<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

14.2.14

பாரம்பரிய மருத்துவர்களைப் பற்றிய விபரங்களை தொகுத்திட வேண்டும் 


காரைக்குடி கழனிவாசலில் பெரியசாமி என்றொரு பரம்பரை மருத்துவர் மஞ்சள் காமாலைக்கு மருந்து கொடுக்கிறார்.. பல தலைமுறைகளாக அவரது குடும்பத்தார் தொடர்ந்து இந்த மருந்தைக் கொடுத்து வருகிறார்கள்.
தமிழகம் முழுவதிலும் இருந்து தினமும் பலர் அவரைத் தேடி வந்து மருந்து வாங்கிச் செல்கின்றனர். பெரும்பான்மையானவர்களுக்கு ஒரே ஒரு வேளை மருந்து போதும். நோய் மிகவும் முற்றி இருந்தால் இரண்டு வேளை சாப்பிட வேண்டும்

பெரிதாக பத்தியம் எதுவும் இல்லை. இளநீர் கரும்புச் சாறு போன்றவற்றை மட்டும் தவிர்க்கச் சொல்கிறார். நிச்சயமாக குணம் கிடைப்பதால் அவரைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு நான் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்ட போது அவரிடம் மருந்து வாங்கி உட்கொண்டேன். மருந்து சாப்பிட்ட அன்று பல முறை வயிற்றுப போக்கு  ஏற்பட்டது. (40.. 50 முறை). மிகவும் சோர்வடைந்து போனேன். ஆனால் அதன் மூலம் உடலில் இருந்த கழிவுகள் எல்லாம் வெளியேறி உடல் நோயில் இருந்து மீண்டது. 

முழுவதும் குணமடைந்து சாதாரணமாக நடமாட சுமார் ஒருமாதம் ஆனது.
ஆங்கில மருத்துவத்தில் மஞ்சள் காமாலைக்கு மருந்தே இல்லை. ஆங்கில மருத்துவர்களும் Himalaya போன்ற ஆயுர்வேத மருத்துவ நிறுவனங்களின் Liv52 போன்ற மருந்துகளைத்தான் பரிந்துரைக்கின்றனர். அதை விட பாரம்பரிய மருத்துவர்களான பெரியசாமி போன்றவர்களின் மருந்து விரைவாகவும் நிச்சயமாகவும் குணமளிக்கிறது.

இதைப் போலவே எனது உறவினர் ஒருவர் எதோ பூச்சி கடித்ததால் உடல் முழுவதும் அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டு பார்க்கவே சகிக்க முடியாத அளவு தோல் பாதிப்புக்கு உள்ளானார். சென்னை மைலாப்பூரில் மிகப் பிரபல தோல் நோய் நிபுணர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றும் நோய் முற்றியதே அன்றிக் குறையவில்லை. 

சுமார் 15, 20 நாட்கள் அல்லோபதி மருந்து சாப்பிட்டும் குணமாகாத நிலையில் பிள்ளையார்பட்டியை அடுத்த மருதங்குடி என்ற கிராமத்தில் வண்டு கடி வைத்தியர் மாணிக்கம் என்பவரிடம் பாரம்பரிய நாட்டு மருந்து வாங்கி கடும் பத்தியத்துடன் மூன்று வேளைகள் சாப்பிட்டார்.
இந்த மருந்தை சாப்பிடும் போது வெந்நீர் மட்டுமே பயன்படுத்த வேண்டுமாம். கஞ்சியும் உப்பும் மட்டுமே உட்கொள்ள வேண்டுமாம். 

இவ்வளவு கடுமையான பத்தியம் இருந்த போதும் மூன்று வேளைகள் இரண்டு நாட்கள் மருந்து உட்கொண்டதில் பல நாட்களாக இருந்த அரிப்பு நீங்கி புண்கள் ஆறி தோல் நலம் பெற்றது. இது என்ன மந்திரமா என்று நினைக்கும் அளவு அந்த மருந்தின் செயல் திறன் இருந்தது.

மெத்தப் படித்த அல்லோபதி மருத்துவரான ஒரு நண்பரிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். எல்லா மருத்துவர்களையும் போலத்தான் அவரது எதிர்வினையும் இருந்தது. இவையெல்லாம் அறிவியல் பூர்வமாக சரியான முறைகள் இல்லை என்பதுதான் அவரது வாதம்.

ஏன் இல்லை என்று நான் கேட்டேன். பல நூறு ஆண்டுகளாக பல ஆயிரம் மனிதரிடம் Trial and error முறையில் சோதித்து வெற்றி கண்ட மருத்துவ முறைகளைத்தானே இவர்கள் பின்பற்றுகிறார்கள். 

அல்லோபதி மருத்துவத்தில் எலிக்கும் குரங்கிற்கும் Trial and error முறையில் மருந்து கொடுத்து சோதிப்பது சரியென்றால் இவர்களும் அதே அறிவியல் முறையில் தானே காலம் காலமாக மருந்து கொடுக்கிறார்கள்?

இந்தப் பாரம்பரிய மருத்துவர்களின் குடும்ப ரகசியமாகப் பின்பற்றப்படும் மருந்துகள் அவர்களது அறிவுச்சொத்து (Intellectual Property right) அதனை அவர்களாக விரும்பினால் அன்றிப் பிறர் யாரும் தெரிந்து கொள்ள முடியாது.

ஆனால் இத்தகைய பாரம்பரிய மருத்துவர்கள் யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள் என்ற விபரங்களைத் தொகுப்பது பலருக்கும் பலனளிக்கும். 

நீங்கள் அறிந்த உண்மையான சேவை மனப்பாங்குள்ள பாரம்பரிய மருத்துவர் எவரும் இருந்தால் அந்த விபரங்களைப் பின்னூட்டத்திலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ நான் அறியத் தருவீர்களா? 
| (2) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?