<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

27.4.04

மலரும் உள்ளம் – 3 

நான் சொல்ல வந்தது இது தான் : தாயின் மடியில் தவழும் போது கேட்கும் தாலாட்டில் தொடங்கி ஒரு முழுவளர்ச்சி பெற்ற மனிதனாகும் வரை ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தமிழின் இனிமையை அள்ளிப் பருகும் வாய்ப்பை தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் நாம் அளித்திட வேண்டும்.

“கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்”
என்றார் பாரதிதாசன்.

தமிழைத் தவறின்றிக் கற்றால் பிற மொழிக் கல்வியும் பிற துறை அறிவும் ‘மடிதற்றுத் தான் முந்துரும்.’.

தமிழ் நாட்டில் கூடத் தமிழ் ஆர்வலர்களுக்கு இடர்களே இல்லை என்று கருத முடியவில்லை. என்னுடைய கசப்பான அனுபவம் ஒன்று. : எங்கள் ஊரில் ஒரு தமிழ்ச் சங்கம். பெரும்பாலும் தமிழ் ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களை உறுப்பினராகக் கொண்டுள்ள அந்தத் தமிழ்ச் சங்கத்தில் ஆண்டு தோறும் பள்ளிக் குழந்தைகளுக்குப் போட்டிகள் நடத்திப் பரிசு வழங்கி வருகிறார்கள். தொடக்க நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும்பாலும் அறநுால் ஒப்புவித்தல் போட்டிகள்.

என் மகள் முதல் வகுப்பில் படித்த போது பள்ளிக்கு அந்தத் தமிழ்ச் சங்கத்திலிருந்து போட்டி பற்றிய அறிவிப்பு வந்தது. அதில் கலந்து கொள்ள அவளை ஊக்குவித்தேன். தினமும் அவளுடன் நானும் அமர்ந்து ஆத்திசூடி முழுவதும் மனப்பாடம் செய்ய வைத்தேன். போட்டிக்குரிய நாளும் வந்தது. ஓரு ஞாயிறு காலை. போட்டிக்கு என் மகளை அழைத்துச் சென்ற எனக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.

அங்கே போட்டிக்கு வந்து, நடுவர் முன் வரிசையாகக் காத்திருந்த சின்னஞ்சிறு மழலைகள் தம் முறை வந்ததும் ஆத்திசூடியை ஒப்புவிக்கத் தொடங்கினர்.. எப்படித் தெரியுமா?

அறஞ் செய விரும்பு.
நல்லன செய்வதற்கு ஆசைப்படு.

ஆறுவது சினம்.
கோபம் கொள்ளாமல் இரு..

இயல்வது கரவேல்.
உள்ளதை ஒளிக்காதே.

இப்படி ஒவ்வொரு வரிப் பாடலும் அதன் தொடர்ச்சியாகப் பொருளும் சொல்லிக் கொண்டிருந்தனர். கேட்கவே எனக்குச் சகிக்கவில்லை.

ஒருவாய் சோறும் ஒருபிடி மண்ணும் உண்ணச் சொல்வது போல் கொடுமையல்லவா இது?

அகர வரிசையில் எதுகை மோனையோடு அழகுற அமைந்த ஆத்திசூடியை - அதைக் கூறும் இன்பத்தை இப்படிக் கொன்றழிப்பாரும் உண்டா என்று நொந்து போனேன்.

அப்போது அந்தத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். நான் படித்த கல்லுாரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி ஆற்றியவர். அவரிடம் சென்று மெதுவாகக் கேட்டேன் : “ஐயா பிள்ளைகள் எல்லாம் பொருளுடன் சேர்த்தல்லவா ஒப்புவிக்கிறார்கள். இது பாடல் இன்பத்தை அழித்து விடுமே. பாடலை மட்டும் ஒப்புவிக்கச் சொன்னால் போதாதா?”.

அவருக்கு உடனே கோபம் வந்துவிட்டது. “என்ன நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள். பொருள் புரியாமல் படித்தால் வாழ்க்கையில் பின்பற்ற முடியுமா?” என்று கேட்டார்.

‘நீங்கள் படித்ததை எல்லாம் வாழ்க்கையில் பின்பற்றும் அழகு தெரியாதாக்கும்’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

என் மகள் அந்தப் போட்டியில் பங்கு பெறவே இல்லை.. வீட்டிற்குச் செல்லும் முன் அவளுக்குப் பிடித்த இனிப்புகளைப் பரிசாக வாங்கிக் கொடுத்தேன்.

பாடல்கள் எழுதப் பட்ட நோக்கமே எளிதில் நினைவில் நிறுத்துவதற்காகத் தான். உரைநடையை நினைவில் இருத்துதலைவிடப் பாடலை நினைவில் இருத்துதல் எளிது.. இவர்கள் கூறும் ‘பொருள்’ அல்லது ‘உரை’ அழகிய நடையில் உள்ள தமிழை அழுக்கு நடையில் மாற்றும் வித்தைதான்.

இத்தகைய தவறான வழிகாட்டுதல்களால் தமிழ் வளர்ச்சி - குழந்தைகளின் தமிழார்வம் – பாதிக்கப்படுகிறது..

கண்ணதாசனை உருவாக்கிய மண்ணில் எத்தனையோ கவிஞர்கள் உருவாகாமல் போனதற்கு இவர்களெல்லாம் காரணம் என்று தோன்றுகிறது.

(தொடரும்)
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?