<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

7.6.04

நோயற்ற வாழ்வு...2 

மூச்சு விடுதல் என்றதும் உலகெங்கும் பரவலாகக் காணப்படும் மூச்சு தொடர்பான நோய் ஒன்று நினைவுக்கு வருகிறது.

இரைப்பு நோய். ஆஸ்த்துமா என்று பரவலாக அறியப்படும் இந்நோய் கணை என்றும் நாய்க்கணை என்றும் சிலரால் அழைக்கப்படுகிறது. சிறுவர் முதல் கிழவர் வரை எவ்வயதினருக்கும் எக்காலத்திலும் வரக் கூடிய நோய் இது.

இது கிருமித் தொற்றுதலால் வருவது என்றோ உடல் உறுப்புக் குறைபாடு காரணமாக என்றோ திட்டவட்டமாகக் கூற முடியாத நோய். கிருமிகளால் நீர்க் கோவை (ஜலதோசம்) ஏற்பட்டு, சளிப்பிடித்து இரைப்பு வரலாம். ஆனால் நீர்க் கோவை ஏற்பட்டு, சளிப்பிடித்த எல்லோருக்கும் இந்நோய் வருமென்று சொல்ல முடியாது. இந்நோய் வரக்கூடிய உடலமைப்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான் வரும்.

அதே போல இதைப் பரம்பரை நோய் என்றும் சொல்ல முடியாது. பெற்றோரில் ஒருவருக்கு இந்நோய் இருந்தால் குழந்தைகளில் சிலருக்கு வரலாம். சிலருக்கு வராமலே போகலாம். பெற்றோரில் இருவருக்குமே இந்நோய் இல்லாவிட்டால் கூட குழந்தைக்கு வரலாம்.

ஒவ்வாமை காரணமாக வரக்கூடிய நோய் என்றும் இதைச் சொல்கிறார்கள். ஆனால் அந்த ஒவ்வாமை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் வரலாம். பொதுவாகத் துாசியின் காரணமாகப் பலருக்கும் இந்நோய் வரக்கூடும்.

காற்றறைகளில் காற்றுக் குழாய்கள் சளியின் காரணமாக அடைக்கப் பட்டு காற்று செல்லும் வழி சுருங்குவதால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதுவே இரைப்பு நோய் என்று சொல்கிறார்கள்.

இணையத்தில் இந்நோய் தொடர்பாகத் தேடிய போது கிடைத்த சில படங்களை இங்கே இணைத்துள்ளேன். நன்றி : வர்ஜினியப் பல்கலைக் கழக இணையத் தளம்

படம் 1: நோய் ஏற்படும் முன்னர் காற்றறைகளும் காற்றுக் குழாய்களும் எவ்வாறு உள்ளன என்பதைக் காட்டுகிறது. காற்றுக் குழாய்களின் குறுக்குத் தோற்றமும் காட்டப்பட்டுள்ளது.





படம் 2: நோய் ஏற்பட்ட பின்னர் காற்றறைகளும் காற்றுக் குழாய்களும் எப்படி மாறி உள்ளன என்பதைக் காட்டுகிறது. காற்றுக் குழாய்களின் குறுக்குத் தோற்றத்தில் ஏற்படும் மாற்றமும் காட்டப்பட்டுள்ளது.





நவீன மருத்துவத்தில் இரைப்பு நோய்க்கென பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. மருந்து, மாத்திரை, ஊசி மருந்து போன்ற கற்கால மருத்துவத்தை இரைப்பு நோய்க்கு அதிகம் பேர் பயன்படுத்துவதில்லை. பல வகையான கையடக்க சுவாசக் கருவிகள் (இன்ஹேலர்) கிடைக்கின்றன.

இரைப்பு நோய்க்கு உள்ளான ஒருவர் இந்தக் கருவியை வாயில் வைத்து அழுத்தினால் மருந்து காற்று வடிவில் காற்றறைகளுக்குச் சென்று உடனடி நிவாரணம் அளித்துவிடும்.

படம் 3: காற்றுக் குழாய்களின் குறுக்குத் தோற்றத்தில் மருந்துகளால் ஏற்படும் மாற்றம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.






நோயாளி இந்த மருத்துவத்தில் குணமடையாவிட்டால், அல்லது நோயின் தீவிரம் கடுமையாக இருந்து சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று நெபுலைசர் என்னும் கருவி மூலம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு சுவாசித்தால் போதும். சுவாசம் உடனடியாகச் சீராகி விடும்.

சல்புடமால் போன்ற மருந்துகளை ஆரம்பத்தில் மாத்திரையாகவும் மருந்தாகவும் கொடுத்தார்கள். அது இரத்தத்தில் கலந்து வேலை செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் காற்று வடிவிலே குழாயில் அடைத்து சுவாசிக்கச் செய்து விட்டார்கள். உடனடி தீர்வு கிடைப்பது உண்மைதான்.

ஆனால் கொடுமை என்னவென்றால் நவீன அல்லோபதி மருத்துவத்தில் இரைப்பு நோய்க்கு நிரந்தரத் தீர்வு கிடையாது. ஒவ்வொரு முறை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும் போதும் நிவாரணம் தேட வேண்டியதுதான்.

சித்த, ஆயுர்வேத முறைகளில் ஆடாதோடை என்ற அருமருந்து கிடைக்கிறது. இரைப்பு, சளி, இருமல் எல்லாவற்றுக்கும் அற்புதமான நிவாரணி. மூன்று வேளை காய்ச்சி வடித்து கசாயமாக உட்கொண்டால் போதும். நிச்சயமான குணம் கிடைக்கும். இதுவும் கூடத் தற்காலிகத் தீர்வுதான். ஒவ்வொரு முறை இரைப்பு நோய்க்கு உள்ளாகும் போதும் உட்கொள்ள வேண்டியது தான்.

இந்த மூலிகையைத் தேடி நீங்கள் எங்கும் போக வேண்டாம். தமிழகமெங்கும் காதி கதர் நிறுவனங்களில் ஆடாதோடை மூலிகையை (இன்னும் பல நல்ல மூலிகைகளையும் கூட) பொடி வடிவில் விற்கிறார்கள். வாங்கி வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டால் போதும்.

ஆனால் ஒன்று: ஆடாதோடை, வேம்பை விடக் கொஞ்சம் அதிகமாகக் கசக்கும். குழந்தைகளை சாப்பிட வைப்பது உங்கள் சாமர்த்தியம்.

நிரந்தரமாக இரைப்பு நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சித்த, ஆயுர்வேத, ஆங்கில மருத்துவம் எதிலுமே நிரந்தர குணமளிக்கும் மருந்துகளே இல்லையென்றால் வேறு என்ன செய்வது? இதை அடுத்த பதிவில் பார்ப்போம்..
<-----முந்தைய பகுதி......................அடுத்த பகுதி----->

|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?