<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

7.11.04

மூலத்தட்டை மாற்றுங்கள் 

அந்த நண்பரிடம் இருந்து வந்த அவசரமான தொலைபேசி அழைப்பு என்னை அதிரச் செய்தது.

“ஒரு வார காலமாக எனது கணினி இயங்கவில்லை. பொறியாளர் ஒருவர் வந்து பார்த்து விட்டு மூலத்தட்டும் செயலியும் செயலிலழந்து போய் விட்டது. அவை இரண்டையும் மாற்றுங்கள். அதற்கு சுமார் ரூ.10,000 செலவாகும் என்று சொல்கிறார்” என்றது அவரது செய்தி.

நீங்களும் ஒரு முறை வந்து பார்த்து விட்டு குறையிருப்பது மூலத்தட்டிலும் செயலியிலும் தான் என்று உறுதிப்படுத்தினால் மாற்றி விடுகிறேன் என்றார் அவர். செலவைப் பற்றிய கவலையும் அவரது குரலில் ஒலித்தது.

நான் சென்று பார்த்த போது, கணினியின் குமிழை அழுத்தியதும் அடையாள விளக்குகள் ஒளிர்ந்தன. மின் வழங்கி இயங்குவதைக் காற்றாடியின் சுழற்சி உறுதி செய்தது. ஆனால் ஒளித்திரையில் தகவல் ஏதும் காணப்படவில்லை.

பீப் என்ற தொடக்க ஒலியும் இல்லை. நினைவகச் சில்லில் குறைபாடு இருந்தாலும் கணினி இயங்காமல் போகும் என்பதால் அதனை மாற்றிப் பார்த்தேன். பலனில்லை.

மூலத்தட்டிலிருந்த சிறிய மின்கலனைச் சோதித்த போது அது மிகக் குறைந்த மின் அழுத்தத்தைக் காட்டியது. புதிய மின்கலன் ஒன்றை வாங்கி மாற்றினோம். அப்படியும் கணினி இயங்கவில்லை.

பிறகு சட்டென ஒரு பொறி தட்டியது. இப்போது வரும் மூலத்தட்டுக்களில் உள்ளிணைந்த காட்சித்திரை கட்டுப்படுத்திகளைத் தான் (Display controllers) பயன்படுத்துகிறார்கள். தனித்த அட்டைகளைப் (PCI Display card) பயன்படுத்துவதில்லை.. இவற்றைப் பற்றிய அறிவிப்பை முதன்முறை கணினியைக் கட்டமைக்கும் போது படிப்பு நினைவகத்தில் (BIOS ROM) பதிவு செய்திருப்பார்கள்.

மின்கலம் செயலிழந்ததால் பதிவு செய்யப் பட்ட அந்தத் தகவல்கள் அழிந்து போயிருக்கும். இப்போது கணினியைத் தொடங்கும் போது முன்னிருப்பு நிலைப்படி (By default condition) தனித்த காட்சித்திரை அட்டையைக் கணினி தேடக் கூடும். அது இல்லாததால் இயக்க நிலையை அதனால் தொடங்கவே முடியவில்லை.

இந்த சிந்தனை தோன்றியதும் மின்கலம், நினைவகச் சில்லு, காட்சித்திரை இணைப்பான் போன்ற எல்லா பாகங்களையும் மொத்தமாக ஒருமுறை கழற்றி வைத்து விட்டுப் பிறகு ஒவ்வொன்றாக மீண்டும் இணைத்தேன்.

குமிழியை அழுத்தியதும் கணினி பீப் ஒலியோடு கணினி இயங்கத் தொடங்கியது. Del குமிழை அழுத்தி படிப்பு நினைவகத்திற்குள் சென்றேன். நான் எதிர்பார்த்தபடி ஒன்றிணைக்கப் பட்ட துணைக்கருவிகள் (Integrated Peripherals) என்ற பகுதியில் முதலாவது காட்சித்திரை தொடக்கம் (Init Display first:) என்பதற்கு எதிராக தனித்த அட்டை (PCI Slot) என்ற வரி இருந்தது. அதை மூலத்தட்டிலே தேடுக (On Board) என மாற்றினேன்.

பிறகு ஒவ்வொரு பக்கமாகச் சென்று இந்தக் கணினிக்கு ஏற்ற இயக்க நிலைகள் உள்ளதா என்று சரிபார்த்த பிறகு படிப்பு நினைவகத்தைச் சேமித்து விட்டு வெளியேறினேன். அதன் பிறகு கணினி ஒவ்வொரு முறையும் சரியாக இயங்கத் தொடங்கியது.

மின்கலனுக்கான 15 ரூபாய் செலவில் 10,000 செலவில் இருந்து தப்பிய மகிழ்ச்சி நண்பருக்கு.

அந்தப் பொறியாளர் இவற்றை எல்லாம் அறியாமல் இருக்கிறாரா இல்லை வேண்டும் என்றே ஏமாற்றித் திரிகிறாரா என்ற சந்தேகம் எனக்கு.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?