<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

10.11.04

நினைவாற்றல் வளர்ந்திட....1 

ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. பேசுபவர் உங்கள் உறவினர். தமது புதிய தொலைபேசி எண்ணை அவர் உங்களுக்குத் தெரிவிக்கிறார். உடனடியாகத் தாள், எழுதுகோல் எதுவும் கையில் கிடைக்காதால் அவர் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லச் சொல்ல நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள். பேசி முடித்ததும் எண்ணைத் தாளில் வடிப்பதற்குள் அடுத்தடுத்த பணிகள் உங்களை ஆக்கிரமிக்கின்றன. எல்லா வேலைகளையும் முடித்து எண்ணை எழுத ஆரம்பிக்கும் போது அது மறந்து போகிறது.

மறக்காமலே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஏன் இந்த மறதி என்று நம் மீதே கோபம் வருகிறது. ஆனால் மறதி என்பது நமக்குக் கிடைத்த நல்ல வரம் என்று சற்று சிந்தித்தால் புரியும். நேற்று சாப்பிட்ட உணவு அதற்கு முந்தைய நாள் உடுத்திய உடை என்றெல்லாம் மறக்காமல் நினைவில் வைத்திருந்து ஆகப் போவதென்ன. பயனற்றவை நமது நினைவில் இருந்து நீக்கப் படத்தான் வேண்டும். பயனுள்ளவை தொடர்ந்து நிலைத்திருக்கவும் வேண்டும்.

பயனுள்ளவை தொடர்ந்து நினைவில் இருக்க நாம் சில எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அதற்காகத் தான் இந்தத் தொடர்.

நினைவாற்றலைத் தற்காலிக நினைவாற்றல் என்றும் நிரந்தர நினைவாற்றல் என்றும் இரண்டு வகைப் படுத்துகிறார்கள். தொலைபேசி எண், மளிகைக் கடையில் வாங்க வேண்டிய பொருட்கள் இவையெல்லாம் சிறிது நேரம் மட்டும் (குறித்த வேலை முடியும் வரை) நம் நினைவில் இருப்பதால் தற்காலிகமானவை. வாழ்வில் நடந்த நல்ல அல்லது துயர நிகழ்வுகள் நாம் பெற்ற பாராட்டு அல்லது வசை... நிரந்தரமானது.

ஒரு மனிதனால் ஒரு நேரத்தில் 5 முதல் 9 எண் வரை அவனது தற்காலிக நினைவில் வைத்திருக்கலாம். இதைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு சிறிய வேடிக்கை விளையாட்டு விளையாடலாம்.

இருவர் விளையாடும் எண் விளையாட்டு இது. உங்களோடு நண்பர் .. வாழ்க்கைத் துணைவர் .. போன்ற யாரையாவது உடன் அழைத்துக் கொள்ளுங்கள். இருவரிடமும் ஒவ்வொரு தாளும் எழுதுகோலும் தேவை. விளையாட ஆரம்பிக்கலாமா?

முதலில் உங்கள் தாளில் 4 இலக்க எண் ஒன்றை எழுதிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக 7382.

இதை எழுதிய பிறகு நண்பரிடம் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லுங்கள்

7 .. 3 .. 8 .. 2

நீங்கள் சொல்லி முடித்த பிறகு நண்பர் இந்த எண்ணைத் தம் தாளில் எழுத வேண்டும். சரியாக எழுதியிருக்கிறாரா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நான்கு இலக்க எண்ணை அனைவரும் சரியாக எழுதி விடுவார்கள்.

பிறகு உங்கள் தாளில் 5 இலக்க எண் ஒன்றை எழுதிக் கொள்ளுங்கள்.

(உ..ம்) 94361

முன்பு போல நண்பரிடம் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லுங்கள் சொல்லி முடித்த பிறகு அவர் எழுத ஆரம்பிக்கட்டும்.

இப்படியே 6, 7, 8, 9 இலக்கங்களுடைய எண்களைக் கொண்டு விளையாட்டைத் தொடருங்கள். ஏதாவது ஒரு நிலையில் அவர் நினைவு படுத்த முடியாமல் தடுமாறக் காணலாம். பலரும் 8, 9 இலக்கங்களை நினைவு கூற முடிவதில்லை. 9 இலக்கங்களைத் தாண்டி 10 அல்லது 11 இலக்கம் வரை நினைவில் கொள்வாரானால் அவருக்குப் பெரிதாகப் பாராட்டு விழா நடத்தலாம்.

இப்போது அவரிடம் சவால் விடுங்கள்.. உங்களால் 16, 24, 32 இலக்கங்களுடைய எண்ணைக் கூடத் தவறின்றி நினைவில் இருந்து சொல்ல முடியும் என்று.

அவரை 16 இலக்க எண் ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு படிக்கச் சொல்லுங்கள். அவர் படிக்கும் போது எண்களை ஒவ்வொன்றாக இல்லாமல் இரட்டை இலக்க எண்ணாக மனதில் வாங்கிக் கொள்ளுங்கள். சான்றாக அவர் 3 .. 7 .. 9 .. 1 .. 2 .. 5 .. 6 .. 8 .. என்று படிக்கும் போது மனதில் 37 .. 91 .. 25 .. 68 என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்களால் 16 இலக்கங்களையும் தவறின்றி எழுத முடியும்.

அல்லது 379... 125 ... என்று சொல்லிக் கொள்ளுங்கள். உங்களால் 24 இலக்கங்களையும் தவறின்றி எழுத முடியும்.

இதில் உள்ள மறைபொருள் (இரகசியம்) இதுதான்: தற்காலிக நினைவாற்றலுக்கு 8 இடங்கள் தான் காலியாக உள்ளன. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் 8ன் மடங்காகிய எத்தனை இலக்கங்களை வேண்டுமானாலும் பொதிந்து வைக்கலாம். நீங்கள் நினைவில் வைப்பது இரட்டைப் படை எண்ணா மூன்றிலக்க எண்ணா என்பது பொருட்டில்லை. நல்ல பயிற்சி இருந்தால் 40 இலக்கங்களைக் கூட நினைவு படுத்தலாம். (கணித மேதைகள் வேறு என்ன செய்கிறார்கள்.? இதுதான் அவர்களது தந்திரம்)

இப்போது தொலைபேசி அழைப்புக்கு வருவோம். உங்கள் உறவினர். தமது புதிய தொலைபேசி எண்ணை உங்களுக்குத் தெரிவிக்கிறார். உடனடியாகத் தாள், எழுதுகோல் எதுவும் கையில் கிடைக்காதால் அவர் ஒவ்வொரு எண்ணாகச் சொல்லச் சொல்ல மூன்றிலக்க எண்ணாக நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள். பேசி முடித்ததும் எண்ணைத் தாளில் வடிப்பதற்குள் அடுத்தடுத்த பணிகள் உங்களை ஆக்கிரமிக்கின்றன. எல்லா வேலைகளையும் முடித்த பிறகும் எண் பாதுகாப்பாக நினைவில் இருக்கிறது. சரிதானா?
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?