<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

11.11.04

வலைப்பதிவின் சில பயன்கள் 

"பதினைந்து நிமிடப் புகழுக்காக" நாமெல்லாம் வலைப்பதிவு செய்வதாகப் பிரபலமான ஒருவர் எழுதிய வரிகளைக் கண்டு வலையுலகில் பலரும் கொதித்தெழுந்ததை நாம் கண்டோம். "பிறரது பொருளற்ற கருத்துக்களைப் புறக்கணிப்பது தான் சரி" என்ற நிலையை நான் உட்படப் பல வலைப்பதிவாளர்களும் மேற்கொண்டோம். இந்த வலைப்பதிவுகளால் ஏதாவது பயன் உள்ளதா என்று இப்போது ஓய்வாக நினைத்துப் பார்க்கிறேன்..

நமது பிறப்பும் வளர்ப்பும் வாழும் சூழலும் பெற்றோர் ஆசிரியர் நண்பர்களின் தாக்கமும் நமது இளமைப் பருவம் வரை நமது சிந்தனைகளுக்குக் காரணமாக அமைந்தாலும் வளர்ந்த ஒரு மனிதனாக நமது வாழ்நாள் முழுவதும் ஊடகங்கள் தான் நமக்குள்ளே கருத்துக்களை உருவாக்குகின்றன. நமது எண்ணங்களை வடிவமைக்கின்றன.

ஆனால் அச்சு ஊடகங்கள் (இன்றைய நிலையில் தொலைக்காட்சியும்) சில தனிமனிதர்களின்.. சில பணம் படைத்த முதலாளிகளின் ..கைப்பாவைகள் என்றும் அவை தமது சுயநல நோக்கிற்காக நம்மைக் காலங்காலமாகத் தவறான திசையிலேயே அழைத்துச் செல்கின்றன என்பதும்..தான் வலைப்பதிவுகளின் தாக்கத்தால் எனக்குத் தோன்றுவது.

இதற்குச் சான்றாகப் பெரியாரைப் பற்றி நான் கொண்டிருந்த கருத்துக்கள். சைவமும் தமிழும் இருகண்ணெனக் கருதும் குடும்பத்தில் பிறந்தவன் நான். தமிழனைக் காட்டுமிராண்டி என்று சொல்லிய ஒருவர் ஆன்மீகத்திற்கு எதிராகவும் இருந்தார் என்று தெரியவந்தால். அவரைப் பற்றியும் அவரது கருத்துக்கள் பற்றியும் அறிந்து கொள்ள என்ன ஆர்வம் இருக்கும்? அவரைப் பற்றிய தவறான புரிதல் தான் மீண்டும் மீண்டும் பல வகைகளில் இந்த ஊடகங்கள் வாயிலாக நான் அறிய வந்தது.

அவர் வெள்ளையனை இந்த நாட்டை விட்டுப் போய்விடாதே என்று கெஞ்சியதாகவும் மிகுந்த கஞ்சத்தனத்தோடு பணம் சேர்ப்பதே குறிக்கோளாய் வாழந்ததாகவும் இந்த ஊடகங்கள் எனக்குள் ஒரு கருத்தை உருவாக்கி வைத்திருந்தன.

வலைப்பதிவுகளில் தங்கமணி போன்றவர்களின் பதிவுகளைப் படிக்கும் போது இதன் மறுபக்கம் தெரிய வருகிறது. இன்னும் நிறையப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஓசோவின் மீது இந்த ஊடகவியலாளர்கள் எத்தகைய சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்கள் என்று நாம் அறிவோம். இன்று ஓசோவின் நுால்கள் எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் கடைகள் தோறும் விற்கப்படும் போது அவரது கூற்றுக்கள் எவ்வளவு உண்மையானவை என்றும் மறுக்க முடியாதவை என்றும் தெரிய வருகிறது. நம்மீது திணிக்கப் பட்ட பொய்மைகளை உடைக்க அவர் எவ்வளவு போராடி இருக்கிறார்.

ஒரு சாதாரண மனிதனை வாழ்வின் உண்மைகள் சென்றடைய இன்று வலைப்பதிவுகள் மிகுந்த பயனுடையதாக இருக்கின்றன. இவற்றின் தாக்கம் இன்னும் பரவ வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனின் சரியான சிந்தனையும் பிறர் யாவரையும் அடைய வேண்டும்.

வலைப்பதிவுகள் சுயநலமற்று உருவாக்கப்படுகின்றன. அவற்றில் எழுதுவதால் நமது சமுதாயக் கடமையைச் செய்தோம் என்ற நிறைவு கிடைக்கிறது. பணத்தின் பின்னாலும் புகழின் பின்னாலும் ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு இது புரியாது.

வலையுலகில் உலா வந்ததன் பயனாக நான் படித்த, எனக்குப் பிடித்த சில பதிவுகளைப் பற்றிக் கூற விரும்புகிறேன்:

ஒரு தந்தையின் பாசத்தை இவரை விட நெகிழ்ச்சியாக யாரும் சொல்லிவிட முடியாது. குழந்தைகளைப் பற்றி இவர் பேசும் போதெல்லாம் அதைப் படிக்கும் நாமே உருகிப் போகிறோம். செல்வராஜின் பயணக்கதை

காலங்காலமாகத் தாளிகைகளும் நாளிதழ்களும் நமக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மூடக்கருத்துக்களைத் தப்பெண்ணங்களைக் களைவதற்கு தங்கமணி போன்றவர்களின் எழுத்துக்களை நிறையப் படிக்க வேண்டும். இவரது ஆழமான கருத்துகள் அடங்கிய ஒவ்வொரு கட்டுரையையும் பலமுறை படித்து உள்வாங்கிக் கொள்ள முயல்கிறேன். இவரது பதிவிலிருந்து:
வாழ்வின் முகம் - பாரதி-1
"சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை
தம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்;
மீத்திடும் பொழுதினிலே - நான்
வேடிக்கையுறக் கண்டு நகைப்பதற்கே
கோத்த பொய் வேதங்களும் - மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய்நடையும் - இள
மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் "

அமெரிக்க நாட்டில் மரங்கள் நிறம் மாறினாலும் சரி, ஆப்பிள் தோட்டங்களுக்கோ திருவிழாக்களுக்கோ சென்று வந்தாலும் சரி, அல்லது பிரபஞ்சன் போன்ற பிரபலங்கள் அங்கே வருகை தந்தாலும் சரி அவற்றையெல்லாம் அழகிய தமிழில் எளிய நடையில் சுவைபடத் தருகிறார் சுந்தரவடிவேல். அருந்ததி ராயின் பேச்சை இவர் மொழி பெயர்த்து வழங்கியிருந்ததை பல முறை படித்துவிட்டேன்.

எளிமையான நடை பற்றி அழகான கருத்துக்களை சிவகுமார் சொல்கிறார். அது எப்படி பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை போல எதைப் பற்றி எழுதினாலும் பக்கம் பக்கமாக இவரால் எழுத முடிகிறது என்பது என் வியப்பு. சமையலும் எழுத்தும்

வலைப்பதிவுகளில் நகைச்சுவைக்குப் பஞ்சமா என்ன? இட்லி வடை, குசும்பன் தளங்களில் படித்துச் சுவைக்க நிறையவே உள்ளன நான் வயிறுவலிக்கச் சிரித்த ஒரு துணுக்கு: கணினி.

இவையெல்லாம் சில சான்றுகள் தான். இத்தகைய பல பதிவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டும்....
|
Comments:
செல்வராஜ் - ஒரு தந்தையின் பாசத்தை இவரை விட நெகிழ்ச்சியாக யாரும் சொல்லிவிட முடியாது. குழந்தைகளைப் பற்றி இவர் பேசும் போதெல்லாம் அதைப் படிக்கும் நாமே உருகிப் போகிறோம்.சத்தியமான உண்மை... நானும் பலமுறை உருகியிருக்கிறேன். சிலமுறை என்னிடம் சிலகேள்விகள் எழுப்பி செல்லும்.
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?