<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

27.6.04

முகங்களும் முகமூடிகளும்  

தனக்குத் தாய் தந்தையர் சூட்டிய பெயரால் ஒருவர் அழைக்கப் படுவதற்கும் தானே தனக்குச் சூட்டிக் கொண்ட பெயரால் அவர் அழைக்கப் படுவதற்கும் என்ன வேறுபாடு?

“முத்தையா” என்று பெற்றோராலும் “நாராயணன்” என்று தத்தெடுத்த தாய் தந்தையராலும் அழைக்கப் பட்ட ஒருவர் “கண்ணதாசன்” என்று, தானே சூட்டிக் கொண்ட பெயரால் தான் நாடு முழுதும் அறியப்பட்டார். அது அவரது முகமூடியா? இல்லையே. கண்ணதாசன் என்பது தானே அவரைச் சரியாக அடையாளப்படுத்தும் பெயர்?

பெயர் என்பதே ஒருவரை அடையாளம் கண்டுகொள்ளத் தானே? பலரையும் அழைக்கும், நாடெங்கும் வழக்கில் உள்ள பெயரால் ஒருவர் அழைக்கப் படுவதை 'உண்மைப் பெயர்' என்றும் தாமே சூட்டிக் கொள்ளும் தனித்துவம் வாய்ந்த பெயரால் அழைக்கப் படுவதை 'முகமூடி' மாட்டிக் கொள்வதாகச் சொல்வதையும் நான் மறுக்கிறேன்.

“பரிதிமாற் கலைஞர்” என்றும் “மறைமலை அடிகள்” என்றும் “பெருஞ்சித்திரனார்” என்றும் “பாரதிதாசன்” என்றும் “ஜெயகாந்தன்” என்றும் இப்படியாக வழங்கப் படும் ஆயிரக்கணக்கான பெயர்கள் எல்லாம் அவர்களை மிகத் துல்லியமாக அடையாளம் காட்டத்தானே? இப்பெயர்களை எல்லாம் அவர்களின் முகமூடி எனல் தகுமோ?

ஒருவர் தன்னைப் பிறர் அறியா வண்ணம் மறைத்துக் கொள்வதற்காக மாற்றுப் பெயர் சூட்டிக் கொள்வது ஒருவகை.. பிறரிடமிருந்து தன்னை வேறுபடுத்திச் சரியாக அடையாளம் காண்பதற்காக மாற்றுப் பெயர் சூட்டிக் கொள்வது வேறுவகை.

நடைமுறை வாழ்வில் சராசரி மானுடச் சிந்தனைகளிலிருந்து மாறுபடும் எவையுமே கேள்விக்கும் கேலிக்கும் இலக்காவது இயல்புதான். இவ்வகையில் தான் மன நோயாளியையும் பேரறிஞனையும் உலகம் ஒரே தட்டில் நிறுத்திக் குற்றம் சாட்டுகிறது.

மறுமொழிப் பெட்டிகளிலும் மின்னஞ்சல்களிலும் தன் உண்மைப் பெயரையும் தன் முகவரியையும் தெரிவிக்காமல் 'பெயரிலி'யாகவே வந்து விட்டுப் போவது வேண்டுமானால் முகமூடி அணிதலாகக் கருதப்படலாம். தன்னைத் தனித்துவப் படுத்துதற்காக ஒருவன் சூட்டிக் கொள்ளும் பெயர் முகமூடி ஆகாது என்றுதான் நான் கருதுகிறேன்.

ராமன் என்ற பெயர் உள்ள ஒருவன் சோமன் என்ற பெயரில் எழுதினால் அதையும் “உண்மைப் பெயர்” என்று பலரும் கருதக் கூடும். ஆனால் அப்பெயர் அவனைத் தனித்துவப் படுத்துவதில்லையே.. ஒருவகையில் பாரத்தால் இதுதானே முகமூடி அணிவதற்கு இணையானது?

முகமூடி என்றதும் என் எண்ணங்கள் சிறகடித்து வேறொரு தளத்தில் பறக்கின்றன...

“உலகம் ஒரு நாடக மேடை.. அதில் நாமெல்லாம் நடிகர்கள்...”

“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்..”

இவை பற்றியெல்லாம் பிறகு பார்ப்போம்...
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?