<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

6.6.04

நோயற்ற வாழ்வு 

நான் ஒரு மருத்துவரல்ல என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால் ஒரு அறிவியல் மாணவனாக, மானுட உடலியக்கம் பற்றிப் படித்தவற்றையும், கேட்டவற்றையும் நானே என் அனுபவ வாயிலாக அறிந்தவற்றையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவை எழுதத் தொடங்குகிறேன்.

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதெல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நோயற்ற வாழ்வு எத்தனை பேருக்கு அமைகிறது?

நோய் என்பதை இருவிதமாகக் கருதலாம் என நினைக்கிறேன். ஒன்று உடல் உறுப்பு குறைபாட்டால், தேய்வடைதலால், முதிர்ச்சியால் அல்லது செயல்படாத் தன்மையால் தோன்றும் நோய். தலைவலி, முதுகுவலி, மூட்டுவலி, நீரிழிவு, கண்பார்வைக் குறைபாடு போன்றவை இவ்வகையில் சேரும்.

மற்றது கிருமித் தாக்குதலால் வரும் நோய். வைரஸ் என்றும் பாக்டீரியா என்றும் பல பேர்களில் அழைக்கப் படும் கிருமிகளால் தொற்றும் நோய். சாதாரண காய்ச்சல், இருமல் தொடங்கி மலேரியா, காலரா, அம்மை, யானைக்கால் போன்ற எண்ணற்ற நோய்கள் இந்த வகையில் சேரும்.

இவற்றை இன்னும் பாரம்பரியம் சார்ந்த நோய்கள் என்றும் சுற்றுப்புறச் சூழல் அல்லது காலநிலை சார்ந்த நோய்கள் என்றும் வகைப்படுத்திக் கொண்டே போகலாம்.

கிருமித் தாக்குதலால் வரும் நோய்களுக்குத் தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். அல்லது நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பிறகு மருந்துகளை உட்கொண்டு சரிப் படுத்தலாம். கிருமித் தாக்குதலில் இருந்து முழுமையான பாதுகாப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் உடல் உறுப்புக் குறைபாடு தொடர்பான பல நோய்களும் நிச்சயமாக நம்மால் தடுக்கக் கூடியவையே. போதிய உடற்பயிற்சி, நல்ல சமச்சீரான ஆரோக்கிய உணவு ஆகியவற்றின் மூலம் இந்நோய்கள் நிச்சயமாக வராமல் செய்துவிட முடியும்.

எங்கள் வீட்டில் இரண்டு ஈருருளிகள் (அதான் சைக்கிள்கள்) உள்ளன. இரண்டும் ஒரே சமயத்தில் வாங்கியவைதான். ஒன்று தினமும் பயன்பாட்டில் உள்ளது. மற்றது ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இப்போது சொல்லாமலே உங்களுக்குத் தெரியும் : எது நல்ல நிலையில் உள்ளதென்றும் .. எது துருப்பிடித்துப் பழுதுபட்டு நிற்கிறது என்றும்.

சின்னஞ்சிறு குழந்தை ஒன்றைப் பாருங்கள்: அது எப்படித் துரு துரு என்று தனது கையையும் காலையும் ஏன் உடல் உறுப்புக்கள் முழுவதையும் அசைத்து, ஆட்டி, செயல்படுத்திக் கொண்டே இருக்கிறது என்று. ஆனால் வளர வளர நாம் பல உறுப்புக்களைப் பயன்படுத்துவதே இல்லை. செயல்படாமல் துருப்பிடிக்க விட்டுவிடுகிறோம்.

தினமும் உடற்பயிற்சி செய்யும் ஒருவர் பொதுவாக நல்ல உடல்நலம் உள்ளவராகத் தான் இருப்பார். அதிலும் மேலைநாட்டு முறையிலான உடற்பயிற்சிகளில் உடலின் வெளித்தோற்றம் நன்கு கட்டமைப்பைப் பெறும் என்றும் யோக ஆசனப் பயிற்சி போன்ற இந்தியப் பயிற்சிகளில் உள்ளுறுப்புக்கள் நன்கு செயல்படும் என்றும் கூறலாம்.

உடலின் எல்லா உறுப்புக்களுக்கும் நல்ல இரத்தம் சென்றால் மட்டுமே அவை நன்கு இயங்கும். அதற்கு நமது முன்னோர் சொல்லிச் சென்ற யோக ஆசனப் பயிற்சிகள் நிச்சயம் உதவும்.

யோக ஆசனப் பயிற்சி என்றதும் பலரும் சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற கடுமையான ஆசனங்களை நினைவு கூர்ந்து பயந்து விடுகின்றனர். அவையெல்லாம் மிக உயர்ந்த நிலையில் கற்றுக் கொள்பவர்களுக்கான பயிற்சிகள். நல்ல உடல்நலம் வேண்டும் என்று எண்ணும் சாதாரண மனிதர்களாகிய நமக்கு இவையெல்லாம் தேவையே இல்லை.

நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே (உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ) கண்களை மூடிக் கொள்ளுங்கள் (கவனம் சிதறாமல் இருப்பதற்காக) ஆழ்ந்த மூச்சு ஒன்றை மிக மெதுவாக இழுத்து விடுங்கள். மூச்சை இழுக்கும் போது நெஞ்சு நிறைய வேண்டும். மூச்சு விடும் போது வயிறு உள்ளே செல்ல வேண்டும்.

நான்கு முறை இதைத் திருப்பிச் செய்யுங்கள். அவ்வளவு தான். யோகப் பயிற்சியின் முதல் முக்கியப் பயிற்சியை முடித்து விட்டீர்கள். உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா?

"நீண்ட மூச்சு நீண்ட ஆயுள்"

பொதுவாக நாம் சுவாசிக்கும் போது நமது காற்றறைகளின் (நுரையீரலின்) மேல்பகுதியில் உள்ள காற்றை மட்டும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். முக்கால் பகுதிக்கும் மேலாக உள்ள காற்றறைகள் புதுப்பிக்கப் படுவதேயில்லை. சாதாரண வாழ்க்கைக்கு இது போதும் என்று இயற்கை விட்டுவிடுகிறது.

ஆனால் சில சமயங்களில் (உதாரணமாக ஓடும் போது) நீண்ட மூச்சு (பெருமூச்சு) விட வேண்டியுள்ளது. அப்போது தான் தேவையான பிராணவாயு (ஆக்ஸிஜன்) எல்லா உறுப்புக்களையும் சென்றடைய முடிகிறது. ஓடுபவன் நல்ல உடல்நலம் பெறுகிறான்.

நாம் மேலே சொன்னது போல மூச்சுப் பயிற்சிகள் செய்தால் கூட காற்றறைகளில் நல்ல காற்று நிறைந்து உடல் முழுதும் குருதி ஓட்டம் சீராகி நாம் உடல் நலத்துடன் வாழலாம்.

ஆனால் இந்த எளிய பயிற்சியைக் கூட வாழ்நாள் முழுவதும், ஒரு நாளில் பல முறையும் செய்தாக வேண்டும். அது நம் வாழ்க்கை ஓட்டத்தின் பகுதியாக வேண்டும்.
...........அடுத்த பகுதி----->

|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?