<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

26.4.04

மலரும் உள்ளம் .. 2 

தாய்ப் பாலும் தாய் மொழியும் ஈடு இணையற்றவை.

அறிவியல் வளர்ச்சியால் மாட்டுப்பால் பொடியாக்கப் பட்டதும் பிரபல நிறுவனங்களால் அவை பல்வேறு வடிவங்களைப் பெற்றுக் குழந்தை உணவாகவும், புட்டிப் பாலாகவும் மாறியதும் நாமறிவோம்.

இதன் காரணமாகத் தமது அழகைப் பராமரிப்பதாக நினைத்துக் கொண்டு தாய்ப்பால் தர மறுத்த அரைகுறைகள் பலர்.

தாய்ப் பாலை விடப் புட்டிப் பாலில் சத்து மிகுதியென நம்பிக் குழந்தைகளை வளர்த்த அப்பாவிகள் பலர்.

இவர்களுக்கெல்லாம் தாய்ப் பாலின் உயர்வை உணர்த்த மிகப் பெரும் இயக்கங்களை நடத்த வேண்டியிருந்ததும்,, அரசு ஆணை மூலமாகக் குழந்தை உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் தாய்ப் பாலின் மகத்துவத்தைக் குறிப்பிட்டே விளம்பரமும் வணிகமும் செய்யும் நிர்ப்பந்த நிலை ஏற்பட்டதும் நாமறிவோம்.

தாய்மொழிக் கல்விக்கும் இதே போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுத் தீர வேண்டும்.

அறியாமை மிகுந்த நாட்டில் உண்மையை உரத்த குரலில் சொல்லப் பலர் முன்வர வேண்டும்.

இல்லையென்றால் சுயநல சக்திகள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவதை ஒருநாளும் நிறுத்த மாட்டார்கள்.

அன்று தாய்மார்கள் பாடிய தாலாட்டில் தமிழுணர்வை ஊட்டி வளர்த்தார்கள்.

என் தாய் பாடிய தாலாட்டில் அவர்கள் ஊட்டியது தமிழுணர்வு மட்டுமல்ல.. குலப் பெருமையும் குடும்பப் பெருமையும் வாழும் வழிகளும் வாழ்க்கை நெறிகளும் என்று சொல்லிக் கொண்டே போகலாம்....

உதாரணத்திற்கு ஒன்று :

மாம்பழத்தைக் கீறி வயலுக்கு உரம் போட்டுத்
தேன் பாய்ந்து நெல்வளரும் செல்வமுளார் புத்திரனோ..

மாம்பழத்தை உரமாக்கி, தேனை நீராக்கிப் பயிர் வளர்த்தலை விடவும் வளமையைத் (உள்ளதோ இல்லையோ கற்பனையிலாவது கண்டு களித்துத்) தாலாட்டாய்ப் பாடித் தமிழ் வளர்த்த நாட்கள்..

இன்னும் ஒன்று :

ஆத்தா அழுத கண்ணீர்
ஆறாகப் பெருகி...
ஆனை குளித்தோடி
குளமாகப் பெருகி..
குதிரை குளித்தோடி
இஞ்சிக்குப் பாய்ந்து
எலுமிச்சை வேரோடி..
மஞ்சளுக்குப் பாய்ந்து
மல்லிகைக்கு வேரோடி..
வாழைக்குப் பாய்ந்து
வற்றியதாம் கண்ணீரும்................

ஆனையும் குதிரையும் பெருமிதத்திற்கும் ஆற்றலுக்கும் சான்றாகுமன்றோ?

இஞ்சியும் எலுமிச்சையும் மஞ்சளும் மல்லிகையும் வாழையும் தம் நந்குணத்தால், நன்மணத்தால் மங்கலப் பண்புகளால் பயன்பாட்டால் மானுட வாழ்வோடு பிணைந்தவை அல்லவா.

தமிழ்ச் சான்றோர், பேரறிஞர் தமிழண்ணல் அவர்கள் ‘தாலாட்டு’ என்ற பெயரில் இத்தகைய பாடல்களையெல்லாம் தொகுத்தளித்து உள்ளார்கள்.
திருக்குறளோடும் திருவாசகத்தோடும் பாரதியார் பாடல்களோடும் பெரிய புராணத்தோடும் நாங்கள் போற்றிப் பாதுகாக்கும் நுால்களுள் அதுவும் ஒன்று..

தாயின் மடியில் இப்படி வளர்ந்த தமிழ் பிறகு மழலை பேசும் காலத்தில் குழந்தைக் கவிஞர் அழ..வள்ளியப்பாவின் பாடல்களோடு மலர்ந்தது.

அணிலே அணிலே ஓடி வா.
அழகு அணிலே ஓடி வா.
கொய்யா மரம் ஏறி வா
குண்டுப் பழம் கொண்டு வா

பாதிப் பழம் என்னிடம்
மீதிப் பழம் உன்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்....

எளிமை.. இனிமை.. குழந்தைகளுக்கு ஏற்ற அழகிய.. நெருடல் இல்லாத வரிகள்.. குழந்தைக் கவிஞர் அழ..வள்ளியப்பாவின் “மலரும் உள்ளம்” என்ற நுால் முழுவதும் இத்தகைய அற்புதப் பாடல்கள்! (அவரது நுாலின் பால் எழுந்த ஈர்ப்பும் மயக்கமுமே இத்தொடருக்கு நான் இந்தப் பெயரைத் தெரிவு செய்ததின் காரணம்.)

நிலாவைக் காட்டிச் சோறுாட்டிய அவரது பாடல்வரிகளை அறியாத தமிழரும் அன்று உண்டோ?

அதன்பிறகு தொடர்ந்த பள்ளிக்கல்வி. .கண்டனுார் என்ற அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் வானுயர எழுந்த வனப்புமிகு கல்விக் கூடம். வீரப்ப செட்டியார் என்ற கொடைவள்ளல் தாம் ஈட்டிய பொருளை யெல்லாம் ஈந்து கட்டிய அற்புதக் கல்விக் கூடம். அங்கே பணியாற்றிய ஆசிரியப் பெருந்தகைகள்!

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாணவரிடமும் பத்துக் காசுகள் பெற்று அதிலிருந்து அற்புதமான குழந்தைகள் நுால்களை, அம்புலி மாமா, மஞ்சரி, கோகுலம் போன்ற சிறுவர் மாத இதழ்களை வாங்கி இளம்தளிர்களுக்குப் படிக்கும் பழக்கத்தையும் தமிழார்வத்தையும் ஏற்படுத்திய அந்தத் தலைமை ஆசிரியர்!

ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னெறி போன்ற அறநுால்களை, அவற்றிலிருந்த செய்யுள்களை – மனப்பாடப் பகுதி மட்டுமின்றி மொத்தச் செய்யுள்களையும் மனப்பாடம் செய்ய வைத்து – அதை ஊக்குவிப்பதற்காகப் போட்டிகள் நடத்தித் தமிழை உணர வைத்த தமிழாசிரியர்கள்..

எதுகை மோனையுடன் கூடிய இசைப் பாடல்களாகிய வேத உபநிடதங்களைச் சிறுவயதிலிருந்து படித்து மனப்பாடம் செய்த ஓரினம் பல நுாறு ஆண்டுகளாய் அறிவுலகை ஆண்டதை நாம் அறிவோம்.

தமிழாலும் அறிவுலகை ஆளும் தகுதியை அளித்திட முடியும் என்பதற்கு இளம்வயதில் தமிழ்ப்பாடல்களைத் தேடித் தேடிப் படித்த எண்ணற்ற அறிஞர் பெருமக்களைச் சுட்டிக் காட்டலாம். கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் பாரதியையும் கற்ற எவரும் ‘வேடிக்கை மனிதரைப் போலே வீழ்ந்து கிடப்பதில்லை’.

(தொடரும்)
|
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?