<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

8.11.04

அழுத்த சமையற்கலன் குறித்த சில பார்வைகள் 

“எங்கள் வீட்டு அழுத்த சமையற்கலனுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு வளையம் (gasket) வாங்க வேண்டியிருக்கிறதே. இதற்குத் தீர்வே இல்லையா?' என்று ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவர் கேட்டார்.

“பதினாறு ஆண்டுகளாக ஒரே அழுத்த சமையற்கலனைத் தான் எங்கள் வீட்டில் பயன்படுத்துகிறோம். இந்தப் பதினாறு ஆண்டுகளில் ஒரே ஒரு முறை (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) வளையத்தை மாற்றினோம். அதுவும் பாத்திரம் கழுவும் போது அரிவாள்மனையில் சிக்கிப் பழைய வளையம் வெட்டுப் பட்டதால் தான்” என்று நான் சொன்ன போது அவர் என்னை வேடிக்கையான பிராணியைப் பார்ப்பது போலப் பார்த்தார். “இவர்களெல்லாம் சமைப்பதோ சாப்பிடுவதோ உண்டா” என்ற சிந்தனை அவருக்குள் ஓடிக் கொண்டிருந்தது என்று நினைக்கிறேன்.

“இந்தப் பதினாறு ஆண்டுகளில் தினசரியும், ஒருநாளில் பலமுறையும் சோறு சமைப்பது மட்டுமின்றி காய்கறிகள், பருப்பு முதலிய பலவும் வேகவைப்பது அதில் தான்” என்று நான் சொன்ன போது அவரின் வியப்பு மேலும் கூடியது.

அதன் பிறகு நான் பொறுமையாக அவருக்கு இது எப்படி சாத்தியமாயிற்று என்று விளக்கினேன். அந்த விளக்கங்களைத் தான் இந்தப் பதிவில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சமையற்கலம் இருக்கட்டும். பொதுவாக நாம் வாங்கும் எந்தப் பொருளுக்கும் வாங்குபவரின் நோக்கில் இரண்டு தகவல்கள் அவசியமானவை.

1.வாங்குவதற்கு ஆகும் செலவு
2.பயன்படுத்த ஆகும் செலவு.

இவ்விரண்டையும் சேர்த்து, “உடைமையாளருக்கு ஆகும் மொத்தச் செலவு” (TCO : Total Cost of Ownership) என்று சொல்வார்கள்.

(விற்பவரின் நோக்கில் பல கருத்துக்களையும் சிறப்பாக மீனாக்ஸ் எழுதிக் கொண்டிருக்கிறார். எனக்கு அது குறித்து ஏதும் தெரியாது. பயனாளரின் நோக்கில் மட்டும் நான் பேசுகிறேன்)

ஒரு அழுத்த சமையற்கலனை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி மூன்று மாதங்களுக்கு ஒரு வளையம் ரூ. ஐம்பது வீதம் பயன்படுத்த பத்து ஆண்டுகளுக்கு என்ன செலவாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள்: 1000 + (40 x 50) = 3000. பத்து ஆண்டுகளில் சமையற்கலனை விட இரண்டு மடங்கு வளையங்களுக்காகச் செலவிடுகிறோம்.

வளையம் மாற்றத் தேவையற்ற மற்றொரு வகை சமையற்கலன் அதே ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கும் அல்லது சில நுாறு அதிகமிருக்கலாம். ஆனால் பயன்படுத்தும் போது பிற உபகரணங்கள், வளையம் போன்ற எதுவும் வாங்கத் தேவையில்லாததால் எவ்வளவு மிச்சமாகிறது!

பொருளாதாரத்தை விட்டுவிட்டு அறிவியலுக்கு வருவோம். ஏன் பல அழுத்த சமையற்கலங்களில் அடிக்கடி வளையம் மாற்ற வேண்டியிருக்கிறது?

இதற்குக் காரணம் பல அழுத்த சமையற்கலங்களில், சமையற்கலனின் மூடி வெளிப்புறமாக அமைவதும் அதனால் சமைக்கும் போது நீராவி நேரடியாக வளையத்தைத் தாக்குவதும் தான்.

மூடி வெளிப்புறமாக அமைந்து, பாத்திரம், மூடி இவற்றுக்கு இடையே வளையம் வருவதால் சமைக்கும் போது மொத்த நீராவியும் வெளியேறாமல் வளையம் மட்டுமே காக்கிறது. மொத்த வெப்பமும் வளையத்தைத் தாக்குகிறது. வளையம் விரைவில் விரிவடைந்து வீணாகிறது. பாரக்க படம் 1.




மூடி உட்புறமாக அமையும் அழுத்த சமையற்கலங்களில் மூடியின் உலோக விளிம்பே ஒட்டு மொத்த நீராவியும் வெளியேறாமல் தடுக்கிறது. கசியும் சிறிதளவு நீராவிதான் வளையத்தைத் தாக்குகிறது. மேலும் வளையம் எப்போதும் மூடிக்கும் பாத்திரத்திற்கும் இடையே மிகுந்த (எந்திரவியல்) அழுத்தத்திற்கும் உள்ளாவதால் அது விரிவடைவதில்லை. பல ஆண்டுகள் உழைக்கிறது. பாரக்க படம் 2.




இது மட்டுமில்லை சமையற்கலங்கள் கருப்பு வண்ணத்தில் இருப்பதும், வெப்பத்தை எளிதில் உட்கொண்டு விரைவில் சூடேற உதவும். எரிபொருள் செலவு குறையும்.

1988ல் ஒரு எங்கள் ஊரில் ஒரு பிரபலமான சமையற்கலங்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்று, மூடி உட்புறமாக அமையும், கருப்பு வண்ணத்திலான அழுத்த சமையற்கலன் ஏதாவது இருக்கிறதா என்று கேட்ட பொழுது சிப்பந்தி உதட்டைப் பிதுக்கி இல்லையென்று தலையாட்டி விட்டு “எதற்கும் முதலாளியைக் கேட்கிறேன். சற்று பொறுங்கள்” என்று கூறிச் சென்றார். சில நிமிடங்களில் தன் இருக்கையில் இருந்து ஓடிவந்த முதலாளி என்னை ஒரு சிறப்பு விருந்தினரைப் போலக் கவனித்தார். குளிர்பானம் வாங்கி வரச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் உள்ளறையிலிருந்து ஒரு சமையற்கலன் கொண்டு வரப்பட்டது.

நான் எதிர்பார்த்தபடியே அது இருந்ததால் பணத்தைக் கொடுத்து வரவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டேன். சமையற்கலன் உறையிடப்பட்டுக் கட்டப்படும் நேரத்தில் முதலாளியிடம் பேசியபோது அவரது சிறப்பான கவனத்திற்குக் காரணம் புரிந்து விட்டது. “நான் உங்களுக்குப் பழைய விலையில்தான் தருகிறேனாக்கும்” என்று பெருமை பேசிய அவர். “ஐந்தாறு ஆண்டுகளாக இதனை யாருமே கேட்காமலும் விற்க முடியாமலும்” வைத்திருப்பதான உண்மையையும் உடைத்து விட்டார். ஆயினும் நான் கவலைப் படவில்லை. வாங்கி வந்தேன். பதினாறு ஆண்டுகளில் என் நம்பிக்கை பொய்த்து விடவில்லை.

பி.கு. அறிவியல் தகவல் என்ற முறையில் எழுதுவதால் நான் சமையற்கலங்களின் நிறுவனங்கள் (Brand Name) பற்றி எழுதவில்லை.
|
Comments:
ஆச்சிமகனுக்கு,

நல்ல பயனுள்ள செய்திகளை புரியும் படி எழுதிக் கொண்டு வருகிறீர்கள். கற்றலின் இனிமையைப் பலரும் உணரட்டும். வளர்க!

இங்கு நீங்கள் பயன்படுத்திய இரண்டு சொற்களைப் பற்றிச் சொல்ல முற்படுகிறேன். சமையற்கலன் என்று இரண்டு பெயர்ச்சொற்களை அடுத்தடுத்துப் போட்டு ஒரு கூட்டுச் சொல்லை உருவாக்குவது கூடியவரை தவிர்க்கப் படவேண்டியது. இரு பெயர்ச்சொல்லை கூட்டுவது என்பது செருமானிய முறை. ஆங்கிலத்தில் அதை sausage English என்று சொல்லுவார்கள். தமிழில் சமைத்தல் என்பது வினை. (அது குமைத்தலோடு தொடர்பு கொண்டது.) சமை என்பது வினையடி. சமைக்கலன் என்று சொல்லும் போதே அந்த வினையைச் செய்யும் கலன் என்று பொருளைப் பெற்று விடும். ஊடே "அல்" என்னும் ஈறு தேவையற்று வர வேண்டாம். தமிழில் கலைச்சொற்கள் பரவ வேண்டுமானால் அவற்றின் நறுக்குச் (size) சுருங்க வேண்டும். தெறித்தாற் போல இருக்க வேண்டும்.

அடுத்தது gasket என்ற சொல்; பல இடங்களில், குறிப்பாக வேதிச் செலுத்தத் தொழிலில் (chemical process industry), பயன்படுத்தும் சொல். அந்த சொல்லின் பிறப்புத் தோற்றம் சரியாய்த் தெரியவில்லை என்றே சொற்பிறப்பு அகரமுதலிகள் சொல்லுகின்றன. gasket என்பது எல்லாவிதமான கசிவுகளையும் (leaks) அடைக்கிற காரணத்தால் கசியடை என்றே சொல்லலாம். (கசிவு+அடை = கசிவடை என்று சொன்னால் பொருள் மாறிவிடும்; தவிர இரண்டுபெயர்ச்சொல்லின் கூட்டாய் ஆகிவிடும். எனவே அதைத் தவிர்க்கிறேன்.) கசிதல் என்பது வினை. அந்தக் கசிதலை அடைக்கும் பொருளைக் கசியடை என்றே சொல்லலாம். இங்கு அழுத்தச் சமைக்கலனில் கசியடை வளையமாய் இருந்தாலும், எல்லாக் கசியடையும் வளையமாய் இருக்கத் தேவையல்லை. எனவே வளையம் என்ற பொதுமைச் சொல்லிற்கு மாறாக, கசியடை என்ற விதப்புச் சொல்லைப் புழங்கலாம்.

அன்புடன்,
இராம.கி.
 
நன்றி இராம.கி ஐயா.

தாங்கள் பரிந்துரைப்பது போன்ற இத்தகைய நல்ல தமிழ்ச் சொற்களை எங்கிருந்து பெறலாம்?

ஒரு கருத்தைத் தமிழில் சொல்லும் போது அப்போது தோன்றுகின்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துகிறேன். அது முழுவதும் சரியில்லை என்று தோன்றினாலும் கருத்தை வலியுறுத்த இது போதும் என்று எடுத்துக் கொள்கிறேன். பிறகு தங்களைப் போன்றவர்கள் சுட்டிக் காட்டும் பொழுது இவ்வளவு நல்ல சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாமே .. முன்னதாகத் தெரியாமல் போயிற்றே என்ற ஏக்கம் தான் வருகிறது.

இத்தகைய சொற்களை இணையத்தில் இருந்து பெறலாமா? நூல்கள் ஏதேனும் உள்ளனவா? தாங்கள் இத்தகைய சொற்களைத் தொகுத்து வைத்திருக்கிறீர்களா? என்று அறியத் தாருங்கள்.

அன்புடன்,
ஆச்சிமகன்
 
Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?