<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

13.11.04

வலைப்பதிவுகளில் என்ன செய்யலாம்? 

ஐந்து மாதங்களுக்கு முன்பே வலைப்பூவில் ஆசிரியராகும்படி மதியிடமிருந்து மடல் வந்தது. நேரமின்மையின் காரணமாக நவம்பரில் வாய்ப்பு வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டேன். "காற்றுள்ள போதே துாற்றிக் கொள்ளத் தெரியாதவன்" என்று என்னைப் பற்றிச் சொல்லப்படும் வழக்கமான வார்த்தைகளுக்கு மீண்டும் ஒரு சான்று கிடைத்து விட்டது. ஏற்பட்டு விட்ட மாற்றங்களால் தமிழ்மணத்தில் இந்தப் புதிய அவதாரம் எடுக்கும்படி ஆயிற்று.

ஒளிவிளக்குகள் உங்களை நோக்கித் திருப்பப்படுகின்றன என்று காசி அறிவித்த போது எனக்குள் "பயனில் சொல் பாராட்டு வானை..." என்று திருவள்ளுவர் வந்து எச்சரித்தார். கூடுமானவரை பயனுள்ள பதிவுகளாகவும் முரண்பாடுகள், தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கும் வகையிலும் எழுத முயன்றேன்.

தமிழ்மணம் வலைவாசல் அறிமுகம் இருந்ததால் எப்போதையும் விட நிறையப் பேர் வந்து சென்றனர். சிலர் தமது பொன்னான நேரத்தைச் செலவிட்டு மறுமொழியிடவும் செய்தனர்.

கோபி, நவன், மூர்த்தி, அன்பு, சந்திரவதனா, இராம.கி., செல்வராஜ், சுந்தரவடிவேல், சிவகுமார் போன்று மறுமொழி அளித்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வாரத்தில் தொடங்கிய பலவற்றைப் பற்றி இனிவரும் வாரங்களில் தொடரலாம் என்று எண்ணியுள்ளேன். நினைவாற்றல் பற்றிக் குறைந்தது பத்து வகையான எளிய பயிற்சி முறைகளையாவது சொல்லலாம். உடற்பயிற்சி முறைகளைக் கூறலாம். அழுத்த சமைகலன் போல அறிவியலை அன்றாட வாழ்வில் பயன்படுத்திய இன்னும் பல கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். வலைப்பதிவுகளின் பயன்கள் பற்றி நிறைய எழுதலாம். இவற்றுக்கெல்லாம் இந்த வாரம் ஒரு தொடக்கமாக அமைந்தது குறித்து மகிழ்கிறேன்.

ஆனாலும் இவையெல்லாம் போதாது என்று தோன்றுகிறது. வளர்ந்த தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் தேவைப்படும் குழுக்களுக்கு எடுத்துச் செல்லவில்லையோ என்று தோன்றுகிறது. திறமையாளர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களது ஆற்றல் சரியான திசையில் எடுத்துச் செல்லப்படவில்லை.

சந்தைப்படுத்துதல் தொடர்பாக மீனாக்ஸ் மேற்கொண்டதும், பங்குச்சந்தை தொடர்பாக தமிழ்சசி மேற்கொண்டதும், குவாண்டம் அறிவியலை அறிமுகப்படுத்த சங்கர் மேற்கொண்டதும் சரியான திசையிலான நல்ல முயற்சிகள். பல்வேறு துறைகள் தொடர்பாக அத்துறை வல்லுநர்கள் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளுதல் தமிழ் வலைப்பதிவுகளை மிக உயர்ந்த தளத்துக்குக் கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன். (அடுத்தவருக்கு ஆலோசனை சொல்வதிருக்கட்டும் நீ என்ன செய்தாய் என்று யாரோ முணுமுணுப்பது என் காதுகளில் விழுகிறது.. கொஞ்சம் பொறுங்கள். உருப்படியாக ஏதாவது செய்வேன்.)

வலைப்பதிவாளர்களில் பலரும் கணினி வல்லுநர்கள் தான். ஆனால் இன்று தமிழ்நாட்டில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பி.ஈ., எம்.சி.ஏ., படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் நிலை இவர்களுக்குத் தெரியாது. காலத்துக்கு ஒவ்வாத பாடத்திட்டம், கற்றுக்குட்டிகளான, திறனற்ற ஆசிரியர்கள், மோசடியாய்ப் பணம் பறிக்கும் தனியார் கணினிக் கல்வி நிறுவனங்கள், சரியான வழிகாட்ட யாருமற்றுப் பரிதவிக்கும் மாணவர் கூட்டம்.

அது மட்டுமல்ல. குடும்பச் சொத்தை எல்லாம் விற்று ஒரு பட்டத்தை வாங்கி விட்டால் அதன்பின் மாதம் 2000 அல்லது 3000 சம்பளத்தோடு கிடைப்பது பயிற்சியாளர் அல்லது கெளரவ விரிவுரையாளர் வேலைதான். திறமை இருக்கிறது முயற்சி இருக்கிறது ஆனால் எந்தத் திசையில் செல்வதென்ற வழிகாட்டல் இல்லை. இதன் விளைவாக மரக்கட்டைகளை இழுத்துச் செல்லப் பயன்படும் யானைகள் நம்மைச் சுற்றி... நிலைமை இன்னும் மோசமாகுமோ என்றும் அச்சமாக உள்ளது.

தமிழ்க் கம்ப்யூட்டர் போன்ற இதழ்களில், வினாவிடை பகுதிகளில் என்ன பிராஜெக்ட் செய்வது என்று புலம்பும் மாணவர் தொகைதான் மிகுதி.. அவர்களும் எதையோ எழுதுகிறார்களேயன்றிச் சரியான வழிகாட்டுதல் இல்லை.

இதையெல்லாம் பார்க்கும் போது, கணினி அறிவியல் கருத்துக் களம் சார்ந்த பதிவொன்று தொடங்கப்பட, ஆர்வமுடையவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வகையில் பத்ரியின் எழுத்துக்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. இன்று பத்ரி தமது வலைப்பதிவில் இவ்வாறு எழுதியுள்ளார் :

"பல இந்தியர்கள் சிலிகான் வேலியில் இருந்துகொண்டு அதிகம் வெளியே தெரியாமல் தகவல் தொழில்நுட்ப உலகையே மாற்றி அமைத்துள்ளனர்.............அவர்களது தொழில்நுட்ப வாழ்க்கையைத் தோண்டித் துருவி அவர்கள் என்ன சாதித்தனர் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அத்துடன் நான் அறிந்து கொண்டதை என் பதிவில் எழுதிப்போடுகிறேன்."

நாட்டு நடப்புகளை, திரைப்படங்களை, புதுக்கவிதைகளைப் பற்றிப் பேசத்தான் நிறையத் தளங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆயினும் நிலைமை மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நாளை இரவுதான் இந்தப் பதிவை வலையேற்றியிருக்க வேண்டும். ஆயினும் பலருடைய கருத்துக்களை அறிவதற்காக முன்னதாகவே இதனை வலையேற்றுகிறேன். நாளைக்குள் பகிர்ந்து கொள்ள இன்னும் பல கருத்துக்கள் தலைக்குள் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கும் வாய்ப்பிலும் நிச்சயமாக ஜெயேந்திரர் பற்றியெல்லாம் எழுதி உங்கள் நேரத்தை வீணடித்து விடமாட்டேன்.
|
Comments:
அன்புள்ள ஆச்சிமகன்,

இந்தப் பதிவும் மிகவும் நன்முறையில் எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் எழுப்பும் கேள்வியும் முக்கியமானது. முன்னரும் பல முறை எழுந்த ஒன்று. சென்ற ஏப்ரல் மாத வாக்கில் இது போன்றே ஒரு எண்ணம் உருவாகி துறை சார் வலைப்பதிவுகளும், அறிவியல் பதிவுகளும் தனியே உருவாக்க வேண்டும் என்னும் முனைப்புடன் இரு முயற்சிகள் உருவானது (வெங்கட்டின் சங்கம் முயற்சி; மற்றும் ஏறக்குறைய சுந்தரவடிவேலுவின் தனி முயற்சியாக அறிவியல் பதிவு). இரண்டும் பலபேர் கலந்து பகிர்ந்து கொள்ளும் கூட்டு முயற்சியாக அமைந்திருக்க வேண்டும் என்றாலும் போதிய ஆதரவு இல்லாமல் வாட்டம் அடைந்திருக்கின்றன. ஓரிரு கருத்துக்கள் எழுதியதைத் தவிர நானும் உருப்படியாக ஒன்றும் செய்துவிடவில்லை. இவையெல்லாம் இன்னும் அதற்கான காலம் கனிந்து வரவில்லையோ என்னும் ஐயத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. நானும் என் வலைப்பதிவிலேனும் சில துறை சார் கட்டுரைகளைப் பதிய வேண்டும் என்று எண்ணிய எண்ணமே இன்னும் செயல்படுத்த முடியாமல் கிடக்கிறது. இருந்தாலும் இது போல் அவ்வப் போது கேள்விகள் எழுவது தான் அந்த இலக்கைச் சென்றடைய உந்துசக்தியாக அமையும். அந்த வகையில் உங்கள் பதிவு அமைந்திருக்கிறது. நன்றி.
 
திரு.செல்வராஜ் அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
 
நன்றி செல்வராஜ், மூர்த்தி.

இந்த ஒரு வாரம் சற்று மாறுபட்டு இருந்தது. "இந்த வார நட்சத்திரம்" என்று அறிவிக்கப் பட்டதாலேயே ஒரு பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது என்ற எண்ணத்தோடு நிறைய எழுதத் தோன்றியது. ஆயினும் பின்னோக்கிப் பார்க்கும்போது இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

இந்த வாய்ப்பை வழங்கிய மதி, காசி இருவருக்கும் மறுபடியும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆச்சிமகன் நன்றாகச் செய்திருந்தீர்கள்.
பல பயனுள்ள தகவல்களையும் தந்தீர்கள். உங்களது இந்த ஆலோசனை கூட வரவேற்கத் தக்கதே.
காலப் போக்கில் இவைகள் கை கூடும் என்று நம்புகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா
 
உங்களுடைய வாரம் மிக சிறப்பாக அமைந்தது. பல புதிய விவரங்கள் கிடைத்தது. கணினி அறிவியல் கருத்துக் களம் சார்ந்த பதிவொன்று தொடங்கப்படவேண்டுமென்பது நல்ல கருத்து. என்னையும் பலகாலமாக அரிக்கும் விஷயமிது. கல்லூரியில் படிப்பவர்களை பல வகையிலும் தயார்படுத்தவேண்டியிருக்கிறது. அதற்கு உதவிசெய்யும் முகமாக ஏதாவது செய்யவேண்டும், செய்வோம்.
 
நன்றாக பொறுப்புடன் செய்தீர்கள், (இடையில் கொண்டம் பரபரப்பான செய்திகள் கூட்டத்தை இழுத்துக்கொண்டுபோனாலும்!) மேலும் நன்று எழுதிவர வாழ்த்துக்கள். நன்றி.

அன்புடன்,
-காசி
 
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி அன்பு, காசி
 
ஆச்சிமகன்,

சிறப்பான வாரம்.

அறிவியல் உண்மைகள் (தும்மல் வருவது எதனால்...) பற்றிய பதிவுகள் சிறுவர் வார இதழ்களின் தரத்திற்கிணையானவை (தங்கள் மகன் எழுதியதென்று எண்ணுகிறேன்)

தொடருங்கள்...
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?