<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

17.7.04

யாருடைய தவறு?  

 

அன்றாடம் இரவில் நான் எங்கள் ஊரில் காணும் காட்சிகளில் ஒன்று: சுமையுந்துகள் சிலவும் சிறு சுமையுந்துகள் பலவும் ஒரு முகப்பு விளக்கை மட்டுமே எரிய விட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருப்பது. வேறு விளக்குகள் ஏதுமில்லாத கிராமத்துச் சாலைகளில் எதிரில் வருபவர், இந்தச் சுமையுந்துகளை இருசக்கர வாகனங்களாக நினைப்பதற்கும் அதனால் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் மிகுதி. எதனால் இப்படி ஒருவிளக்கோடு ஒட்டுகிறார்கள் என்பது எனக்குப் புரிந்ததே இல்லை.  இரண்டு முகப்பு விளக்குகளையும் எரியவிடாத காரணம் மின்கலனைப் பாதுகாக்கவா இல்லை விளக்கின் தேய்மானத்தைத் தவிர்க்கவா என்பதும் தெரியவில்லை.

ஒருமுறை நள்ளிரவில் மிக அவசரமாகப் பக்கத்து ஊரில் உள்ள உறவினருக்குத் தகவல் தெரிவிக்கச் சென்று கொண்டிருந்த நானே அப்போதிருந்த அவசரத்தில், ஒரு விளக்கு மட்டும் எரியவிட்டு வந்து கொண்டிருந்த ஒரு சுமையுந்தில் மோத இருந்தேன். ஒரு விநாடி விழிப்பில் அன்று தப்பித்தேன். நான் மோத இருந்ததைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அந்த சுமையுந்து என்னைக் கடந்து சென்றது.

அதன் பிறகு பல முறை அவ்வாறு ஒரு முகப்பு விளக்கோடு ஓடும் சுமையுந்துகளை நிறுத்தி ஏன் ஒரு விளக்கு எரியவில்லை என்று கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் அதற்கான பதில் “உன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்பதாகவோ அல்லது இன்னும் தரக்குறைவான பேச்சாகவோ தான் இருந்திருக்கிறது.

போக்குவரத்துக் காவல்துறை என்று ஒன்று எங்கள் ஊரிலும் உள்ளது. அவர்களுக்கெல்லாம் இந்த நிலைமை தெரியாமல் இருக்காது. நிச்சயமாக இது சட்டவிரோதமான செயல்தான்.  இப்படி ஓடும் வண்டிகள் அவர்கள் பார்வையிலும் படும்.  அப்படி மாட்டிக்கொண்டால் இவர்களுக்குக் கொஞ்சம் வருமானம் அவர்களுக்குக் கொஞ்சம் செலவு என்ற வகையில்தான் இந்த நாட்டில் சட்டத்தின் பராமரிப்பு இருக்கிறது.

சுமையுந்து உரிமையாளர் சமுதாயத்தின் மற்ற எல்லாத் தரப்பையும் போல லாப நட்டக் கணக்குப் பார்க்கிறார். புதிய மின்கலனை மாற்றுவதைவிடக் காவலர் ஒருவருக்கு கொடுக்கும் செலவு குறைவாக இருக்கிறது. அதனால் அவர் தெரிந்தே சட்ட விரோதமாக நடக்கிறார்.

எல்லா மனிதர்களும் சட்டப்படி நடந்தால் காவல்துறையைச் சார்ந்தவர்களுக்கு மாத வருமானம் மட்டும் தானே கிடைக்கும்? எனவே அவர்களும் முறையற்ற செயல்களை வரவேற்கிறார்களோ என்று தான் தோன்றுகிறது.

காவல்துறை என்றில்லை.  அரசுத்துறை அத்தனையும் இப்படித்தான் இருக்கிறது. இதில் ஓரளவுக்காவது ஊழலற்ற துறையாகக் கல்வித்துறை இருந்து வந்திருக்கிறது. பெரும்பகுதி ஆசிரியர்கள் நேர்மைக்கு மதிப்பளிப்பவர்களாக, சட்டப்படி வாழும் நல்ல குடிமக்களாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள்.

கல்வி தனியார் மயமானதும் அங்கும் லாபமே நோக்கமாகக் கொண்ட சுயநலவாதிகள் புகுந்து குழப்ப ஆரம்பித்து விட்டார்கள். கண்ட இடமெல்லாம் நர்சரிப் பள்ளிகளும் மெட்ரிகுலேசன் பள்ளிகளும் வியாபாரக் கூடங்கள் போலத் தோன்றலாயின. அங்கே முதலீடு தேவைப்பட்டது. லாப நட்டக் கணக்குப் பார்ப்பதும், சட்டத்தை மீறி, அதற்காக அதிகாரிகளைச் சரிக்கட்டுவதும் வழக்கமாகியது.

இத்தகைய நிலைமையால் ஏற்பட்ட கொடுமைதான் கும்பகோணத்தில் ஏற்பட்ட துயரமும் என்று எண்ணத் தோன்றுகிறது. அதிகாரிகளின் கவனத்திற்கு வராமல் ஓலைக் கூரையின் கீழே பள்ளி நடத்தியிருக்க முடியுமா? இதில் “எத்தனை பேருக்குப் பங்கு? எத்தனை பேர் தமது செல்வாக்கால் தப்பிவிட்டார்கள்?” என்பதெல்லாம் நமக்குத் தெரியாமலேயே போகக் கூடும்.

ஆனால் அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகளை இழந்து துடிதுடிக்கும் பெற்றோரின் வலியும் வேதனையும் எழுதி மாளாது.

வாழ்வின் முதல் நோக்கம் 'பணம் சேர்த்தல்' என்ற நிலையை நாம் மாற்றியாக வேண்டும். மனிதர்களை நல்லவர்களாக, நேர்மையில் உண்மையில் உளத்துாய்மையில் நல்லொழுக்கத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர்களாக வாழச்செய்ய வேண்டும். உழைப்பில் உயர்வு காணும் உறுதியை ஏற்படுத்தியாக வேண்டும். 'முறையற்ற விதத்தில் ஈட்டும் ஒவ்வொரு காசும் நோய் கண்டு அழியும்' என்ற எண்ணத்தை ஒவ்வொரு இளைஞரின் மனத்திலும் விதைக்க வேண்டும்.

பணத்திற்காக இழிசெயல்கள் செய்பவனை சமுதாயம் ஒதுக்கி வைக்க வேண்டும். தவறான வழியில் பணம் சேர்ப்பவனைப் பெரிய மனிதன் என்று கொண்டாடுவதை விட்டு விட்டு அவனைத் தீண்டத்தகாதவனாய் ஒதுக்க வேண்டும்.

பிறப்பால் அல்ல மனிதத்துவத்தால் மட்டுமே  ஒருவனின் மதிப்பும் மாண்பும் முன்னிறுத்தப்பட வேண்டும்.

அதுவரை ஒட்டு மொத்த சமுதாயமும் தான்  இத்தகைய பேரழிவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?