<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

2.7.04

பாரதியாரும் விவேகாநந்தரும் 

இது எனது இருபத்தைந்தாவது பதிவு. எனக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய என்னுடைய பழைய கட்டுரைகள் எதையாவது வெளியிட எண்ணிய போது 1988 சனவரியில் என் நண்பர் நடத்திய சிற்றிதழ் ஒன்றில் நான் எழுதிய இந்தக் கட்டுரை கிடைத்தது. ('சுருதி' என்ற பெயரில் அவரால் மூன்றே இதழ்களைத் தான் வெளியிட முடிந்தது) பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை என்றெல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் நான் படித்தவற்றையும் கேட்டவற்றையும் தொகுத்து எழுதப்பட்டது இது.

********************

ஒருவர் கவிக்குயில். மற்றவர் அருட்புனல். அவர் நடத்தியது இல்லறம். இவரை நாடியதோ துறவறம். அவரது எண்ணங்களைப் பெரிதும் ஈர்த்தது அரசியல் வானம். இவரை ஈர்த்ததோ ஆன்மீக ஞானம். இருப்பினும் என்ன? மனித நேயத்தில், நாட்டுப்பற்றில், நெஞ்சத் துணிவில், நேர்மை உணர்வில் இருவரது நோக்கும், பேச்சும், செயலும் ஒன்றே. "உயர்ந்த மனங்கள் ஒன்றாகச் சிந்திக்கும்" என்ற கூற்று இவர்கள் இருவருக்குமே மிகப் பொருந்தும்.

அடிமைத் தளையால் தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் பாழ்பட்டு நின்ற பாரதத்தில் வல்லமையின் வடிவங்களாய், இருளகற்றி ஒளியேற்ற வந்த இணையற்ற மானுடர்கள் பாரதியாரும் விவேகாநந்தரும். தேர்ந்த சிந்தனை, தெளிந்த நல்லறிவு போன்ற மாமனிதரின் மகோன்னதப் பண்பு நலன்களையெல்லாம் தன்னிடத்தே கொண்ட இந்த இருவருமே இன்றைய இளைஞன் ஒவ்வொருவனையும் நெறிப்படுத்த வல்ல வழிகாட்டிகள் - ஆசான்கள் - என்றால் அது மிகையில்லை.

இந்த áற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவை இருள் மூடிக் கிடந்தது. சாதிப்பித்து சமயவெறி பசிப்பிணி படிப்பறிவின்மை என்று பாரதத்தில் வேரோடிக் கிடந்த நோய்க் கொடுமைகள் ஏராளம். அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்டு உலாவித் திரிந்த ஊமைச்சனங்களே பாரத புத்திரராய்ப் பவனிவந்த பரிதாபக் காலம் அது. வெள்ளையன் வீசிய பிச்சைக் காசுகளுக்காகவும் சில்லறைச் சலுகைகளுக்காகவும் வாலை ஆட்டியபடி தன் ஆன்மாவை மனத்தை உடலை மட்டுமல்ல இந்த மண்ணின் மரபையும் மாண்பையும் மதிப்பையும் விலைபேசிக் கொண்டிருந்தது அன்று இங்கிருந்த படித்த வர்க்கம்.

காலங்காலமாக இங்கே வேரூன்றி வாழ்ந்த நமது மரபும் வாழ்க்கை நெறியும் அந்நிய மோகத்தால் சோதனைக்குள்ளானது. எத்தனையோ புயல்களைக் கடந்து நிலைபெற்ற நமது புராதன நெறிகள் பொய்யர்களால் திரித்துரைக்கப்பட்டு அவற்றின் அடிப்படையே தகர்க்கப்படும் பரிதாப நிலை ஏற்பட்டது. மெய் எது? பொய் எது? சரி எது? தவறு எது? என்று பிரித்துணரும் அறிவார்ந்த ஆய்வு உணர்ச்சியையே அன்று மேலைக்கல்வி மழுங்கடித்து விட்டது. நம்மை வெறும் தலையாட்டி பொம்மைகளாய், ஆண்மையற்ற ஜடங்களாய், ஆள்பவரின் கைப்பாவையாய், வார்த்தைகளைப் பெயர்த்து எழுதும் கணக்கர்களாய் ஆங்கிலக் கல்வி ஆக்கி வைத்திருந்தது.

இத்தகைய நிலையில்தான் விவேகானந்தர், பாரதியார் என்ற இரண்டு விடிவெள்ளிகள் கிழக்கே வங்கத்திலும் தெற்கே தமிழகத்திலும் தோன்றினர். அவர்களது தாக்கம் அன்றைய இளைஞனுக்கு ஆண்மை அளித்ததும், அறியாமை இருளை அகற்றி வைத்ததும் உலகறிந்த உண்மை. வழி தெரியாத குருடர்களாய் வாழ்ந்த அடிமை இந்தியர்கள் தம் ஆன்ம வாழ்விலும் நாட்டுப்பற்றிலும் நம்பிக்கையோடு பின்பற்றத் தக்க வழிகாட்டிகளாய் ஒளிவிளக்குகளாய் அவர்கள் விளங்கினர்.

இவர்கள் இருவரிடையே உள்ள தலையாய ஒற்றுமை அச்சத்திற்கும் கோழைத்தனத்திற்கும் எதிரான போராட்டமே. "உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை" என்று பாடிய பாரதி தன் பாப்பா பாட்டில் பாடுவார்:
“பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயம் கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”

இதையே விவேகாநந்தர் தன் சொற்பொழிவில் “என்னால் எந்தக் குறைபாட்டையும் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் கோழைத் தனத்தை மட்டும் தாங்க முடியாது. கோழைத்தனத்தை விடப் பெரிய பாவம் வேறு எதுவும் இல்லை. ஒருவன் அநியாயமாக உன்னை ஓர் அடி அடித்தால் நீ சீறி எழுந்து பத்து அடிகள் திருப்பித்தர வேண்டும். அதுதான் ஆண்மை. இறந்துபடும் போதும் தீரமாகப் போராடி இறந்து போவதையே நான் விரும்புகிறேன். கோழையாக வாழ்வதை அல்ல” என்று கூறுவார்.

கடவுளின் பெயராலும் அரசியல் அதிகாரத்தின் பெயராலும் நடத்தப் பட்ட எல்லா வகைச் சுரண்டல்களையும் எளியவர்கள் ஏமாற்றப் படுவதையும் இருவரும் முழுமூச்சுடன் எதிர்த்தனர். அக்கிரமத்திற்குத் துணை போகும் படித்தவர்களையும் அவர் தம் போலிச் சட்ட நீதி áல்களையும் கிழித்தெறியவே பாஞ்சாலி சபதம் பாடினார் பாரதியார். “பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்பார்.

ஏழை எளியவர்கள்பால் தம் இதயம் நிறைந்த நேசத்தையும் அன்பையும் கருணையையும் கொண்டிருந்த இவர்கள் இருவருக்குமே வாழ்க்கைத் தத்துவமாய் இருந்தது மனித நேயமும் மனித இன மேம்பாடும் தான். மனிதனை மிருகமாக்கும் மூடப் பழக்க வழக்கங்களையும் தீண்டாமை போன்ற கீழ்த்தரமான கொடுமைகளையும் தம் வாழ்நாள் எல்லாம் இவர்கள் எதிர்த்துப் போராடியது நாம் நன்கறிந்த செய்தி.

பொய்மையை, மாய்மாலங்களை, வேடங்களை, அறியாமையை உடைத்தெறியும் உண்மையின் உரத்த குரலாக இருவருமே திகழ்ந்தனர். போலிச்சடங்குகளை எள்ளி நகையாடி விவேகாநந்தர் பேசுவார்: "தண்ணீரை எந்தக் கையில் ஏந்திக் குடிக்க வேண்டும்.. எத்தனை முறை கைகழுவ வேண்டும்.. வாய் கொப்பளிப்பது ஐந்து முறையா இல்லை ஆறு முறையா.. என்பன போன்ற பொருளற்ற காரியங்களைப் பற்றி விவாதித்தும் இவற்றைப் பற்றிய அறிவு வளம் சார்ந்த கருத்துக்களை எழுதியும் பலர் காலம் கழிக்கிறார்கள். இத்தகையவர்களிடம் பயனுள்ள எதை நாம் எதிர் பார்க்க முடியும்?"

"நம் சமயம் அடுப்பங்கரை. சமயற் பானை நம் கடவுள். என்னைத் தொடாதே நான் புனிதமானவன் என்பது நம் மதம். இன்னும் ஒரு áற்றாண்டு காலம் இது நீடிக்குமானால் நாம் ஒவ்வொருவரும் பைத்தியக்கார விடுதியில் இருப்போம். நாம் அனைவரும் ஆண்டவனின் அன்புக் குழந்தைகளாக இருக்கும் போது நம்மிடையே உயர்வு தாழ்வு காண்பதும் நம்மை ஒருவன் பாவி என்று அழைப்பதும் மடைமை" என்று சீறி எழுவார் விவேகாநந்தர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உணவிட வேண்டிய தேவையைப் பாரதியார் பாடும் போது, "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்பார். ஆன்மீகப் பெரியாரான விவேகாநந்தரோ "இவ்வுலகில் மனிதனுக்கு உணவளிக்காமல் விண்ணுலகில் நிலையான பேரின்பத்தை அளிக்கப் போகும் இறைவனை நான் நம்பவில்லை" என்பார்.

"பட்டினியால் வாடும் இலட்சக்கணக்கான பாமர இந்தியர்களைப் பற்றிய நினைவு தன் தசையையும் குருதியையும் ஒடுக்குகிறது. அவர்களைப் பற்றிய கவலை தன்னை ஊன் உறக்கமில்லாது போகச் செய்து பைத்தியமாகவே அடிக்கிறது" என்றும் கூறுவார் விவேகாநந்தர். பன்னிரண்டு ஆண்டுகள் கால்நடையாகவே இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் சுற்றி அலைந்தும் இந்நாட்டு மக்களின் வறுமைக்கும் பசிப்பிணிக்கும் தீர்வு காண வழிதெரியாமல் பரிதாபத்துக்குரிய இந்த மக்களுக்கு நல்லதோர் தீர்வு கிடைக்குமா என்று தேடியே தான் அமெரிக்காவிற்குச் சென்றதாக அவர் கூறுவார். "மதங்களின் பெருமன்றத்தைப் பற்றி எனக்கென்ன கவலை? ஒரு பிடி சோற்றுக்காக அலைபவனிடம் மதபோதனை செய்தல் கொடிய பாவம்" என்றெல்லாம் அவர் பேசுவார்.

"சுயநலமற்ற áறு இளைஞர்கள் பாமரரின் பசிப்பிணி போக்கவும் அவர்களது அறியாமை இருளை அகற்றவும் முன் வந்தால் போதும். இங்கே யுகப் புரட்சியே நடத்திக் காட்டுவேன்" என்பார் விவேகாநந்தர். பாரதியாரும் "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன் வெந்து தணிந்தது காடு" என்ற தன் கவிதை மூலம் தனியொரு மனிதனின் தணியாத உணர்வு தாகம் புரட்சியே நடத்த முடியும் என்று மெய்ப்பிப்பார்.

பாரதியார் விவேகாநந்தர் இருவரையுமே நான் நம்பிக்கையின் ஊற்றுக்களாக நல்லுணர்வின் வித்துக்களாகத்தான் காண்கிறேன். உலக அமைதிக்கும் ஆன்ம ஒருமைக்கும் நிறைந்த வாழ்விற்குமான வழிகாட்டிகளாக இவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ளுதல் வேண்டும்.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?