<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

23.4.04

மலரும் உள்ளம்  

இன்றைய இளைய தலைமுறையைப் பார்த்தால் எதிர்காலத் தமிழகம் பற்றியும் இந்தியாவைப்பற்றியும் மிகவும் கவலையாக உள்ளது. ABCDs (America Born Confused Desis) பற்றி நான் பேசவில்லை.

தமிழகத்தில் வளரும் பள்ளி மாணவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

இன்று தமிழகத்தில் பள்ளிப் படிப்பை முடித்து வரும் இளைஞர்களில் தொன்னுாறு சதவீதம் பேருக்குத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ சுயமாகச் சிந்தித்துத் தவறின்றி (எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை இன்றி) ஒரே ஒரு பக்க அளவிற்கு எழுதும் திறன்கூட இல்லை என்பது பரிதாபமான உண்மை. எழுதுவதே இயலாதென்றால் பேச்சுத்திறன் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

சென்ற தலைமுறையோடு ஒப்பிடும்போது இன்றைய இளைய தலைமுறையினரிடம் நான் கீழ்க்காணும் வேறுபாடுகளைக் காண்கிறேன்:

1. படிக்கும் பழக்கம் அடியோடு இல்லை.. கவிதையாகட்டும் கதைகளாகட்டும் கட்டுரைகள் அல்லது பொதுவான நுால்களாகட்டும் இவர்கள் எதையுமே படிப்பதில்லை...

2. தொலைக்காட்சிப் பெட்டிமுன் பொம்மையாக அமர்ந்து மணிக்கணக்கில் நாள் கணக்கில் நேரத்தை வீணடிக்கிறார்கள். நிகழ்ச்சிகளைத் தெரிவு செய்து பார்ப்பதில்லை.

3. இலட்சியங்கள், குறிக்கோள்கள், நோக்கங்கள் என்று குறிப்பாக எதையும் கொண்டிருப்பதில்லை. குறைந்த உழைப்பில் நிறைந்த பொருளீட்டும் பேராசை உள்ளதே அன்றி உண்மையின்பால் ஆழ்ந்த ஈடுபாடு, உழைப்பில் நம்பிக்கை, திட்டமிட்ட செயலாக்கம் என்பதெல்லாம் இல்லவே இல்லை.

4. பொய்மையும் மாய்மாலமும் நிறைந்த திரைப்படங்கள், திரைப்பட நடிகர்கள் பால் இவர்களுக்குள்ள அதீத ஈடுபாடு... இவர்களது அறிவுத்திறனையும் ஆளுமைப்பண்பையும் வளர்த்தெடுக்கும் ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களிடம் இருப்பதில்லை.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் சமுதாயம் முழுவதும் பொருளாதாரம் சார்ந்த வாழ்வை நோக்கித் திரும்பும் போது, கொள்கைகளும் கோட்பாடுகளும் காசுக்காகக் கைகழுவப்படும் போது இளைய தலைமுறையைப் பற்றி மட்டும் புலம்பி என்ன பயன்?

மாணவர்களிடம் படிக்கும் பழக்கம் இல்லாமல் போனதற்கு கல்வி வணிகமயமானதும் ஆங்கிலக்கல்வி மோகமும் காரணம் என்று தோன்றுகிறது. சென்னையைத் தவிர்த்துத் தமிழக நகரங்களில் பேசும்மொழி, தொடர்புமொழி தமிழ்தான். ஆனால் கீழ்த்தட்டு நடுத்தர வகுப்பில் தொடங்கி அனைத்துக் குழந்தைகளும் செல்லும் பள்ளிகளோ ஆங்கிலப் பள்ளிகள். பயிலும் மொழியோ ஆங்கிலம்.

தாய்மொழியே பயன்பாட்டு மொழியாக இருக்கும்போது அம்மொழியே பயிலும்மொழியாகவும் இருந்தால் மொழிச்சுமை இன்றிப் புரிந்து படிக்கலாம்.

(இதைப்பற்றி நண்பர் ஒருவரிடம் பேசும்போது ஆங்கிலத்தில் படித்ததால் தானே நம் இளைஞர்கள் பலபேர் அமெரிக்கா சென்று பணிபுரிய முடிகிறது என்றார்.. அவரிடம். "இல்லையில்லை அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்வாயிலாகப் பள்ளிப் படிப்பைப் புரிந்து படித்ததால்தான் ஆங்கிலமும் அவர்களுக்குச் சுலபமாகப் புரிந்தது... அறிவியலும் புரிந்தது... அமெரிக்காவிற்கும் செல்ல முடிந்தது" என்று நான் பதில் சொன்னேன்: உண்மைதானே?)

முற்றிலும் வணிக மயமான கல்விக்கூடங்களிலோ மாதம் ரூ. 300க்கும் 500க்கும் மாடாய் உழைக்கும் அப்பாவி ஆசிரியர் கூட்டம். தம் தலை எழுத்தை நொந்து கொண்டு நல்ல வேலைக்குத் தவமிருக்கும் இவர்கள் பயனுள்ள கல்வியைப் புரியும்படி போதிப்பது எப்படி?

பள்ளிநிர்வாகங்களுக்கோ நுாறு சதவீதம் தேர்வு விழுக்காடு.. மாநில முதல்நிலை.. மாவட்ட முதல்நிலை.. அடைவதுதான் குறிக்கோள் (அப்போதுதானே அடுத்த கல்வியாண்டில் நிறைய மாணவர்கள் சேர்வார்கள்?) இதனால் மதிப்பெண்ணே குறிக்கோளாய், மாணவர்கள் தேர்வு.. தேர்வு.. என்று கசக்கிப் பிழியப்படுகிறார்கள். ஒரு வரியும் புரியாமல் குருட்டு மனப்பாடம் செய்து வாந்தி எடுத்தால் அறிவு எப்படி வளரும்?

ஒரு நாளைக்கு நான்கு இட்டலி வீதம் ஒருமாத காலம் சாப்பிட்டு, சீரணித்து வாழ்வதற்கும் அந்த இட்டலிகளை சுமப்பதற்கும் உள்ள வேறுபாடு நமக்குப் புரியும். அதே வேறுபாடுதான் பாடங்களைப் படித்துப் புரிந்து கொள்வதற்கும் குருட்டு மனப்பாடம் செய்வதற்கும் உள்ள வேறுபாடு.

புரிந்து படிப்பதற்கு மொழிஞானம் தான் பெரும் தேவை. நான் இதுவரை எழுதியவற்றையெல்லாம் படித்தபிறகும் உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பில் ஆங்கிலம் தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால், அவர்களுடன் அன்றாடம் ஆங்கிலத்தில்
பேசிப்பழகுங்கள். ஆங்கிலத்தை பயிலும் மொழியாக மட்டுமின்றிப் பழகும் மொழியாகவும் கொள்ளுங்கள்.

பழக ஒரு மொழியும் படிக்க வேறு மொழியும் இருப்பதுதான் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் இல்லாமல் போவதற்குக் காரணம். மொழியோடும் நுால்களோடும் அதன் பயனாக அறிவோடும் வளர்ச்சியோடும் அவர்கள் அந்நியப் பட்டுப் போகிறார்கள்.

உங்களுக்கு ஆங்கில அறிவு போதுமான அளவு இல்லையென்றால்...... அடுத்த கட்டுரையில் தொடர்கிறேன்....

என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்...

அன்புடன்
ஆச்சிமகன்
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?