<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.11.04

என்னைப் பற்றிச் சில 

"இந்த வார நட்சத்திரமாகத்" தமிழ்மணத்தில் என்னையும் என் மகனையும் அறிவித்திருப்பதாகவும் எனவே நாங்கள் சுய அறிமுகம் செய்து கொள்ள வேண்டும் என்றும் மதியும் காசியும் தெரிவித்திருந்தார்கள். எனவே என்னை/எங்களைப் பற்றிச் சில வரிகள்:


காரைக்குடி அருகே உள்ள கண்டனுார் சிட்டாள் ஆச்சி நினைவுப் பள்ளியில் பள்ளிப் படிப்பு. அழகப்பா கலைக் கல்லுாரியில் இயற்பியல் பட்டப் படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்பு. 20 ஆண்டுகளாக ஆசிரியப் பணி. பிறந்ததும் வளர்ந்ததும் வாழ்வதும் எல்லாம் காரைக்குடியிலும் அதனைச் சுற்றியுள்ள சிற்றுார்களிலுமே. பத்து ஆண்டுகளாகக் கணினியோடும் ஐந்து ஆண்டுகளாக இணையத்தோடும் அறிமுகம்.

என் மகன், விவேக் எட்டாம் வகுப்பில் இங்குள்ள பள்ளியொன்றில் படிக்கிறான். மூன்று வயதிலேயே கணனி அறிமுகம். பெரும்பாலும் கணினி விளையாட்டுக்கள் தான் அவனது பொழுது போக்கு. நான் வலைப்பதிவில் எழுதத் தொடங்கியதும் அவனும் வலைப்பதிவொன்றைத் தொடங்கினான். அவனது பதிவில் அவன் எழுதுவது எல்லாம் அவனது நோக்கம் தான். சில சமயங்களில் எழுத்துப் பிழைகளைத் திருத்துவது மட்டுமே எனது குறுக்கீடு. அவனுக்கு ஒரு தமக்கை இருப்பதால் அவனைச் 'சின்னப்பையா' என்று தான் அழைப்போம். எனவே அவன் அந்தப் பெயரிலேயே எழுதுகிறான்.

என்னை 'ஆச்சிமகன்' என்று அன்போடு அழைத்து வந்தவர் என் தாய்மாமன். என் அம்மாவின் தம்பி. நான் என் பாட்டி வீட்டில் தான் பள்ளிப் பருவம் முழுதும் வளர்ந்தேன். என்னை விட ஆறேழு ஆண்டுகள் மூத்தவர் அவர். தினமும் பாட்டி வீடிருந்த அழகாபுரி என்ற சிற்றுாரில் இருந்து கண்டனுார் பள்ளிக்கு இரண்டு கல் தொலைவு நடந்து சென்றே படித்து வருவோம். எனது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் மிகப் பெரிய துணையாக அவர் விளங்கினார். பிரச்சினைகள் வரும் போதெல்லாம் அவர் பக்கத்தில் இருந்தது மிகப் பெரும் ஆறுதலாக இருந்தது. அவரைப் பற்றிய நல்ல நினைவுகள் மட்டுமே என்னிடம் இருந்தன. என்னைப் பற்றிய பெருமிதமும் அளவற்ற அன்பும் அவரிடம் இருந்தன. ஒரு மருத்துவரின் மடத்தனத்தால் அவர் மிக இளம்வயதில் இறக்க நேர்ந்தது எனக்குள் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியது. அவருக்குப் பிறகு 'ஆச்சிமகன்' என்று என்னைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேச யாருமில்லாத வெற்றிடத்தை உணர்ந்தேன். வலைப்பதிவில் நாமும் எழுதலாம் என்று எண்ணிய போது 'ஆச்சிமகன்' என்ற பெயர்தான் எனக்குள் தோன்றியது. எனவே அப்பெயரில் எழுதத் தொடங்கினேன்.

தமிழார்வம் என்பது என் தாயும் பாட்டியும் பாடிய தாலாட்டில் தொடங்கியது. சிட்டாள் ஆச்சி நினைவுப் பள்ளியிலும் அழகப்பா கலைக் கல்லுாரியிலும் படித்ததும் தமிழார்வம் வளரக் காரணம். அழகப்பா கலைக் கல்லுாரியில் தேசிகனார் என்ற மகத்தான தமிழறிஞரிடம் படிக்கும் பேறு பெற்றேன். சிறுவயதில் கதை படிப்பதும் (மரபுக்) கவிதைகளை மனப்பாடம் செய்வதுமே பிடித்த காரியங்கள்.

கல்லுாரியில் இயற்பியல் பட்ட வகுப்பில் நாராயணசாமி என்ற அற்புதமான பேராசிரியர் எங்கள் வாழ்வைப் பண்படுத்தினார். அறிவியலைப் பட்டத்திற்கான வெறும் படிப்பாக இல்லாமல் வாழ்வுக்கான அடிப்படைத் தேவையாகக் கருதச் செய்தார். ஒழுங்கை, கட்டுப்பாட்டை உள்ளார்ந்த பண்புகளாக வளர்த்தெடுத்தார்.
இத்தகைய நல்ல ஆசிரியர்கள் இல்லையென்றால் நாம் ஒன்றுமேயில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

யோகாசனம், தியானம், நாட்டு மருத்துவம், உளவியல், மின்னணுவியல், கணினி வன்பொருள் நிறுவுதலும் பராமரிப்பும், ஒளிப்படக்கலை போன்ற பல துறைகளிலும் ஈடுபாடு உண்டு. இவ்வளவுதான் என்னைப் பற்றி.
|
Comments:
காரைக்குடிங்களா? நல்லது..நலமா இருக்கீங்களா? அந்த செக்காலை ரோட்ல நம்ம கூட்டாளி ஒருத்தரு இருக்கார். சின்ன வயசுல வந்தது. நல்லா எழுதறீங்க..நிறைய எழுதுங்க...

அன்புடன்,
சகோதரர்.
 
நன்றி மூர்த்தி.
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?