பங்கு? எத்தனை பேர் தமது செல்வாக்கால் தப்பிவிட்டார்கள்?” என்பதெல்லாம் நமக்குத் தெரியாமலேயே போகக் கூடும்.

ஆனால் அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளை இழந்து துடிதுடிக்கும் பெற்றோரின் வலியும் வேதனையும் எழுதி மாளாது.

வாழ்வின் முதல் நோக்கம் 'பணம் சேர்த்தல்' என்ற நிலையை நாம் மாற்றியாக வேண்டும். மனிதர்களை நல்லவர்களாக, நேர்மையில் உண்மையில் உளத்துாய்மையில் நல்லொழுக்கத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்களாக வாழச்செய்ய வேண்டும். உழைப்பில் உயர்வு காணும் உறுதியை ஏற்படுத்தியாக வேண்டும். 'முறையற்ற விதத்தில் ஈட்டும் ஒவ்வொரு காசும் நோய் கண்டு அழியும்' என்ற எண்ணத்தை ஒவ்வொரு இளைஞரின் மனத்திலும் விதைக்க வேண்டும்.

பணத்திற்காக இழிசெயல்கள் செய்பவனை சமுதாயம் ஒதுக்கி வைக்க வேண்டும். தவறான வழியில் பணம் சேர்ப்பவனைப் பெரிய மனிதன் என்று கொண்டாடுவதை விட்டு விட்டு அவனைத் தீண்டத்தகாதவனாய் ஒதுக்க வேண்டும்.

பிறப்பால் அல்ல மனிதத்துவத்தால் மட்டுமே  ஒருவனின் மதிப்பும் மாண்பும் முன்னிறுத்தப்பட வேண்டும்.

அதுவரை ஒட்டு மொத்த சமுதாயமும் தான்  இத்தகைய பேரழிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
| (0) விரிவான மறுமொழி

12.7.04

கொஞ்சம் அறிவியல் 2 

விடை:

1. அழுத்தம் குறைந்த இடத்தில் நிலைத்தன்மை உண்டு. உயரம் குறையக் குறைய அழுத்தம் குறையும்.. நிலைத்தன்மை கூடும். எனவே நீர் தாழ்வான இடத்தை நோக்கியே எப்போதும் ஓடுகிறது. ஒவ்வொரு பொருளும் தனது அழுத்தத்தை மிகக் குறைவாகவே வைத்துக் கொள்ள முயலும் என்பது இயற்பியலின் ஆதார விதிகளில் ஒன்று. (மனிதர் கூட உயர் அழுத்த நிலையில் கொதித்துக் கொண்டிருக்கவா விரும்புகிறோம்.. அக்கடா என்று கவலைகளற்று வாழ்வதல்லவா இனிய வாழ்வு).. தண்ணீரும் அப்படித்தான். உயர் மட்டங்களில் அதிக அழுத்ததில் நிலைத்து இருப்பதில்லை. (Every body tends to have minimum potential energy. potential energy = mgh. Lower the height, lower the potential.)

2.மின் கலங்களின் விலை மிக அதிகம். மின்கலத்தவிர்ப்பான் (battery eliminator) ஒன்றை வாங்கி வீட்டு மின்சாரத்தில் பயன்படுத்தினால் பயன்பாட்டுச் செலவு கிடையாது. வீட்டு மின்னளவி சுழல வேண்டுமானால் குறைந்தது 30 அல்லது 40 வாட் மின்சாரம் பயன்படுத்த வேண்டும். வானொலிப் பெட்டிகள் 2 அல்லது 3 வாட் மின்சாரத்துக்கும் குறைவாகவே பயன்படுத்துகின்றன. எல்லா மின்சாதனங்களையும் நிறுத்திவிட்டு மின்கலத்தவிர்ப்பான் ஒன்றால் இயங்கும் வானொலியைப் பாட விட்டுப் பாருங்கள். மின்னளவி சுழலாது. செலவில்லாமல் தான் வானொலி பாடுகிறது. மிகத் துல்லியமான மின்னணு அளவி பயன்படுத்தினால் கூட, 500 மணி நேரத்துக்கு ஒரு யூனிட் செலவாகும்..

3. இரும்புக்குள்ளே எண்ணற்ற காந்தக் களங்கள் (magnetic domains) ஒழுங்கற்றுச் சிதறிக் கிடக்கின்றன. அதனால் அதன் காந்தப் புலவலிமை வெளியே தெரிவதில்லை. அவற்றை ஒழுங்கு படுத்தி (வட துருவம் எல்லாம் ஒரு திசையிலும் தென் துருவமெல்லாம் மறுதிசையிலும் இருக்கும்படி) ஒருமுனை நோக்கும் தன்மையை (magnetic polarisation) ஏற்படுத்துதலே காந்தமாக்கலாகும் காந்தத்தை இரும்பின் அருகே கொண்டுவந்தால், இரும்பில் அது மாறுபட்ட துருவத்தைத் தூண்டும். (காந்தத்தின் வட துருவத்தைத் இரும்பின் அருகே கொண்டுவந்தால், இரும்பில் அது தென் துருவத்தைத் தூண்டும்.) இதைக் காந்தத் தூண்டல் என்கிறோம். (magnetic induction) அப்போது காந்தம் இரும்பை ஈர்க்கும்.

4. செம்பு உருகும் அளவு வெப்பம் ஒருபோதும் நமது அடுப்பில் வராது. அதற்கு சில ஆயிரம் பாகை வெப்பம் வேன்டும். உலைக் களத்தில் தான் செம்பை உருக்குவது சாத்தியம். நமது அடுப்பில் சில நூறு பாகைகள் வெப்பம் தான் வெளிப்படும். எனவே ஒன்று எரிவாயு தீர்ந்து போகும். இல்லையேல் அடுப்பு தொடர்ந்து எரிந்து நீர் முழுதும் ஆவியானதும், செப்புக் குடம் தொடர்ந்து சூடாகி சுற்றுப் புறத்துடன் வெப்பச் சம நிலையை எட்டும் (150 அல்லது 160 பாகைகளில் அது அடுப்பில் இருந்து பெறும் வெப்பமும் சுற்றுப் புறத்துக்கு இழக்கும் வெப்பமும் சமமாகும்) அதே நிலையில் எரிபொருள் தீரும் வரை இருக்கும்.
| (0) விரிவான மறுமொழி

7.7.04

கொஞ்சம் அறிவியல்  

அறிவியலின் அடிப்படைகளை எளிய தமிழில் எழுதும் ஆர்வம் வலைப்பதிவைத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் இருந்தது. பிறகு நோக்கம் மாறிப் போய் கவிதை விமரிசனம், மருத்துவம் அது இது என்று சுற்றி அலைந்து.. இன்று எதேச்சையாக http://www.kuro5hin.org என்ற தளத்தில் அற்புதமாக எழுதப்பட்ட பல அறிவியல் கருத்துக்களைப் பார்த்ததும் மீண்டும் இங்கே தொடர்கிறேன்.

கேள்வி 1: தண்ணீர் ஏன் பள்ளத்தை நோக்கி ஓடுகிறது?

“இது என்ன மடத்தனமான கேள்வி? அது எப்போதும் அப்படித்தான் ஓடுகிறது” என்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள்: ஏதாவது அறிவியல் காரணம் உண்டா இல்லையா?

உடனே பலருக்கும் ஒரு பதில் தோன்றிவிடும்: புவி ஈர்ப்பு விசையின் காரணமாக என்று சொல்லி விடுவார்கள். மேட்டிலும் பள்ளத்திலும் ஒரே போன்ற புவி ஈர்ப்பு விசை (அல்லது புவி ஈர்ப்பு முடுக்கம்) தானே உள்ளது? அது எப்படி காரணமாகும்?
உங்கள் பதில் என்ன?

கேள்வி 2: ஒரு பைசா கூடச் செலவு செய்யாமல் நாள் முழுதும் பண்பலை நிகழ்ச்சிகளை வானொலியில் கேட்க வேண்டும். முடியுமா? என்ன வழி? (அடுத்த வீட்டில் ஒட்டுக் கேட்கலாம் என்று சொல்லாதீர்கள்..) அறிவியல் தீர்வு என்ன?

கேள்வி 3: இரும்பு ஒன்று காந்தமாகும் போது என்ன நடக்கிறது? இரும்புக்குள் நடக்கும் எந்த மாற்றத்தால் அது காந்தமாகிறது? இரும்பு ஒன்று ஏன் மற்றொரு இரும்பை ஈர்ப்பதில்லை? காந்தமாக்கப் பட்டதும் மற்றொரு இரும்பை ஈர்க்கும் ஆற்றல் எப்படி வருகிறது?

கேள்வி 4: ஒரு செப்பு குடத்தில் நீர் நிரப்பி அதனை அடுப்பில் ஏற்றிச் சுட வைக்கிறோம். திடீரென தொலைபேசியில் அவசர அழைப்பு.. போட்டது போட்ட படி வீட்டைப் âட்டிக் கொண்டு வெளிäருக்குச் சென்று விடுகிறோம். இரண்டு தினங்கள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால்.. என்ன நடந்திருக்கும்?

நீர் முழுவதும் ஆவியாகி, செம்புப் பாத்திரம் உருகி, அடுப்பு முழுவதும் மெழுகு போல ஒழுகி, அதனால் அடுப்பு அணைந்து, வீடு முழுதும் எரிவாயுவால் நிரம்பி...

இப்படி நடந்திருக்குமா இல்லை வேறு என்ன ஆகியிருக்கும்?

எனது பதில்கள் அடுத்த பதிவில்..

உங்கள் பதில்களைக் கூறுங்கள்...| (0) விரிவான மறுமொழி

3.7.04

ஜிமெயிலில் கணக்குத் துவங்க வேண்டுமா? 

யா†¤ 100 எம்.பி அளவும் ரெடிப் 1000 எம்.பி அளவும் ஹாட்மெயில் 250 எம்.பி அளவும் மின்னஞ்சல் வசதிக்காக ஒதுக்கிய பிறகு ஜிமெயிலின் 1000 எம்.பி மின்னஞ்சல் வசதி கொஞ்சம் முக்கியத்துவம் குறைந்து தான் போய்விட்டது. ஆயினும் பிற மின்னஞ்சல் தளங்களைப் போலன்றி இன்னும் ஜிமெயில் சோதனை நிலையிலேயே இருப்பதாகச் சொல்லிக் கொள்வதால் நினைத்தவுடன் எவரும் ஜிமெயிலில் கணக்குத் துவக்க முடிவதில்லை.

பிளாக்கர், ஜிமெயில் இரண்டுமே கூகிளின் தளங்கள் என்பதால், பிளாக்கரில் கணக்கு வைத்துள்ள சில வலைப்பதிவாளர்களுக்கு ஜிமெயில் கணக்கை இலவசமாக வழங்கியுள்ளார்கள். இவ்வாறு அழைக்கப் பட்டவர்கள் தமது நண்பர்கள் சிலரை ஜிமெயிலில் கணக்குத் துவங்க அழைக்க முடிகிறது.

இவ்வகையில் தான் தமிழ் வலைப்பதிவாளராகிய ஜான் பாஸ்கோ எனக்கு ஒரு ஜிமெயில் கணக்குத் துவங்க அழைப்பு விடுத்தார். நானும் இப்போது சில நண்பர்களை அழைக்க முடியும்.

உங்களுக்கு ஜிமெயிலில் கணக்கு வேண்டுமானால் உங்கள் பெயரையும் உங்கள் தந்தையார் பெயரையும் தற்போதைய மின்னஞ்சல் முகவரியையும் இப்பதிவிற்குக் கீழே உள்ள மறுமொழிப் பெட்டியில் தெரிவியுங்கள். (ஆங்கிலத்தில்). அவ்வாறு மறுமொழிப் பெட்டியில் அனைவரும் படிக்குமாறு தெரிவிக்க விருப்பம் இல்லாவிட்டால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். முதலில் தகவல் தரும் ஆறு நண்பர்களுக்கு உடனடியாக அழைப்பு அனுப்ப முடியும். அதன் பிறகு வருபவர்களுக்கு, தொடர் இணைப்பு முறையில் சில தினங்கள் கழித்துத் தான் அழைப்பு அனுப்ப இயலும்.

| (0) விரிவான மறுமொழி

2.7.04

பாரதியாரும் விவேகாநந்தரும் 

இது எனது இருபத்தைந்தாவது பதிவு. எனக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய என்னுடைய பழைய கட்டுரைகள் எதையாவது வெளியிட எண்ணிய போது 1988 சனவரியில் என் நண்பர் நடத்திய சிற்றிதழ் ஒன்றில் நான் எழுதிய இந்தக் கட்டுரை கிடைத்தது. ('சுருதி' என்ற பெயரில் அவரால் மூன்றே இதழ்களைத் தான் வெளியிட முடிந்தது) பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் நான் படித்தவற்றையும் கேட்டவற்றையும் தொகுத்து எழுதப்பட்டது இது.

********************

ஒருவர் கவிக்குயில். மற்றவர் அருட்புனல். அவர் நடத்தியது இல்லறம். இவரை நாடியதோ துறவறம். அவரது எண்ணங்களைப் பெரிதும் ஈர்த்தது அரசியல் வானம். இவரை ஈர்த்ததோ ஆன்மீக ஞானம். இருப்பினும் என்ன? மனித நேயத்தில், நாட்டுப்பற்றில், நெஞ்சத் துணிவில், நேர்மை உணர்வில் இருவரது நோக்கும், பேச்சும், செயலும் ஒன்றே. "உயர்ந்த மனங்கள் ஒன்றாகச் சிந்திக்கும்" என்ற கூற்று இவர்கள் இருவருக்குமே மிகப் பொருந்தும்.

அடிமைத் தளையால் தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் பாழ்பட்டு நின்ற பாரதத்தில் வல்லமையின் வடிவங்களாய், இருளகற்றி ஒளியேற்ற வந்த இணையற்ற மானுடர்கள் பாரதியாரும் விவேகாநந்தரும். தேர்ந்த சிந்தனை, தெளிந்த நல்லறிவு போன்ற மாமனிதரின் மகோன்னதப் பண்பு நலன்களையெல்லாம் தன்னிடத்தே கொண்ட இந்த இருவருமே இன்றைய இளைஞன் ஒவ்வொருவனையும் நெறிப்படுத்த வல்ல வழிகாட்டிகள் - ஆசான்கள் - என்றால் அது மிகையில்லை.

இந்த áற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை இருள் மூடிக் கிடந்தது. சாதிப்பித்து சமயவெறி பசிப்பிணி படிப்பறிவின்மை என்று பாரதத்தில் வேரோடிக் கிடந்த நோய்க் கொடுமைகள் ஏராளம். அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டு உலாவித் திரிந்த ஊமைச்சனங்களே பாரத புத்திரராய்ப் பவனிவந்த பரிதாபக் காலம் அது. வெள்ளையன் வீசிய பிச்சைக் காசுகளுக்காகவும் சில்லறைச் சலுகைகளுக்காகவும் வாலை ஆட்டியபடி தன் ஆன்மாவை மனத்தை உடலை மட்டுமல்ல இந்த மண்ணின் மரபையும் மாண்பையும் மதிப்பையும் விலைபேசிக் கொண்டிருந்தது அன்று இங்கிருந்த படித்த வர்க்கம்.

காலங்காலமாக இங்கே வேரூன்றி வாழ்ந்த நமது மரபும் வாழ்க்கை நெறியும் அந்நிய மோகத்தால் சோதனைக்குள்ளானது. எத்தனையோ புயல்களைக் கடந்து நிலைபெற்ற நமது புராதன நெறிகள் பொய்யர்களால் திரித்துரைக்கப்பட்டு அவற்றின் அடிப்படையே தகர்க்கப்படும் பரிதாப நிலை ஏற்பட்டது. மெய் எது? பொய் எது? சரி எது? தவறு எது? என்று பிரித்துணரும் அறிவார்ந்த ஆய்வு உணர்ச்சியையே அன்று மேலைக்கல்வி மழுங்கடித்து விட்டது. நம்மை வெறும் தலையாட்டி பொம்மைகளாய், ஆண்மையற்ற ஜடங்களாய், ஆள்பவரின் கைப்பாவையாய், வார்த்தைகளைப் பெயர்த்து எழுதும் கணக்கர்களாய் ஆங்கிலக் கல்வி ஆக்கி வைத்திருந்தது.

இத்தகைய நிலையில்தான் விவேகானந்தர், பாரதியார் என்ற இரண்டு விடிவெள்ளிகள் கிழக்கே வங்கத்திலும் தெற்கே தமிழகத்திலும் தோன்றினர். அவர்களது தாக்கம் அன்றைய இளைஞனுக்கு ஆண்மை அளித்ததும், அறியாமை இருளை அகற்றி வைத்ததும் உலகறிந்த உண்மை. வழி தெரியாத குருடர்களாய் வாழ்ந்த அடிமை இந்தியர்கள் தம் ஆன்ம வாழ்விலும் நாட்டுப்பற்றிலும் நம்பிக்கையோடு பின்பற்றத் தக்க வழிகாட்டிகளாய் ஒளிவிளக்குகளாய் அவர்கள் விளங்கினர்.

இவர்கள் இருவரிடையே உள்ள தலையாய ஒற்றுமை அச்சத்திற்கும் கோழைத்தனத்திற்கும் எதிரான போராட்டமே. "உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை" என்று பாடிய பாரதி தன் பாப்பா பாட்டில் பாடுவார்:
“பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயம் கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”

இதையே விவேகாநந்தர் தன் சொற்பொழிவில் “என்னால் எந்தக் குறைபாட்டையும் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் கோழைத் தனத்தை மட்டும் தாங்க முடியாது. கோழைத்தனத்தை விடப் பெரிய பாவம் வேறு எதுவும் இல்லை. ஒருவன் அநியாயமாக உன்னை ஓர் அடி அடித்தால் நீ சீறி எழுந்து பத்து அடிகள் திருப்பித்தர வேண்டும். அதுதான் ஆண்மை. இறந்துபடும் போதும் தீரமாகப் போராடி இறந்து போவதையே நான் விரும்புகிறேன். கோழையாக வாழ்வதை அல்ல” என்று கூறுவார்.

கடவுளின் பெயராலும் அரசியல் அதிகாரத்தின் பெயராலும் நடத்தப் பட்ட எல்லா வகைச் சுரண்டல்களையும் எளியவர்கள் ஏமாற்றப் படுவதையும் இருவரும் முழுமூச்சுடன் எதிர்த்தனர். அக்கிரமத்திற்குத் துணை போகும் படித்தவர்களையும் அவர் தம் போலிச் சட்ட நீதி áல்களையும் கிழித்தெறியவே பாஞ்சாலி சபதம் பாடினார் பாரதியார். “பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்பார்.

ஏழை எளியவர்கள்பால் தம் இதயம் நிறைந்த நேசத்தையும் அன்பையும் கருணையையும் கொண்டிருந்த இவர்கள் இருவருக்குமே வாழ்க்கைத் தத்துவமாய் இருந்தது மனித நேயமும் மனித இன மேம்பாடும் தான். மனிதனை மிருகமாக்கும் மூடப் பழக்க வழக்கங்களையும் தீண்டாமை போன்ற கீழ்த்தரமான கொடுமைகளையும் தம் வாழ்நாள் எல்லாம் இவர்கள் எதிர்த்துப் போராடியது நாம் நன்கறிந்த செய்தி.

பொய்மையை, மாய்மாலங்களை, வேடங்களை, அறியாமையை உடைத்தெறியும் உண்மையின் உரத்த குரலாக இருவருமே திகழ்ந்தனர். போலிச்சடங்குகளை எள்ளி நகையாடி விவேகாநந்தர் பேசுவார்: "தண்ணீரை எந்தக் கையில் ஏந்திக் குடிக்க வேண்டும்.. எத்தனை முறை கைகழுவ வேண்டும்.. வாய் கொப்பளிப்பது ஐந்து முறையா இல்லை ஆறு முறையா.. என்பன போன்ற பொருளற்ற காரியங்களைப் பற்றி விவாதித்தும் இவற்றைப் பற்றிய அறிவு வளம் சார்ந்த கருத்துக்களை எழுதியும் பலர் காலம் கழிக்கிறார்கள். இத்தகையவர்களிடம் பயனுள்ள எதை நாம் எதிர் பார்க்க முடியும்?"

"நம் சமயம் அடுப்பங்கரை. சமயற் பானை நம் கடவுள். என்னைத் தொடாதே நான் புனிதமானவன் என்பது நம் மதம். இன்னும் ஒரு áற்றாண்டு காலம் இது நீடிக்குமானால் நாம் ஒவ்வொருவரும் பைத்தியக்கார விடுதியில் இருப்போம். நாம் அனைவரும் ஆண்டவனின் அன்புக் குழந்தைகளாக இருக்கும் போது நம்மிடையே உயர்வு தாழ்வு காண்பதும் நம்மை ஒருவன் பாவி என்று அழைப்பதும் மடைமை" என்று சீறி எழுவார் விவேகாநந்தர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உணவிட வேண்டிய தேவையைப் பாரதியார் பாடும் போது, "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்பார். ஆன்மீகப் பெரியாரான விவேகாநந்தரோ "இவ்வுலகில் மனிதனுக்கு உணவளிக்காமல் விண்ணுலகில் நிலையான பேரின்பத்தை அளிக்கப் போகும் இறைவனை நான் நம்பவில்லை" என்பார்.

"பட்டினியால் வாடும் இலட்சக்கணக்கான பாமர இந்தியர்களைப் பற்றிய நினைவு தன் தசையையும் குருதியையும் ஒடுக்குகிறது. அவர்களைப் பற்றிய கவலை தன்னை ஊன் உறக்கமில்லாது போகச் செய்து பைத்தியமாகவே அடிக்கிறது" என்றும் கூறுவார் விவேகாநந்தர். பன்னிரண்டு ஆண்டுகள் கால்நடையாகவே இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றி அலைந்தும் இந்நாட்டு மக்களின் வறுமைக்கும் பசிப்பிணிக்கும் தீர்வு காண வழிதெரியாமல் பரிதாபத்துக்குரிய இந்த மக்களுக்கு நல்லதோர் தீர்வு கிடைக்குமா என்று தேடியே தான் அமெரிக்காவிற்குச் சென்றதாக அவர் கூறுவார். "மதங்களின் பெருமன்றத்தைப் பற்றி எனக்கென்ன கவலை? ஒரு பிடி சோற்றுக்காக அலைபவனிடம் மதபோதனை செய்தல் கொடிய பாவம்" என்றெல்லாம் அவர் பேசுவார்.

"சுயநலமற்ற áறு இளைஞர்கள் பாமரரின் பசிப்பிணி போக்கவும் அவர்களது அறியாமை இருளை அகற்றவும் முன் வந்தால் போதும். இங்கே யுகப் புரட்சியே நடத்திக் காட்டுவேன்" என்பார் விவேகாநந்தர். பாரதியாரும் "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன் வெந்து தணிந்தது காடு" என்ற தன் கவிதை மூலம் தனியொரு மனிதனின் தணியாத உணர்வு தாகம் புரட்சியே நடத்த முடியும் என்று மெய்ப்பிப்பார்.

பாரதியார் விவேகாநந்தர் இருவரையுமே நான் நம்பிக்கையின் ஊற்றுக்களாக நல்லுணர்வின் வித்துக்களாகத்தான் காண்கிறேன். உலக அமைதிக்கும் ஆன்ம ஒருமைக்கும் நிறைந்த வாழ்விற்குமான வழிகாட்டிகளாக இவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ளுதல் வேண்டும்.
| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?