<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

3.1.18

எனது சீனச் சுற்றுப் பயணம் ...1

சுற்றுலா செல்வதென்பதே மகிழ்ச்சி தரும் நிகழ்வு. அதிலும் வெளிநாட்டுச் சுற்றுலா என்றால் கேட்கவே வேண்டாம். முதன்முதலாக இந்தியாவிற்கு வெளியே நான் மேற்கொண்ட சுற்றுப் பயண அனுபங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

தொண்ணூறுகளிலேயே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் எண்ணத்தோடு கடவுச் சீட்டு வாங்கிய போதும், அரசுப் பணியில் இருந்ததால் உரிய அனுமதிக்கு விண்ணப்பித்து அனுமதி பெற்று வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு இல்லாமலேயே அந்தக் கடவுச்சீட்டுக் காலாவதியாகி விட்டது. மீண்டும் புதிய கடவுச் சீட்டு வாங்கிய போது இம்முறை  எப்படியும் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது.

சில மாதங்களுக்கு முன் திடீரென ஒருநாள் என் தங்கை கைபேசியில் அழைத்து எந்த நாட்டுக்குச் சுற்றுலா செல்லலாம் எனக்கேட்டாள். இலங்கையா துபாயா சீனாவா என்று கேட்டதும் நான் சீனா செல்லலாம் என்றேன். நீண்ட நெடுங்காலமாக இரும்புத் திரைக்குப் பின்னிருந்து -உலகின் பார்வையில் படாமல் இருந்து - பிறகு விழித்து எழுந்து இன்று அமெரிக்காவிற்குப் போட்டியாக உலகின்  முதன்மை வல்லரசாக முயலும் அந்த நாட்டின் மீது எப்போதுமே எனக்குப் பிரமிப்பு உண்டு.

நம்மால் புறக்கணிக்கப்பட்ட புத்தம் சீனாவிலும் ஜப்பானிலும் தழைத்து வளர்ந்ததும் இன்றும் பெரும்பான்மையினர் அங்கே புத்த மதத்தினராயிருப்பதும் வரலாறு.

ரோமானிய போர்த்துகீசிய ஆங்கிலேய வியாபாரிகளை மதிக்காமலும் அவர்களுக்கு விலை போகாமலும் அவர்கள் வஞ்சக சூழ்ச்சி வலையில் விழாமலும் தமது நாட்டை தாமே ஆண்டவர்கள் சீனர்கள்.

பாரம்பரியமாக சப்பானைத் தம் எதிரி நாடாகக் கொண்டிருப்பது சீனா. இரண்டாம் உலகப் போரின் பிறகு சப்பான் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டிருந்த போதிலும் இன்று அதனைப் பின் தள்ளி முன்னுக்கு வரப் போராடிக் கொண்டிருப்பது சீனா.

சீனா மொழியே அவர்களுக்குப் போதுமானதாக இருப்பதால் அவர்கள் ஆங்கிலத்தைக் கற்கவில்லை. அதனால் வெளிநாட்டுப் பயணிகள் அவர்களுடன் தொடர்பு கொள்வதில், உரையாடுவதில் பெரும்இடர்ப்பாடு உள்ளது. எனவே சீனா செல்ல விரும்பும் எவரும் ஆங்கிலம் அறிந்த சீன வழிகாட்டி ஒருவருடன் செல்வதே நலம் பயக்கும். எனவே சீனப் பயணத்   திட்டங்களை வகுத்து அளிக்கும் பல்வேறு பயணமுகவர்களை இணையத்தில் தேடித் பார்த்தோம்.

நாங்கள் சைவ உணவு மட்டுமே உண்பதால் உணவுப் பழக்கம் பெரும் பிரச்சினைக்குரியதாக அமையுமோ என்றும் எண்ணம் இருந்தது.

எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்த்தபோது மதுரை ஸ்ரீ முருகன் டிராவல்ஸ் நிறுவனத்தாரின் சீனப் பயணத் திட்டம் சிறப்பானதாகத் தெரிந்தது.  டிசம்பர் 25 முதல் 30 வரை ஆறு நாட்கள் - ஷாங்காய், பெய்ஜிங் - இரண்டு நகரங்கள் மட்டும்  - பயணக் கட்டணம் 80 ஆயிரம் மட்டும்.

கட்டணம் இவ்வளவு குறைவாக இருப்பதற்கும் காரணம் இருந்தது. டிசம்பர் சீனாவில் பனிக்காலம் வாட்டி எடுக்கும் குளிர் என்பதால் சீனர்கள் அதிகம் வெளியில் வருவதில்லை. இந்தியாவில் போலவே சீனாவிலும் ஏப்ரல் முதல் மே முடியவே கோடை விடுமுறைக் காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் முடிய நல்ல சுற்றுலாப் பருவம். ஆனால் இந்தக் காலங்களில் சீன நாட்டின் சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் தீபாவளி நெருங்கும் போது தி. நகர் எப்படி இருக்குமோ அப்படி கூட்ட நெரிசலில் திணறும். நவம்பர் முதல் மார்ச் முடிய பருவமற்ற காலம். கூட்டமும் குறைவு. தங்கும் இடங்கள் உணவு விடுதிகளில் கட்டணமும் குறைவு. எனவே தான் இந்த நேரத்தில் இப்படி ஒரு பயணத் திட்டத்தை அளித்திருந்தார்கள்.
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?