<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

12.11.04

எனக்குப் பிடித்த இலக்கியம்  

மரத்தடி சிறுகதைப் போட்டிகளுக்கு நடுவராய் இருந்த எஸ். ராமகிருஷ்ணன் நல்ல சிறுகதைகள் சிலவற்றைப் பரிந்துரைத்திருந்தார்.

தமிழில் அவர் பரிந்துரைத்த கதைகள் இணையத்தில் கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஜெயகாந்தனின் நுால்கள் அனைத்தையும் தேடித்தேடி நான் வாங்கி வைத்திருந்ததால் 'தேவன் வருவாரா' என்ற கதை எளிதில் எனக்குக் கிடைத்தது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் சொல்வதைப் போல என்னை அது அவ்வளவாகக் கவரவில்லை. ஜெயகாந்தனின் 'யாருக்காக அழதான்'. 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' போன்ற நுால்களை நான் மிகுந்த ஆர்வத்துடன் பலமுறை படித்துள்ளேன்.

கார்க்கியின் 'வான்கா'வையும் செக்காவின் 'ஆறாவது வார்டை'யும் தேடி எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தேடினேன். வான்காவும் செக்காவால் எழுதப்பட்டதுதான் என்று தெரியவந்தது. குடன்பர்க் திட்டத்திலேயே அது கிடைத்து விட்டது. ஏழு... எட்டு பக்க அளவிலேயே இருந்த சிறுகதை. பத்து வயதிலேயே உழைத்துப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த சிறுவனின் துயரங்களை அவன் வாய்மொழியாகவே சொல்வதாக எழுதியிருந்தார். நெஞ்சை நெகிழச் செய்தது.

ஆனால் ஆறாவது வார்டு கிடைப்பது சற்று எளிதாக இல்லை. வார்டு எண் ஆறு என்று எண்ணிலும் எழுத்திலும் தேடியதில் ஒரு வழியாக நாளந்தா பல்கலைக்கழகத் தளத்தில் கிடைத்தது. அங்கே செக்காவின் கதைகள் அனைத்தையும் நான்கு தொகுதிகளாக (பிடிஎப்) வைத்திருந்தார்கள். நான்காவது தொகுதி மட்டுமே 5 MB க்கு மேல் இருந்தது. வலையிறக்கிப் பார்த்த போது சுமார் 2855 பக்கங்கள் இருந்தன. நான்காவது தொகுதியில் இருந்த ஆறாவது வார்டு சிறுகதை(?) மட்டும் 130 பக்கங்கள் உள்ளது. மனநோயாளிகளான ஐந்து மனிதர்களைப் பற்றிய கதை. அடுத்த சில நாட்களுக்குள் படித்து விடுவேன் என நினைக்கிறேன்.

நான் சிறுவனாய் இருந்த நாளிலிருந்து ஆண்டு தோறும் சோவியத் புத்தகக் கண்காட்சியைக் கண்டு வந்திருக்கிறேன். எங்கள் ஊரில் முன்பெல்லாம் டிசம்பர் மாதந்தோறும் தவறாமல் நடைபெறும் புத்தகக் கண்காட்சி அது மட்டும் தான். அப்போதெல்லாம் எவரும் வாங்கக் கூடிய மலிவு விலையில் சோவியத் நாட்டின் நுால்கள் மட்டுமே கிடைத்தன. குறும்பன், ஜமீலா, மண்கட்டியைக் காற்றடித்துப் போகாது போன்ற பல நுால்களை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது என்று தோன்றுகிறது.

சுவாமியும் நண்பர்களும், தாம் சாயர் போன்ற சிறுவர்களின் குறும்புக் கதைகளைப் படிப்பதற்கு முன்பே ருசியச் சிறுவன் ஒருவனின் குறும்பைப் (குறும்பனில்) படித்துச் சிரித்திருக்கிறேன்.

தன் மண்ணோடும் மக்களோடும் இறுகப் பிணைக்கப் பட்ட முதியவரான உமர்தாதா என்பவரின் வாழ்வைப் பற்றிய சித்தரிப்பு, 'மண்கட்டியைக் காற்றடித்துப் போகாது' என்ற நாவலில் உள்ளத்தைத் தொடும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தகைய முதியவர்களை நம் கிராமங்களிலும் கண்டு வந்திருக்கிறேன்.

நான் வளர்ந்த கிராமத்தில் சேதய்யா என்ற முதியவர் வாழ்ந்தார். மிகுந்த வறுமையிலும் கூட ஊர் நன்மைக்காக அவர் எடுத்துக் கொண்ட செயல்கள்,.. பொதுக் கூட்டங்களில் நியாயத்துக்காக அவர் முன் வைத்த வாதங்கள்,.. பொது நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிட்டுச் செயலாற்றிய தன்மை.. ஒவ்வொருவர் வாழ்விலும் துயர நாட்களில் முதல்வராக வந்து ஆறுதல் கூறிக் கூடவே இருந்து கடைசியாகச் செல்லும் அவர் பாங்கு இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அவரைப் போல நம்மைச் சுற்றி எத்தனையோ உமர்தாதாக்கள்!

ஜமீலா ஒரு அழகிய காதல்கதை. அதிலும் நாட்டுப்பற்றை முன்னிறுத்திப் போரில் காயம்பட்ட தானியார் என்ற வீரனுக்கும் ஜமீலாவுக்கும் காதல் ஏற்படும் விதத்தை ஒரு காவியமாகவே வடித்திருப்பார் கதாசிரியர்.

தமிழில் எழுதப் பட்ட நாவல்கள் சிறுகதைகள் என்று பேசத் தொடங்கும் போதெல்லாம் எனக்கு நா.பா. தான் நினைவுக்கு வருகிறார். சிறுவனாய் இருந்த காலத்தில் கல்கியில் வெளியிடப்பட்டு வாராவாரம் வந்த கதையைத் தொகுத்து வைத்த நிலையில் நான் படித்த “குறிஞ்சி மலர்” இப்போது நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கிறது.

தமிழ்நாட்டில் எத்தனையோ குடும்பங்களில் அரவிந்தன் âரணி என்று இந்தத் தொடர்கதை வெளியான பிறகு குழந்தைகளுக்குப் பெயர் வைத்தார்கள்.

ஒவ்வொரு வாரமும் ஒரு அழகிய கவிதையுடனோ சிந்தனைக்கு ஏற்ற பழம் பாடல் ஒன்றுடனோ எழுதத் தொடங்குவார். அப்படி எழுதப்பட்ட இந்தக் கவிதை என் நினைவில் என்றும் நிழலாடும்:

நிலவைப் பிடித்துச் - சில
கறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதித்த முகம்.

நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி.

தரளம் மிடைந்து - ஒளி
தவழக் குடைந்து - இரு
பவழம் பதித்த இதழ்.

முகிலைப் பிடித்துச் - சிறு
தெளிவைக் கடைந்து - இரு
செவியில் திரிந்த குழல்.

அமுதம் கடைந்து - சுவை
அளவில் கடந்து - மதன்
நுகரப் படைத்த எழில்

இன்றைய இலக்கியவாதிகள் இவரையெல்லாம் எழுத்தாளர் என்று கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அன்று ஒரு சாதாரண வாசகனுக்கு நா.பா.வும் ஜெயகாந்தனும் தான் மிகப்பெரிய அளவில் படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?