<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

10.4.19

என் தாயின் நினைவில்  

எங்கள் அன்னை சாலாச்சி 
எவரும் போற்றும் மாதரசி 
தங்க மக்கள் ஐவரையும் 
தரணிக்கு ஈந்த பேரரசி

ஆணும் பெண்ணும் அடுத்தடுத்து 
அவள் போல் பெற்றவர் யாருமில்லை 
மானம் பெரிதென வாழ்ந்திருந்தாள் 
மக்கள் நலனே நினைத்திருந்தாள்

செல்வ வளமும் கண்டதில்லை 
செருக்குடன் எதையும் சொன்னதில்லை 
அல்லும் பகலும் உழைத்திருந்தாள் 
ஆண்டவனுக்கே பயந்திருந்தாள்

 கள்ளம் கபடம் அறியாமல் 
கண்ணீர் பிறருக்குத் தெரியாமல் 
உள்ளம் தூய்மை குறையாமல்
 உத்தமியாக வாழ்ந்திருந்தாள்.
| (0) விரிவான மறுமொழி

9.3.19

உதவி தேடி வரும்..... 

சென்ற ஞாயிற்றுக்கிழமை 2019 பிப்ரவரி 24 நண்பகல் 12 மணி அளவில் சென்னையிலிருந்து நானும் என் மனைவியும் எங்களது i10 காரில் புறப்பட்டு காரைக்குடிக்கு வந்து கொண்டிருந்தோம். 

சுமார் இரண்டரை மணி அளவில் விழுப்புரம் அருகில் வந்தபோது காரின் முன்பக்க இடதுபுற டயர் வெடித்துவிட்டது.

 எப்போதும் நான்கு டயர்களிலும் காற்றழுத்தத்தை  சரிபார்த்த பிறகே புறப்படுவோம். அன்றும் அப்படித்தான். ஆனால் வெயில் கடுமையாக இருந்ததால் சாலை மிகவும் சூடாக இருந்தது. டயர்களும் சுமார் 30,000 கிலோ மீட்டர் ஓடி தேய்வடைந்து இருந்ததால் ஒரு டயர் வெடித்து விட்டது.

 எப்போதுமே என்பதிலிருந்து நூறு கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் செல்வதில்லை என்பதால் கார் முழுவதும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தது படபடவென சப்தம் வந்ததும் மெதுவாக காரை ஓரம்கட்டி இறங்கினோம். 

எங்கள் காருக்கு பின்புறம் ஒரு i20 காரில் வந்துகொண்டிருந்த  ராஜ்குமார் கௌதம் பாலாஜி என்ற மூவர் சங்ககிரியை சேர்ந்த இளைஞர்கள் எங்கள் கார் டயர் வெடித்ததைப் பார்த்ததும் அவர்கள் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஓடி  வந்தார்கள். முன்புற டயர்  வெடித்திருந்ததைப் பார்த்ததும் ஸ்டெப்னி இருக்கிறதா என்று கேட்டு மளமளவென வேலையில் இறங்கினார்கள். வெடித்தத டயரை கழட்டிவிட்டு ஸ்டெப்னியை சுமார் அரை மணி நேரத்துக்குள் பொருத்தி வண்டியை ஓடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

 அந்த நெடுஞ்சாலையில் பறந்துகொண்டிருந்த எத்தனையோ வாகனங்களுக்கு இடையே எங்களுக்கு உதவி செய்ய இறைவனே அனுப்பிய தூதர்களைப் போல இந்த மூவரும் வந்து உடனடியாக உதவி செய்து எங்கள் காரை சரிப்படுத்திக் கொடுத்தனர். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.

கார் வாங்கும்போது ஒவ்வொரு நிறுவனமும் Road side Assistance என்று பிரமாதமாக விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் பாதிப்பின் போது அழைத்தால் காரை எப்படியாவது tow செய்துகொண்டு எங்கள் சர்வீஸ் சென்டருக்கு வந்து விடுங்கள் என்கிறார்கள். அதுவும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் நாட்களில் போன் எடுக்க வே ஆள் இருக்க மாட்டார்கள் தனிப்பட்ட மெக்கானிக் எவரையும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேடிப்பிடிப்பது கடினம்.  பெரிய ஊர்களுக்கு அருகில் இருந்தால் யாராவது ஒரு மெக்கானிக்கை அழைத்து வந்துவிடலாம்  அதுவே நெடுந்தொலைவு என்றால் நேரம் விரயம் பாடு மிகுதி இதையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது அந்த இளைஞர்களின் உதவி மிக மிகப் பெரியது.

அதன்பிறகு காரை மெதுவாக 60 கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டு இரவு 8 மணிக்கு ஊர் வந்து சேர்ந்தோம். வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத நிகழ்வு இது.

டயர் வெடித்த போது 80 கிமீ வேகத்தில் செல்லாமல் 120-140ல் சென்று கொண்டிருந்தால்.... 

அந்த மூவரும் உதவிக்கு வராமல் சாலையோரம் நாங்கள் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தால்...

இதைப் பற்றிக் கேள்விப்பட்டதும் என் தங்கை சொன்னாள்... வாழ்நாள் முழுவதும் அறிந்தும் அறியாமலும் எத்தனை பேருக்கு நாம் உதவியிருப்போம். அதன் பலனாகத் தான் நம் தேவைக்கு முகமறியாத இந்த நல்ல மனிதர்களின் உதவி கிடைத்தது. இனியும் சமுதாயத்துக்கு நம்மால் முடிந்த நல்லதைச் செய்து கொண்டேயிருப்போம். நமக்கும் எங்கிருந்தாவது உதவி வரும்...
| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?