<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.6.04

நோயற்ற வாழ்வு..3 

இரைப்பு நோய்க்கு நிரந்தரத் தீர்வைப் பற்றிச் சொல்லும் முன்பு கொஞ்சம் சுயபுராணம் பாட வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதற்கும் காரணம் உண்டு. இங்கே நான் சொல்லப் போவதெல்லாம் எனது சொந்த அனுபவம். பிறர் சொல்லிக் கேட்டதில்லை என்பதால் இவற்றைப் பற்றிய முழுநம்பிக்கையை என்னால் படிப்பவரிடம் ஏற்படுத்த முடியும். இந்தக் கருத்துக்களை ஆணித்தரமாக எங்கும் என்னால் சொல்ல முடியும். இவை குறித்தான ஐயங்களைத் தீர்த்து வைக்கவும் முடியும்.

எங்கள் அம்மா ஒரு ஆஸ்த்துமா நோயாளி. பிறந்தது முதல் நானும் அடிக்கடி ஆஸ்த்துமா நோய்க்கு உள்ளாகி இருக்கிறேன். அதை அப்போதெல்லாம் இழுப்பு நோய் என்றே சொல்லி வந்திருக்கிறோம்.

பெரும்பாலும் கொண்டாட்ட காலங்கள் எனக்கு நோய்வாய்ப்பட்ட காலங்களாகவே அமையும். ஒவ்வொரு பொங்கலையும் தீபாவளியையும் நான் மூச்சுத் திணறலுடன் படுத்த படுக்கையாகவே கண்டு வந்திருக்கிறேன்.

பொங்கல் சமயம் வீட்டை முழுமையாக சுத்தம் செய்வார்கள். அதனால் எப்படியாவது தூசியின் பாதிப்புக்கு உள்ளாகி விடுவேன். தீபாவளியின் போது மழையில் நனைந்தோ வெடிப்புகையினாலோ தீபாவளி இனிப்புகளை அதிகம் உண்பதாலோ இழுப்பு நோய் வந்துவிடும்.

ஒரே ஒரு வெல்லம், ஒரு ஐஸ்கிரீம், ஒரு நாள் தூக்கமின்மை அல்லது தூசி நிறைந்த இடத்தில் ஒரு நிமிடம் நின்றால் போதும் அடுத்த மூன்று நான்கு நாட்கள் நரக வேதனைதான். பார்ப்பவர்கள் பரிதாபப்படும்படியாக மூச்சு இரைக்கும். நான்கு அடி எடுத்து வைத்து நடக்க முடியாத கொடுமை.

பத்து வீடுகள் தள்ளி மருத்துவர் இருந்தார். அவரிடம் ஊசி போட்டுவரச் செல்வதென்றால் இரண்டு பேர் தாங்கிப் பிடித்துக் கொண்டு, இரண்டு வீட்டுக்கு ஒருமுறை உட்கார்ந்து, படாத பாடு பட்டு, செல்வதற்குள் பதினைந்து இருபது நிமிடம் ஆகிவிடும். அப்போதெல்லாம் இன்ஹேலர்கள் வரவில்லை. நோயின் தீவிரம் கருதி பெரும்பாலும் நரம்பில் தான் ஊசி போடுவார்கள். அது உடல்முழுதும் வெப்ப ஆவியாகப் பரவிச் செல்வதில் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

அதன்பிறகு சில நாட்களுக்குத் தொடர்ந்து மருந்து மாத்திரைகள் உட்கொண்டு நோயை சரிப்படுத்த வேண்டியிருக்கும். விலாப் பகுதிகளில் வெந்நீர் அல்லது தவிட்டு ஒத்தடம் கொடுப்பதில் ஓரளவு சுவாசம் இலகுவாகும். (இப்போதெல்லாம் வெந்நீர்ப் பைகளும் அகச்சிவப்பு விளக்குகளும் எளிதில் கிடைக்கின்றன.)

இப்படி எல்லாம் துயரடைந்ததால் எல்லா சிறுவர்களையும் போல் விளையாட்டுக்களில் ஈடுபட முடிந்ததில்லை. “உனக்கு நோய் வந்துவிடும்” என்று பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் பழக்கம்தான் எங்கள் வீட்டில் இருந்தது. அதனால் பொழுது போவதற்காக படிக்கும் பழக்கம் வந்தது.

“எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் பெரும்பாலும் ஆஸ்த்துமா நோயாளிகளே” என்ற வகையில் எப்போதோ படித்ததில் அற்ப சந்தோசம் வேறு. “சிந்தனையாளர்களுக்கு வரும் நோய் நமக்கு இருக்கிறது. நாமும் சிந்தனையாளர்தான்” என்று. என்ன சொல்ல? அடுத்த முறை பாதிப்புக்கு உள்ளாகும் போது “வாழ்வது ஏன்” என்றே கேள்வி வரும்.

“பொய்யர்களும் திருடர்களும் கயவர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்களே. எந்தப் பாவமும் அறியாத எனக்கு ஏன் இந்த நோயைக் கொடுத்தாய் இறைவா” என்று எத்தனையோ நாட்கள் அழுதிருக்கிறேன்.

புத்தகங்களைத் தேடித்தேடி உறவினர் வீடுகளில் இருந்தெல்லாம் வாங்கி வந்து படித்ததால், பத்து வயதுக்குள்ளாகவே “பெங்கéர் சுந்தரம்” என்பவர் எழுதிய “யோக சிகிச்சை” என்ற நூல் எனக்குப் படிக்கக் கிடைத்தது. அதில் குறிப்பிட்டிருந்த பல யோகாசனங்களை நானாகவே சிறுவயதிலிருந்து செய்து பழகியிருக்கிறேன்.

புஜங்காசனம், தனுராசனம், அர்த்த ஹலாசனம், விபரீத கரணி, அர்த்த சிரசாசனம், யோக முத்ரா போன்ற பல எளிய ஆசனங்களை அந்த நூலில் படித்துத் தெரிந்து கொண்டு நானாகச் செய்து வந்திருக்கிறேன். பல ஆண்டுகள் இடைவிடாமல் பயிற்சி செய்தும் ஆஸ்த்துமா குறையவே இல்லை. நான் முன்பு சொன்ன காரணங்கள் எதுவானாலும் உடனே இரைப்பு நோய் வந்துவிடும்.

அப்போது யாராவது “யோகசனம் மூலம் ஆஸ்த்துமாவை குணப்படுத்தலாம்” என்று சொல்லியிருந்தால் அவர்களை எள்ளி நகையாடி இருப்பேன். “காதில் âச்சுற்றாதீர்கள்” என்றாவது கடிந்து சொல்லியிருப்பேன்.

அதற்காக நான் யோகாசன முறைகளைக் குறை சொல்லவில்லை. ஒருக்கால் நான் யோகாசனம் சொல்லித் தரும் குரு யாரிடமாவது முறைப்படி கற்றுக் கொண்டிருந்தால் தீர்வு கிடைத்திருக்குமோ என்னவோ. அதற்கெல்லாம் எங்கள் ஊரில் வாய்ப்பு இல்லை.

இதற்கிடையே என் வாழ்வின் மிகப் பெரிய சோகத்தையும் சொல்லியாக வேண்டும்.

பொதுவாக ஆஸ்த்துமா நோயாளிகளுக்கு ஆயுள் கெட்டி என்பார்கள். ஆஸ்த்துமா தொல்லை மிகுந்த வியாதியே ஒழியக் கொல்லும் வியாதி இல்லை. மூச்சு இரைத்தலையே ஒருவிதப் பயிற்சியாகக் கருதினால்.. நுரையீரல்கள் பலப்படும்.. நீண்ட நாள் வாழலாம் என்று இப்படிச் சொன்னார்களோ என்னவோ தெரியவில்லை.

வயதாக வயதாக ஆஸ்த்துமாவுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகளின் வலிவையும் அளவையும் மருத்துவர்கள் கூட்டிக் கொண்டே வந்ததால், அந்த மருந்துகளின் பக்க விளைவாக இதயம் செயலிழந்து, ஆஸ்த்துமா நோயாளியான எங்கள் அம்மா தன் 54 வயதிலேயே எங்களைப் பிரிந்து சென்றார்கள். எங்கள் அப்பாவின் அம்மாவும் அம்மாவின் அம்மாவும் 80 வயதைத் தாண்டியும் வாழ்ந்த எங்கள் குடும்பத்தில் இது ஒரு மிகப் பெரிய சோகம் : ஆஸ்த்துமாவுக்கு அல்ல ஆஸ்த்துமா மருந்துக்குப் பலியான ஒரு உயிர்.

ஆக மருந்துகளின் மேல் நம்பிக்கை இழந்த நிலை. நோயை நிரந்தரமாகக் குணப்படுத்திக் கொண்டாக வேண்டிய கட்டாயம். இன்று போல் அப்போது இணையத் தொடர்பு இல்லை. “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற கதையாக எல்லாவிதமான மருத்துவ முறைகளையும் பின்பற்றியிருக்கிறேன். எந்த ஊரில் ஆஸ்த்துமாவிற்கு நல்ல மருந்து கொடுக்கிறார்கள் என்று கேள்விப் பட்டாலும் ஓடிச்சென்று வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்.

இப்படித்தான் சென்னையில் அப்போது ஒரு ஆங்கில மருத்துவர் இருந்தார். அவரிடம் கூட்டங்கூட்டமாக ஆஸ்த்துமா நோயாளிகள் வருகிறார்கள். நல்ல மருந்து தருகிறார் என்று கேள்விப்பட்டு, அங்கே சென்று, காத்துக் கிடந்து, கொள்ளையாய்க் காசு கொடுத்து மருந்தை வாங்கி வந்து சாப்பிட்டால், அது முன்பே அறிமுகமான, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் நிரம்பிக் கிடந்த ஆடாதோடையின் சாறு!

இத்தகைய சூழலில்தான் 1988-89ம் ஆண்டுகள் என்று நினைக்கிறேன். அப்போதுதான் கொடைக்கானலில் முதன்முதலாக தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் அமைக்கப் பட்டு எங்கள் ஊருக்கெல்லாம் தமிழில் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் நிகழ்ச்சிகள் காணக்கிடைத்தன.

அப்படி ஒரு நாளில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் பல்வேறு நோய்களைத் தீர்ப்பதற்கான பயிற்சிகளைத் தொலைக்காட்சி வழியே வழங்கினார்கள். முழுக்க முழுக்க யோகாசனப் பயிற்சி என்று சொல்ல முடியாது. அவர்களே செய்த ஆராய்ச்சியின் பயனாக, எளிய முறையில் நோய் நீக்குவதையே நோக்கமாகக் கொண்டு, எவ்வயதினரும் செய்யத் தக்க வகையிலான பயிற்சிகளை உருவாக்கி இருந்தார்கள். முதுகுவலி, கண்பார்வைக் குறைபாடு, ஆஸ்த்துமா போன்ற பல நோய்களுக்கான பயிற்சிகள்.

அதை அவர்கள் சொல்லிக் கொடுத்த பாங்கும் பயிற்சிகளின் எளிமையும் என்னை நம்பிக்கை கொள்ளச் செய்தன. அப்போதெல்லாம் வேதாத்திரி மகரிஷி அவர்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் கேள்விப் பட்டிருக்கவும் இல்லை. ஆனால் ஆஸ்த்துமாவை குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வேகம் எனக்குள் இருந்தது. எனவே அவர்கள் சொல்லிக் கொடுத்த பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தேன். தினமும் பத்து நிமிடங்கள் போதும். காலையில் பல் துலக்குவதைப் போல இதையும் தவிர்க்க முடியாத கடமையாகக் கடைப்பிடித்தேன்.

அதன்பிறகு ஆஸ்த்துமா வரவேயில்லை என்று பொய் சொல்ல மாட்டேன். வந்தது. ஆனால் கடுமையாக இல்லை. நான் பயிற்சிகளை மட்டும் நிறுத்தவே இல்லை.

ஆறுமாதங்கள் செய்திருந்தால் போதும். நானோ இரண்டு ஆண்டுகள் இடைவிடாமல் ஒவ்வொரு நாள் காலையிலும் பயிற்சி செய்தேன். அதன்பிறகு ஆஸ்த்துமா எனக்கு அந்நியமானது. எனது தீபாவளியும் பொங்கலும் உண்மையிலேயே மகிழ்ச்சி நிறைந்ததானது. ஏறத்தாழ 14 ஆண்டுகளாக ஆஸ்த்துமா தாக்குதலே இல்லை.

ஆஸ்த்துமா நோயாளி என்று எனக்குத் தெரியவரும் எவருக்கும் இந்தப் பயிற்சிகளை (குரு வேதாத்திரி மகரிஷியிடம் நான் கற்றது என்று சொல்லி) செய்யுமாறு ஊக்கப் படுத்துகிறேன். ஆனால் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியாகச் செய்தால் மட்டுமே பலன் கிடைப்பது உறுதி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதில் திரும்பத் திரும்ப என் நினைவுக்கு வருவது என் நெருங்கிய உறவினர் ஒருவர். ஒருமுறை அவரது வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்த போது அவரது மகள் ஆஸ்த்துமா நோய்க்கு உள்ளாகி அவதிப் பட்டுக் கொண்டிருந்தாள். பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த பெண். திருமணம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் அந்தப் பெண்ணுக்கு இந்தப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுத்தேன். அவரும் தினமும் அவற்றைச் செய்யுமாறு அவளை ஊக்கப்படுத்தி வந்திருக்கிறார். சில மாதங்கள் கழித்து அவரைப் பார்த்த போது என் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க “என் பெண்ணுக்கு இப்போதெல்லாம் இரைப்பு வருவதேயில்லை. பல ஆண்டுகளாகத் தினமும் வெந்நீரில் மட்டுமே குளித்து வந்த அவள் இப்போதெல்லாம் குளிர்ந்த நீரில் கூடக் குளிக்கிறாள். எந்த விதமான பாதிப்புமில்லை.. நான் தைரியமாகக் கல்யாணம் செய்து கொடுப்பேன்” என்று சொன்னார்.

இந்தப் பயிற்சிகளை எல்லாம் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நூல் வடிவிலும் வெளியிட்டுள்ளார்கள். தமிழில் “எளிய முறை உடற்பயிற்சி” என்ற பெயரிலும் ஆங்கிலத்தில் Simplified physical exercises என்ற பெயரிலும் இந்த நூல் கிடைக்கிறது. எல்லா நோய்களுக்கான பயிற்சிகளும் இந்த நூலில் உள்ளது. நாடெங்கும் உள்ள மனவளக்கலை மன்றங்களில் இலவசமாகவே இப்பயிற்சிகள் சொல்லித் தரப்படுகின்றன என்றும் அறிகிறேன்.

ஆஸ்த்துமாவிற்கான பயிற்சிகளை மட்டும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
<-----முந்தைய பகுதி......................அடுத்த பகுதி----->

|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?