<$BlogRSDURL$>

"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" - வள்ளலார். Thank you for your visit. This Tamil blog is in Unicode. If you can't see tamil text, right click & select Encoding -> Unicode (UTF-8). Click on 'Comments' and write your opinion in Tamil or English.

25.5.04

தும்மலோ தும்மல் 

கண்களும் கண்ணாடியும் பற்றி
செல்வராஜ் எழுதிய மிகச் சுவையான வலைப் பதிவைப் படித்தபின் என் மூக்கு பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற உணர்வு எனக்குத் தோன்றியது.

ஏனென்றால் என் மூக்கோடும் தும்மலோடும் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போராடி அதற்கு ஒரு வேடிக்கையான தீர்வு இணையத் தொடர்பின் காரணமாகக் கிடைத்த கதையை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று என் கைகள் துடிக்கின்றன.

நினைவு தெரிந்த நாளாய் .. மூன்று, நான்கு வயது சிறுவனாய் இருந்த காலந்தொட்டு ஒவ்வொரு நாள் காலையிலும் நான் தும்மிக் கொண்டே துயில் எழுவேன். அடுக்கடுக்கான தும்மல்கள் ஒவ்வொரு காலையும் நாற்பது .. அறுபது .. அல்லது நுாறு தும்மல்கள்.

காலை எட்டுமணிக்குப் பிறகு.. நல்ல வெய்யில் ஏறிய பிறகு தும்மல் தானாக நின்று விடும்.

தினந்தோறும் இப்படித் தானா என்றால் இல்லை. எப்போதாவது உடல் நலம் குன்றும் போது.. காய்ச்சல், இருமல், சளி என்று வேறு வகையான உடல்நலக் கோளாறுக்கு உள்ளாகும் போது.. அந்த நாட்களில் மட்டும்.. தும்மல் வராது.

என் தாய்க்கும் என்னை வளர்த்த என் பாட்டிக்கும் (என் தாயின் தாய் .. நாங்கள் ஆயா என்றழைப்போம்) நான் தும்மலின்றித் துயில் எழுந்தால் பெரிய கவலை தோன்றி விடும். “உடம்புக்கு என்னப்பா” என்று கரிசனத்தோடு கேட்டுவிடுவார்கள்.

ஆக எனது நல்ல உடல்நலத்துக்கு அடையாளம் தும்மியபடி துயில் எழுவது தான் என்பது என்னைப் பொருத்தவரை எழுதப் படாத விதியாகி விட்டது.

இலக்கிய ஆர்வம் தோன்றிய போது தும்மலைப் பற்றிய கவிதைகளைத் தேடிப் படித்திருக்கிறேன்.

வள்ளுவர் தும்மலைப் பற்றிப் பாடியவையே ஒரு நாடகமாகக் கருதத் தக்கன:

யாரோ நம்மை நினைப்பதால் நமக்குத் தும்மல் வருவதாக அந்தக் காலத்தில் ஒரு கருத்து இருந்திருக்கிறது.

எனவே வருகின்ற தும்மலை அவன் அடக்க முயற்சிக்கிறான். அதைக் கண்ட அவளோ ‘யாரோ உன்னை நினைப்பதை எனக்கு மறைக்கிறாய்’ என்று சொல்லி அழுதாளாம்.

“தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று”.

தும்மினால், வாழ்த்துவது வழக்கம்.

இருவரும் ஊடல்கொண்டு பேசாதிருந்த போது அவளைப் பேச வைப்பதற்காகத் தும்முகிறான். அவளோ வாழ்த்தியதோடு நின்று விடவில்லை. ‘யார் உன்னை நினைத்ததால் தும்மினீர்’ என்று சொல்லி அழத் தொடங்கினாளாம்.

“வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினேன் என்று”

பல்கலைக் கழக விடுதியில் தங்கிப் படித்தபோது என் அறை நண்பன் நிரந்தரத் தலைவலிக்கு உள்ளாகித் துடியாய்த் துடிப்பான். அவனுக்கு இருந்தது நீர் கோர்த்துக் கொள்ளுதலால் உண்டான (Sinus) தலைவலி.

வெய்யில் ஏறியதும் என் தும்மல் நின்றுவிடும். அவனுக்கோ வெய்யில் ஏற ஏறத் தலைவலி தாங்க முடியாமல் போகும். நான் என் தும்மலுக்கு மருத்துவம் செய்து கொள்வது பற்றி அப்போதெல்லாம் நினைத்துப் பார்த்ததே இல்லை. ஆனால் அவனோ எல்லா பிரபல நிபுணர்களையும் பார்த்து எல்லாவிதமான சோதனைகளும் செய்து கொண்டு வருவான்.

மூக்கிற்குள் ஒருவிதமான ஓட்டை போட்டு தலையில் கோர்த்த நீரை வெளியேற்றி ஒரு மருத்துவர் அவனுக்கு ஓரளவு குணம் அளித்தார். ஆனால் மறுபடி நீர் கோர்த்துக் கொண்டால் மறுபடியும் ஓட்டை போடுவதைவிட்டால் வேறு வழியில்லை என்றும் சொல்லியிருந்தார்.

அப்போது அவன் என்னிடம் சொன்ன வார்த்தைகள் வாழ்வில் மறக்க முடியாதவை:

நீ தினமும் தும்மிக் கொண்டே துயில் எழுவதால் உனக்கு நீர் கோர்த்துக் கொள்வதில்லை. இது இயற்கை உனக்கு அளித்த வரம். இல்லையென்றால் நீர் கோர்த்துக் கொண்டிருக்கும். அதனால் தலைவலி வந்திருக்கும். உனக்குத் தும்மலைத் தந்த இறைவனுக்கு நன்றி சொல் என்றான்.

கேட்பதற்கு நன்றாகத் தான் இருந்தது. ஆனால் வளர வளர, வயது ஏற ஏற, நிறைய நுால்களைக் கற்கக் கற்க, வேறுவிதமான பயம் எழுந்தது.

தினமும் தும்முதல் இயற்கைக்கு மாறான ஒரு செயல். எல்லோருக்கும் இயல்பாக இல்லாத ஒரு பழக்கம். இதை இப்படியே விட்டுவிட்டால் வயதான காலத்தில் வேறுவிதமான குறைபாடுகள் ஏதாவது ஏற்பட்டால் என்ன செய்வது?

நுட்பமான உறுப்புகளாகிய கண், காது, மூக்கு, தொண்டை அனைத்தும் ஒவ்வொரு தும்மலிலும் அதிர்வுக்கு உள்ளாகின்றன.
தும்மலே தொடர்கதையானால் பிற்பாடு எதில் கொண்டு சேர்க்கும்?

இத்தகைய பயம் வந்ததும் நானும் மருத்துவரிடம் செல்ல ஆரம்பித்தேன். எங்கள் ஊரில் எனக்கு நன்கு பழக்கமான மருத்துவர் ஒருவர் இதனை ஒவ்வாமை Allergy என்றே அடையாளம் கண்டார். Eosnophilia என்று அதற்கு ஒரு பெயர் இருப்பதாகக் குறித்தார்.

துாங்கும் போது என் உடலில் Histamines என்ற எதிர்ப்பான்கள் உருவாவதாகவும் அதன் காரணமாகவே தும்மல் வருவதாகவும் கூறி Piriton போன்ற Anti-histominic tablets பரிந்துரைத்தார்.

அதற்கு நல்ல விளைவிருந்தது. அந்த மாத்திரையை ஒவ்வொரு இரவும் உண்டால் அடுத்த நாள் தும்மல் இருப்பதில்லை.

அப்பாடா நிம்மதி. தும்மலிலிருந்து விடுதலை என்ற நம்பிக்கையோடு மருத்துவர் குறிப்பிட்டிருந்த மூன்று மாதங்களுக்கு அந்த மாத்திரையை உண்டேன். அந்த மூன்று மாதங்களும் தும்மலே இல்லை.

சரியாகத் தொன்னுாற்று ஒன்றாவது நாள் மாத்திரை சாப்பிடாத நாள். அடுத்த நாள் காலை தும்மத் தொடங்கினேன். அடுக்கடுக்காக.. அப்பாடா எவ்வளவு விடுதலை.. தும்மல் எவ்வளவு ஆனந்தம் என்று கூட அப்போது தோன்றியது.

ஆனாலும் அது தொடரலாமா? உடனே மருத்துவரிடம் ஓடினேன்.

“அது அப்படித்தான். தும்மலை நிரந்தரமாக எல்லாம் நிறுத்த முடியாது. தும்மக் கூடாது என்றால் மாத்திரை உண்ணுங்கள். பரவாயில்லை தும்மலாம் என்றால் மாத்திரையை விட்டுவிடுங்கள்” என்று சொல்லிவிட்டார்.

நான் அந்த மருத்துவரை விட்டுவிட்டேன். அவரை விட அதிகம் படித்த மருத்துவரைத் தேடி .. காது மூக்கு தொண்டையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களைத் தேடி.. மதுரை, சென்னை என்றெல்லாம் ஓடி ஓடிப் பலரையும் கண்டு, ஆலோசித்து, மருந்து, மாத்திரைகளை உண்டு உண்டு.. எதிர்பார்த்த நிரந்தர குணம் கிடைக்கவேயில்லை.

அதன்பிறகு ஒருமுறை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் முழு உடல் பரிசோதனைகளும் செய்தும், முதன்முதலாக எங்கள் ஊர் மருத்துவர் சொல்லியதைத் தவிரப் புதியதாக எதையும் அவர்கள் சொல்லி விடவில்லை.

அவ்வளவுதான் தும்மல் நம் உடன் பிறந்த நோய். நாம் உள்ளவரை நம்மை விட்டு அது போகப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட மாத்திரையைத் தொடர்ந்து உட்கொண்டால் அதனால் எழும் பக்க விளைவுகளைப் பற்றிய பயமும் எனக்கு இருந்தது. அத்தகைய பக்க விளைவுகள் எதையும் விடத் தும்மி விட்டுப் போனால் என்ன என்று எண்ணத் தலைப்பட்டேன்.

ஆக என் தும்மல் புராணம் இத்துடன் முடிவுக்கு வருவதாக எண்ணிக் கொண்டீர்கள் என்றால் அதுதான் இல்லை.

இந்தியா முழுவதும் இணையத் தொடர்புக்கு வழி கிடைத்த போது, மின்னஞ்சலும் வலை உலாவுதலும் வழக்கமான ஒரு நாளில், பொழுது போகாமல் கூகிள் தேடுபொறியில் ‘காலைத் தும்மல்’ (morning sneezing) என்ற தொடரில் என்ன விதமான வலைமனைகள் காணக்கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு தேடினேன்.

இத்துறையில் ஆய்வு செய்த ஒரு மருத்துவரின் ஆலோசனை காணக் கிடைத்தது. அது என் வாழ்வின் மற்றொரு திருப்புமுனை என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை.

அவர் சொல்கிறார்: “ஒவ்வாமைக் குறையுடைய நீங்கள் துாங்கும் போது உடல் குளிர்கிறது. காலையில் துயில் எழுந்ததும் உடல் வேகமாக சூடாக முயல்கிறது. எனவே சிலமுறை தும்முவதால் சுற்றுப்புறத்துக்கு ஏற்ற வெப்ப நிலையை உடல்பெற்று விடுகிறது. தும்ம வேண்டாம் என்று நினைத்தால் காலையில் படுக்கையில் இருந்து எழும்போதே சூடான நீரோ அல்லது தேநீரோ அருந்துங்கள்.”

இவ்வளவுதான் மருத்துவம். ஆனால் அவர் சொல்லியது நுாற்றுக்கு நுாறு உண்மை.

தினமும் படுக்கும் போது பல்துலக்கிய பிறகே துாங்கும் எனக்கு காலையில் வாய்மட்டும் கொப்பளித்த பிறகு வெந்நீர் அருந்துவது எளிது. அதைத் தொடர்ந்து செய்தேன்.

என் தும்மல்.. நிரந்தரமாகவே என்னை விட்டுப் பிரிந்து சென்றது.

| (4) விரிவான மறுமொழி

24.5.04

மரபுக் கவிதையின் மாண்பு 

பொதுவாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களைப் பற்றிப் பேசுவது எளிது. ஆனால் அந்தக் கருத்துக்களுக்கு எதிராகப் பேசுவதென்றால் அது ஒருவனது நம்பிக்கைகள் சார்ந்ததாகவோ அனுபவ அறிவு சார்ந்ததாகவோ இருத்தல் வேண்டும். தன் கூற்றில் திட நம்பிக்கைகளற்ற ஒருவன் பொதுக்கருத்துக்கு எதிராகப் பேசுகிறான் என்றால் அது ஏளனத்துக்கு இடமாகக் கூடும்.

ஆயினும் பொதுக்கருத்துக்கு உடன்பட்டவர்களால் அல்ல.. எதிர்க்குரல் கொடுத்தவர்களால்தான் மிகப்பெரும் சமூக மறுமலர்ச்சி ஏற்பட்டு வந்துள்ளது.

புதுக்கவிதை என்பதே எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத் தக்க கவிதை வடிவம் என்று கருதப்படும் காலக்கட்டத்தில் ஒருவன் மரபுக் கவிதை பற்றிப் பேசுதல் அறியாமையாலா, நம்பிக்கைகளாலா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று நினைத்துப் பார்க்கிறேன்.

முதலில் கவிதை என்பது என்ன? கவிதை உணர்வின் வெளிப்பாடு என்பதைப் பொதுவாக எல்லோருமே ஏற்றுக் கொள்கிறார்கள்.

இசை, ஓவியம் போலக் கவிதையும் ஒரு படைப்புக் கலை. கவிஞன் ஒரு படைப்பாளி. வீடு கட்டுபவனும் மரம் வெட்டுபவனும் உழுபவனும் நெய்பவனும் ஆகிய பிற தொழில் செய்பவனெல்லாம் பாட்டாளி. உழைப்பவனும் உளப்பூர்வமாக ஈடுபட்டு செயல்பட முடியும். ஆனால் அவன் ஒருபோதும் கலைஞனாக மாட்டான்.

கவிஞன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் முறையில் அது கவிதையாகிறது. அங்கே அறிவுக்குத் தரப்படும் இடத்தைவிட உணர்வுக்கே அதிக இடம்.

ஆனால் இன்று புதுக்கவிதை எழுதுவோர் தம்மை அறிஞர்களாகக் ‘காட்டிக் கொள்ள’ எழுதுவதாகத்தான் தெரிகிறது. உணர்வின் வெளிப்பாடு என்ற கருத்தெல்லாம் புதுக்கவிதைகளுக்குப் பொருந்தாது என்றே நான் நினைக்கிறேன்.

பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர் தம் எண்ணங்களை உணர்வுகளைக் கவிதைகளாக வார்த்த போது அவை வாய்மொழியாகவே.. அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லத்தக்க நிலையில் பாடல்களாகவே அமைந்தன.

ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதுவது இடர்நிறைந்ததாக இருந்ததால் சுருங்கச் சொல்லவும், எழுதப்பட்ட ஏடுகள் மறைந்து போனாலும் கூட மக்களின் நினைவில் வழி வழியாகக் கொண்டு செல்லத்தக்க விதமாகவும் இசைப்பாடல் வடிவிலான கவிதைகள் உருவாயின.

இசைப்பாடல் வடிவிலான கவிதைகளைப் படிப்பதும் இன்பம். அவ்வாறு படித்து நினைவில் வைத்தவற்றைத் திரும்பத் திரும்பக் கூறுதலும் இன்பம்!

கவிதைகளை இவ்வாறு ‘உரு’ ஏற்றி நினைவில் கொண்டிருந்ததற்கு வேறு பயன்களும் இருந்தன: நினைவாற்றல் வளர்ச்சி; நினைவாற்றல் வளர்ச்சியால் அறிவு வளர்ச்சி!

இன்று தமிழகக் கல்வி முறையின் மிகப் பெரும் சவால் மாணவர்களிடம் நினைவாற்றல் போதாமை. பள்ளிக் கல்வி தொடங்கிக் கல்லூரி வரை மாணவர்கள் உரை நூல்களையும் வினா விடைகளையும் ‘நண்பர்களையும்’ ‘துணைவர்களையும்’ மனப்பாடம் செய்து மண்டை காய்ந்து போகின்றனர். பயன்தான் ஒன்றுமில்லை; அவர்களின் அறிவு வளரவேயில்லை.

ஆனால் இதே மாணவர்கள் சிறு வயது முதல் தமிழ்க் கவிதைகளை .. ஆத்திசூடி, கொன்றைவேந்தனில் தொடங்கி .. நல்வழி, நன்னெறி, மூதுரை எனத் தொடர்ந்து.. திருவாசகம், தேவாரம், திவ்வியப்பிரபந்தம் என உணர்ந்து .. பாரதி பாரதிதாசன் கண்ணதாசன் வரை மனப்பாடம் செய்திருப்பார்களேயானால் அவர்கள் நினைவாற்றல் மிக்கோராய் விளங்கியிருப்பர். கற்றல் இவ்வளவு கொடுமையாய் இருந்திருக்காது.

தமிழறிஞர் தமிழண்ணல் அவர்களை நான் நேரில் கண்டதில்லை. ஆயினும் துரோணருக்கு ஏகலைவனைப் போல் அந்த மேதைக்கு நானும் ஒரு மாணவன். அவரது எழுத்துக்களைத் தேடித்தேடிப் படிப்பதும் பொன்னே போல் போற்றலும் என் வழக்கம்.

அவரது அறிவாற்றல் மட்டுமல்ல பண்பு நலன்களும் என்னை ஈர்ப்பன. எதையும் எதிர்ப்பதை விட, வெறுப்பதை விட நாம் சரியென்று நினைப்பதை முழுமனதோடு செய்ய வேண்டும் என்ற பாங்கில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். (“ஆச்சி வந்தாச்சு” சமூக மாத இதழ் மே 2004) அதிலிருந்து சில வரிகள்:

“ஒளிமயமான எதிர்காலத்திற்கு”
தமிழண்ணல்

“திருக்குறளைப் பொருளுணர்ந்து படிக்க வேண்டும். “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்” என்பார் மாணிக்கவாசகர். நம் குழந்தைகளைத் திருக்குறளை ஒப்பிக்கும்படி பழக்குகிறோம். அது நல்ல பழக்கம். ஆனால் பெரியவர்கள் குறளின் பொருளைப் பலமுறை நினைத்துப் பார்க்க வேண்டும். ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்லுதல், திரும்பத் திரும்ப நினைத்தல், திரும்பத் திரும்பச் செயல்படுத்த முயலுதல் .. இவையே உருவேற்றுதல் ஆகும். இதைச் ‘ஜெபம்’ என்றும் ‘பாராயணம்’ என்றும் வடமொழியில் கூறுவர். தமிழில் ‘உரு’வேற்றுதல் என்பது மிக அழகான, பொருள் பொதிந்த சொல். ‘உரு’வாகிறது அது; பலமுறை .. நூற்றி எட்டு முறை .. ஆயிரத்து எட்டு முறை சொல்லுங்கள். எழுதுங்கள். நீங்கள் நினைப்பது முதலில் மனத்தில் ‘உரு’வாகும் பிறகு வாழ்க்கையில் உருவாகும். அதனால் நினைத்ததை அடைவீர்கள்.

.. .. .. .. .. .. .. .. .. ..
தமிழில்தான் எண்ண வேண்டும்; தமிழில்தான் இறைவனை அருச்சிக்க வேண்டும். தமிழில் சொன்னாலே அது விளங்கும். இதில் நாம் யாருக்கும் பகையில்லை; எந்த மொழிக்கும் பகையில்லை.
.. .. .. .. .. .. .. .. .. ..

இறைவனை நாமே போற்றிகள் பாடி அருச்சிக்க வேண்டும். நாமே பாடி மகிழும் போது தான் இறைவனுக்கும் நம் உயிருக்கும் ஒரு தொடர்பு ஏற்படும்.
.. .. .. .. .. .. .. .. .. ..

இவ்வாறு செய்தால் நாம் திருவாசகம், தேவாரம், திருமுறைகள், திவ்வியப் பிரபந்தம், திருப்புகழ் போன்றவை தொடங்கி பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் வரை நாமே மனப்பாடம் செய்கிற பழக்கம் வரும். இது நம்மைப் பார்த்து நம் குழந்தைகளுக்குப் போய்ச் சேரும். உலகிலேயே மிகமிகக் கூடுதலான பக்திப் பாடல்களைக் கொண்டது தமிழ்மொழி ஒன்றேயாகும். அதைப் பாடிப் பரவி உலகெலாம் ஒலிக்கச் செய்வது நம் கடமையாகும்.”

புதுக்கவிதைகளாகிய குப்பைகளைப் பற்றி ஏதும் சொல்லாதது மட்டுமல்ல தாம் சொல்லுந்தரம் அவற்றுக்கில்லை என்பது போலப் புறக்கணித்து ஒதுக்கும் மாண்பு அவருடையது.

தமிழண்ணல் கூறும் தமிழ்ப் பாடல்களை மனப்பாடம் செய்யும் வழிமுறையை நான் தொடக்க நிலைப் பள்ளியில் படித்த போது என்னுடைய ஆசிரியர் ஒருவர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அது முதல் தமிழ்ப் பாடல்களைத் தேடித் தேடி நான் மனப்பாடம் செய்தேன். அதனால் அளப்பரிய பலன்களைப் பெற்றேன்.

இந்த வலைப்பதிவில் நான் குறித்துள்ள கவிதைகள் அனைத்தும் என் நினைவில் உள்ளவையே அன்றி எந்த நூலையும் பார்த்து எழுதியவையல்ல.

அதுமட்டுமல்ல. எனது பட்டப் படிப்பிலும் முதுநிலைப் படிப்பிலும் பக்கம் பக்கமாக எழுத வேண்டிய எத்தனையோ சமன்பாடுகளை .. கணிதக் குறியீடுகளை எனது வகுப்புத் தோழர்கள் பலமுறை படித்தும் எழுதியும் பார்த்து அதன் பிறகு தேர்வு நாளில் மறந்தும் கூடப் போனதுண்டு. அவற்றையெல்லாம் நான் ஒரு முறை.. ஒரே ஒரு முறை பார்த்து விட்டுத் தேர்வில் தவறின்றி எழுதியிருக்கிறேன். அந்த அளவு நினைவாற்றலை வழங்கியது எனது தமிழ் ஆர்வமும் நான் படித்து மனப்பாடம் செய்த கவிதைகளும் என்று நம்புகிறேன்.

இன்றும் கூட எந்த உன்னத அறிவியல் கருத்துக்களைக் கேட்டாலும் அதன் உமியை உரிந்து உட்கருத்தை உணரும் திறனும் அதை எளிய உவமைகட்கு உரித்தாக்கிப் புரிந்துணரக் கூடியதாக்கும் தன்மையும் தமிழ் எனக்களித்த வரம் என்று நினைக்கிறேன்.

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்றொருவன் நினைத்தல் நியாயமில்லையா?

மரபில் எழுதப் பட்டவையெல்லாம் கவிதையா? குப்பைகள் இல்லையா என்று கேட்கிறார்கள்.

மரபு நடையிலும் குப்பைகள் வரலாம். அவை காலத்தால் ஒதுக்கித் தள்ளப்படும்.

ஆனால் காலத்தை வென்று நிற்கும் மரபு நடையையே நம் அறியாமையால் புறக்கணித்தல் என்ன நியாயம்?

| (0) விரிவான மறுமொழி

22.5.04

குடிநீர்க் காவலரின் கொள்கை முழக்கம் 

காந்திய நெறியில் வளர்ந்தவர் சிந்தனையாளர் பழ.கருப்பையா. இந்திராவின் நெருக்கடி நிலையை எதிர்த்தும் காரைக்குடியின் நிலத்தடிக் குடிநீர் கொள்ளை போவதை எதிர்த்தும் பெரும் அறப்போர் நடத்தியவர்.

இவற்றுக்கெல்லாம் மேலாகத் தனித்தமிழ் ஆர்வலர். கடல்மடையெனத் தமிழ் மேடைகளில் முழங்கும் பேச்சாளர். நான் சின்னஞ்சிறுவனாய் இருந்த காலந்தொட்டு விரிந்த விழிகளோடு அவரது கொள்கை முழக்கங்களைக் கேட்டு வந்திருக்கிறேன்.

சிலநாட்களுக்கு முன்பு அவரது நுால் ஒன்று எனக்குப் படிக்கக் கிடைத்தது. “கண்ணதாசன் : காலத்தின் வெளிப்பாடு” என்ற இந்த நுாலில் கண்ணதாசன் என்ற கவிஞனின் நிறைகுறைகளை ஒருபால் சாராமல் ஆய்வு செய்திருக்கிறார் பழ.கருப்பையா. (வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை, சென்னை. ஆண்டு: 2001) தமிழண்ணல் இந்நுாலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.

இந்த நுாலைப்பற்றி நான் இங்கே குறிப்பிடக் காரணம் புதுக்கவிதைகள் பற்றிய பழ.கருப்பையாவின் கருத்துக்களே. அவற்றுள் சிலவற்றை இங்கே தொகுத்துத் தருகிறேன். இனிவரும் வரிகள் பழ.கருப்பையா கூறுபவை:

கண்ணதாசனுக்குப் பிறகு பாட்டுச் சீரழிந்து சிறுத்து விட்டது. அது புதுக்கவிதையாகப் புது வடிவம் பெற்றது. ஒரு சிறு சுழிப்பு அந்த உரைப்பாவில் காணப்படுகிறது என்பது தவிர அதில் பாவுக்குரிய ஓசை நயமோ, சிந்தனை ஆழமோ பெரும்பாலும் காணப்படுவதில்லை.

வாராவாரம் வெளிவருகின்ற இதழ்களில் இடம் பிடிப்பதற்கு ஏற்றவண்ணம் அது ஒரு துணுக்காகச் சிதைந்து விட்டது.

அதில் ஓசைநயம் வேறு இல்லாத காரணத்தால் எழுதியவனேகூடத் தன்னுடைய கவிதையை நினைவில் வைத்திருந்து கூற முடியாது. இத்தகைய நிலைகளால் பாவிலக்கியம் அந்திம நிலைக்கு வந்துவிட்டதோ என்றுகூட அஞ்சத் தோன்றும்.

ஐம்பெரும் காப்பியங்கள் பிறந்த தமிழில் பதினைந்தாம் நுாற்றாண்டை அடுத்து உதிரிப்பாடல்கள் கோலோச்சியது போல தமிழ்நாட்டில் சில காலமாக அரைக் காசுக்கும் பெறாத ‘ஐக்கூ’ உரைவீச்சுகள் அரசோச்சுகின்றன.

மூன்று வரியில் பாட்டெழுதுவது ஒரு விந்தையா? ஒன்றே முக்கால் வரியில் உலகப் பேராசான் வள்ளுவன் பாட்டெழுதி இருக்கிறானே, படித்ததில்லையா? கொன்றைவேந்தன் ஒருவரிக் கவிதைதானே! ஆத்திசூடி அரைவரிக் கவிதையன்றோ!

பாரதியும் பாரதிதாசனும் இந்த அரைவரி விந்தையைப் பார்த்து வாயைப் பிளந்தால்தானே ஆளுக்கொரு புதிய ஆத்திசூடி எழுதினார்கள். அவர்களிருவருக்கும் சப்பான் இருப்பது தெரியாதா?

முச்சங்கம் வைத்து வளர்த்த முத்தமிழில் நீட்டி எழுதப்படுவதெல்லாம் உரைநடை; மடக்கி எழுதப் படுவதெல்லாம் கவிதை என்கிற அளவுக்குக் கவிதை மலினப்பட்டுவிடும் என்று யாரும் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஆனாலும் அப்படி நிகழ்ந்து விட்டதே! நொந்து கொள்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? தமிழுக்கு நேரம் சரியில்லை!

மரபை யாப்பில் மட்டும் உடைத்தால் போதாது; பண்பாட்டு நிலையிலும் உடைக்க வேண்டும் என்னும் வக்கிரப் போக்கைத்தான் இது (புதுக்கவிதை) காட்டுகிறது.

குமுகாயத்தைத் தலைகீழாகக் கவிழ்க்கின்ற முயற்சிதானே இது! நிறுவப்பட்ட அனைத்தையும் நொறுக்கிவிட வேண்டும் என்னும் வெறிதானே இதற்கு அடிப்படை!

பாட்டு பாட்டின் சாரத்தை இழந்து விட்டதே என்ற கவலை கூட இல்லை; பண்பாட்டின் சாரத்தை இழந்து விட்டதே என்ற கவலைதான் அடிவயிற்றைக் கலக்குகிறது.

கண்ணதாசன் உயிரோடு இருந்த போதே இந்த வசனகவிதை எனப்படும் உரைப்பா தலைதுாக்கத் தொடங்கிவிட்டது.

அதை ‘அலிக் கவிதை’ என்று கண்ணதாசன் சாடவும் செய்திருக்கிறார். இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் இந்த ‘அலிக் கவிதைகளின்’ செல்வாக்கு கண்டு மனம் நைந்திருப்பார்.

ஆனால் அவற்றை அவருங்கூட மறித்திருக்க முடியாது. எல்லாம் கவிழும் போது கவிதை மட்டும் வாழுமா?

1970ல் இந்த உரைப்பாவின் ஆதிக்கம் தொடங்கி விடுகிறது. இது நீர்த்துப் போன தலைமுறையின் நீர்த்துப் போன பா.

இவ்வாறெல்லாம் பழ.கருப்பையா குமுறியிருக்கிறார்.

இன்றைய புதுக்கவிதை எழுதுபவர்களும் நல்ல சிந்தனையாளர்களும் இந்த உண்மைகளை உணரத் தொடங்கியிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை
ஆங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சொன்றும் மூப்பென்றும் உண்டோ”

என்று பாரதி பாடியது போல உண்மையான தமிழ் ஆர்வலரின் உள்ளத்தில் தோன்றிய தீ, நல்ல தமிழ் உணர்வை நாடெங்கும் பற்றியெரியச் செய்யும் என்று நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.

| (0) விரிவான மறுமொழி

21.5.04

ஈடுபாடா ஆடம்பரமா? 

அரசியல், திரைப்படம், கிரிக்கெட், புதுக்கவிதை இவற்றைப் பற்றியெல்லாம் பேசாவிட்டால் இன்று நமக்குப் பேசுவதற்கு வேறு தகவல்களே இல்லை என்பது போன்ற கருத்து எங்கும் காணப்படுகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதிலும் எழுதுவதிலும் கூட சில அடிப்படை வேறுபாடுகளைக் காண்கிறேன்.

ஒன்று தாம் பேசும், எழுதும் துறையைப் பற்றிய ஆழ்ந்த ஈடுபாடு; ஆர்வம்; அத்துறை பற்றிய முழு அறிவு; அந்தத் துறையின் வளர்ச்சி பற்றிய கனவு; அதற்கான ஒருவனது பங்களிப்பு இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மற்றது வெற்று ஆரவாரம். எதைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் எல்லாவற்றைப் பற்றியும் ஒருவன் கூறும் விமர்சனம் அல்லது வெற்று ஆரவாரம் (வெட்டிப் பேச்சு).

“மாட்டுக்குச் சொரிந்து கொடு. அது நல்ல காரியம். மனிதனுக்கு ஒருபோதும் சொரிந்து கொடுக்காதே” என்று ஜே.ஜே.யில் சு.ரா. சொல்வதற்கு மாறாக மனிதனுக்குச் சொரிந்து கொடுக்கும் கருத்துக்கள்.

“கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றலின்றி நாட்டத்தில் கொள்ளாரடி” என்று பாரதி நடிப்புச் சுதேசிகளை எள்ளி நகையாடியது போல நகையாடத் தகுந்த பிதற்றல்கள்.

கிரிக்கெட் தொடர்கள் ஏதும் தொடங்கி விட்டால் நாடெங்கும் கேட்கும் கூக்குரல்கள் எனக்குப் புரிவதேயில்லை. ஏன் எல்லோரும் கிரிக்கெட் பற்றியே பேசுகிறார்கள்?

எல்லோரும் பேசுகிறார்கள் நாமும் பேசாவிட்டால் நம்மை ஒதுக்கி விடுவார்கள் என்ற பயமா?

தன்னை நவநாகரிக சமுதாயத்தில் ஒருவனாகக் ‘காட்டிக் கொள்ளும்’ போக்கா?

ஓட்டங்கள் எத்தனை என்றும் விளையாட்டில் தோற்று ஓடியவர் எத்தனை பேர் என்றும் ஆளாளுக்குப் பேசித்திரிவது எனக்கு வேடிக்கையாகவும் விநோதமாகவும் தோன்றும்.

தமது தேசபக்தியையும் தம் தேசத்தின் வெற்றியையும் கிரிக்கெட் வீரர் முதுகில் ஏற்றி ஒரு நாள் போட்டியிலோ தொடர் போட்டியிலோ பணயம் வைத்து முடிவு கண்டுவிடும் மனப்பாங்கு சிறுபிள்ளைத் தனமாக எனக்குத் தோன்றுகிறது.

விளையாட்டு என்று கருதும் போது கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களுக்குச் சமமாகக் கிரிக்கெட்டை ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடிவதில்லை.

ஒருவகையில் பார்த்தால், ஆண்டான் அடிமைத் தனத்தின் எச்சமிச்சமாகத்தான் இந்த விளையாட்டை என்னால் காண முடிகிறது. பந்தடிக்க ஒரு தலைவனும் பொறுக்கிப் போட சில அடிமைகளும் கொண்டு தொடங்கியதாகத்தான் இது இருக்க வேண்டும்.

எந்த விளையாட்டிலும் பார்வையாளர்களும் பங்கேற்போரும் என இருபிரிவினர் இருப்பார்கள். ஆனால் இந்த விளையாட்டில் மட்டும் தான் பங்கேற்போரில் பலரும் பார்வையாளருடன் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதிலும் பெரும் கூத்து பல ஆட்டக்காரர்கள் மட்டையைத் தொடும் முன்பே ஆட்டம் முடிந்து போவதுமுண்டு.

அரைமணி நேரத்திலோ ஒரு மணி நேரத்திலோ ஆட்டக்காரர்களின் ஒட்டு மொத்தத் திறனையும் களத்தில் காணும் வாய்ப்பும், தொடங்கியது முதல் முடிவுறும் வரை ஒவ்வொரு விநாடியும் உணர்வுகள் பொங்க உச்சக்கட்ட விறுவிறுப்பை அளிக்கும் பாங்கும் மற்ற விளையாட்டுக்கள் போன்று கிரிக்கெட்டிற்கு ஒருபோதும் இருப்பதில்லை.

பொதுமக்களுக்கான ஊடகங்களும் விளம்பர நோக்கிற்காகப் பலநாட்டு நிறுவனங்களும் தேவையில்லாமல் ஊதிப் பெருக்கியது தான் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வக் கோளாறு என்று நினைக்கிறேன்.

சிந்திக்கத் தெரியாத பாமரர்களிடம் எதை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பச் சொல்லித் திணித்து விட முடியும் என்பதற்குக் கிரிக்கெட்டும் மற்றொரு உதாரணம்.

| (0) விரிவான மறுமொழி

18.5.04

வாழ்வாங்கு வாழ 

வாழ்க்கையைப் பற்றி எத்தனை எத்தனை சிந்தனைகள்!
நல்ல வாழ்விற்கு வழிகாட்டும் எண்ணற்ற வழிமுறைகள்!

ஆயினும் மானுட வாழ்வென்பது அவலம் மிகுந்ததாகவே ஆனதை என் சொல்ல?

வாழ்வென்பது என்ன?

மூச்சுவிடுதல் மட்டுமா?

உண்ணுதலையும் உறங்குதலையும் சேர்த்துக் கொண்டால் போதுமா?

இரை தேடுதலையும் நாளைக்கெனப் பொருள் குவிப்பதையும் வாழ்வின் கூடுதல் தேவைகளாகக் கொள்ளலாமா?

அவை மட்டும் போதுமா இல்லை அன்பு காட்டுதலும் தன்பால் காட்டப்படும் அன்பை ஏற்றுக் கொள்ளுதலும் வாழ்வின் பகுதிகளாகுமா?

கவிதையும் இலக்கியமும் இசையும் ஓவியமும் இன்னபிற கலைகளும் வாழ்க்கைக்குத் தேவையா இல்லையா?

தேடல் என்பது என்ன?
வாழ்வில் தேடலின் பங்களிப்பு என்ன?

தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று.. என்றும்

மாபெரும் சபைகளில் நீநடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும் ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவன் என்று
போற்றிப் புகழ வேண்டும்.. .. .. என்றும்

புகழின் பெருமையைப் பாடிச்சென்றார்களே..
வாழ்க்கைக்கு அந்தப் புகழால் என்ன பயன்?

புகழ் பெற்று வாழ்ந்தவர்கள் எதைக் கொண்டு சென்றார்கள்? இல்லை அவர்கள் சென்ற பிறகு அவர்கள் சேர்த்த புகழால் அவர்களுக்குப் பயன் என்ன?

பேரும்புகழுமற்று நீரோடையையாய் வாழ்ந்தவர்கள் இழந்து நின்றதென்ன?

“பிறப்பிற்கு முன்பு ஏதுமில்லை;
இறப்பிற்குப் பின்பு ஏதுமிருக்கப் போவதில்லை;”
(Before birth it was nothing; after death it will be nothing.)
என்றும்

“வாழ்வென்பது கல்லறையை நோக்கிய நெடும்பயணம்”
(When a child is born it begins to march towards its graveyard)
என்றும் சொல்லப்பட்டவை எத்தனை சத்திய வார்த்தைகள்!

கல்லறை கீதம் பாடிச் சென்றானே தாமஸ் கிரே (“Elegy written in a country chuch yard” by Thomas Gray) அவன் சொன்னது போல காட்டுப்âக்களாய் மலர்ந்து மறைந்தால் என்ன தவறு? புகழடைவதற்காகப் பலரது உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சிப் பிறர் வாழ்வில் முள்ளாய் உறுத்துதல் தகுமோ?


வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே..
.. .. .. .. .. .. .. .. .. .. .. ..
நசையறு மனம் கேட்டேன்; நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்;
- பாரதியார்

அந்த மகாகவியைப் போலவே, “எனது மரணப்படுக்கையில், நான் வாழ்ந்ததால் இந்த உலகு முன்னிலும் சற்று மேம்பட்டது என்ற உளப்âர்வமான எண்ணம் தோன்றுமானால் அதுவே என் வாழ்வின் பயனாகக் கருதுவேன்” என்று சொன்னானே ஐசக் அசிமோவ் அது எத்தனை உயர்ந்த சிந்தனை!

நல்ல எண்ணங்கள் உள்ளத்தில் எப்போதும் தோன்றுமானால் அதுவே நல்ல வாழ்வு என்றார் அப்பர்:

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவில்லை...
- தேவாரம்

பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சிறுமிதவை போல வாழ்க்கை மூத்தோர் வகுத்த வழியில் செல்லும் என்பது கணியன் âங்குன்றனின் கருத்து:

யாதும் ஊரே யாவரும் கேளிர்..
.. .. .. .. .. .. .. .. .. .. .. ..
நீர்வழிப் படும்புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படும்என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் .. .. .. .. .. ..
- புறநானுாறு

ஒரு சின்னஞ்சிறு ஆலவிதைக்குள் அந்த ஆலமரத்தின் நுாற்றாண்டு வாழ்விற்கான வழித்திட்டங்களையும், பல்லாயிரம் ஆண்டுகால ஆலமரங்களின் வரலாற்றையும் (மரபியலை) இயற்கை பொதிந்து வைத்துள்ளது. இந்த அற்புதத்தை அல்லவா “ஆருயிர் முறைவழிப்படும்” என்ற வரியில் சொல்லிவிட்டார்!

ஆலுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் இது பொருந்தும் தானே. பிறந்த குழந்தை பாலருந்த எங்கே கற்றது? பல்லாயிரம் ஆண்டுகால மனிதர் உயிர்வாழ்ந்த வரலாறு முழுமையும் நம் உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது அல்லவா?

இதைத் தான் உளவியலறிஞர்கள் கூட்டு உணர்வு மயக்க ஆழ்மனம் என்றெல்லாம் கூறுகிறார்கள் (Collective unconscious) பாம்பைப் பற்றிய பயம் .. இதுவரை கண்டறியாத காட்சிகள் கனவுநிலையில் வெளிப்படல் .. இவை எல்லாம் ஆழ்மனப் பதிவின் வெளிப்பாடுகள்.

இயற்கை அதன் பங்கிற்கு மரபைப் பதிவு செய்தால், மனிதன் தன் கடமைக்கு வாழும் முறைகளைக் குழந்தைக்கு கற்பிக்கிறான். மனப்பதிவும் நடைமுறை வாழ்வும் ஒத்தமையும் போது அக்குழந்தையின் வாழ்வு தெளிந்த நீரோடை போலாகிறது. சிக்கலற்ற வாழ்வு சிறக்கிறது.

இதற்கு மாறாக முற்றிலும் மாறுபட்ட சூழலில் தள்ளப்படும் குழந்தை குழப்ப நிலைக்கு உள்ளாகிறது.

கற்றலும் கற்பித்தலும் மரபு சார்ந்து அமைவதின் தேவை இங்கே தான் எழுகிறது.
| (5) விரிவான மறுமொழி

15.5.04

அறிவாளிகளின் புதுக்கவிதைகள் 

நான் சிறுவயதில் படித்த கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. தெனாலிராமன் கதைகள் (அல்லது பீர்பால் கதைகள்) தொகுப்பில் படித்த கதை என்று நினைக்கிறேன்.

நெசவாளி ஒருவனிடம் அரசர் ஆடை ஒன்றை நெய்து தருமாறு கேட்கிறார். உலகில் அதுவரை யாரும் அணிந்திராத ஆடை. அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் அரசர் ஆயத்தமாக உள்ளார்.

அரசரின் மடமையைத் தனக்குச் சாதகமாக நெசவாளி பயன்படுத்திக் கொள்கிறான். அவரிடம் கணக்கில்லாத அளவு பொன்னும் பொருளும் கேட்டுப் பெறுகிறான். மிக உயர்ந்த பட்டாடை உடல் முழுதும் பொன்னாலான இழைகளோடு உருவாகி வருவதாகப் பொய் சொல்லி அரசரை நம்ப வைக்கிறான்.

வேலை முடியும் நாளும் வந்தது. அரசர் ஆடையை எடுத்துவந்து அணிவிக்குமாறு ஆணையிடுகிறார். அப்போது நெசவாளி “மூடர்களின் கண்களுக்கு இந்த ஆடை தெரியாது” என்று கூறி அரசருக்குப் புத்தாடை அணிவிப்பதாக பாவனை செய்கிறான் - நடிக்கிறான்.

அரசரின் கண்களுக்கு ஆடை எதுவும் தெரியவில்லை. ஆயினும் தன்னை யாரும் மூடன் என்று கருதிவிடக் கூடாதென்பதற்காக ஆடை மிக அழகாக இருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார். அமைச்சர்களும் பணியாளர்களும் தம்மை யாரும் மூடன் என்று கருதிவிடக் கூடாதென்பதற்காக ஆடையின் சிறப்பை வானளாவப் புகழ்கின்றனர்.

ஆனால் உண்மையிலேயே புத்திசாலியான தெனாலிராமனுக்கு (அல்லது பீர்பாலுக்கு) நெசவாளியின் ஏமாற்று நாடகம் புரிகிறது.

சின்னஞ்சிறு குழந்தைகள் இருவரை அவன் அரண்மனைக்கு அழைத்து வந்து அரசரின் ஆடை எப்படி இருக்கிறது என்று கேட்கிறான். கபடமறியாத அக்குழந்தைகளோ, “அரசருக்கு வெட்கமே இல்லையா? ஏனிப்படிப் பிறந்த மேனிக்குப் பொது அரங்கில் அமர்ந்திருக்கிறார்” என்று சொல்லிச் சிரிக்கிறார்கள்.

அதன் பிறகுதான் அரசனுக்கு ஞானம் பிறக்கிறது. நெசவாளி தண்டிக்கப்படுகிறான்.

புதுக்கவிதைகளின் வீச்சு பற்றி யாராவது பேசும்போதெல்லாம் எனக்கு இந்தக் கதைதான் நினைவுக்கு வருகிறது.
| (0) விரிவான மறுமொழி

8.5.04

உள்ளத்தில் உண்மையொளி.. 

அமைப்பு ஒன்றைக் கட்டி எழுப்புதல் பெரும்பாடு.

அதற்காகப் பலர் அல்லும் பகலும் அயராது உழைத்து வியர்வையும் குருதியும் சிந்திப் பசி நோக்காது, கண் துஞ்சாது முயன்றாக வேண்டும்.

அமைப்பின் விதிகளை உருவாக்குதலும் எளிதன்று. தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு, கற்றவற்றை மேம்படுத்தி முன்னோக்கிச் சென்றாக வேண்டும்.

சரியான முறையில் இப்படி உருவாக்கப்பட்ட கட்டமைப்பு மட்டுமே தன் நோக்கங்களை வென்றெடுத்தாக முடியும்.

இத்தகைய சரியான அமைப்புக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் அவ்வப்போது எதிர்க் குரல்கள் எழும்பக் கூடும். அத்தகைய எதிர்க் குரல்களை உரிய முறையில் எதிர்கொள்வது அமைப்பின் கடமை.

நியாயமான எதிர்க் குரலுக்கு உரிய பதில் வழங்குவதும் நியாயமற்ற குரல்களைத் தட்டி அடக்குவதும் அமைப்பு தடம் புரளாமல் குறிக்கோளை நோக்கிய பாதையில் முன் செல்வதை உறுதிப்படுத்தும்.

நியாயமற்ற எதிர்க்குரல்கள் வலுக்குமானால் கட்டமைப்பு சிதறுண்டு போகும். நோக்கம் நிறைவேறாது. வருங்கால சந்ததி நம்மை மன்னிக்காது.

நான் அமைப்பு என்று இதுவரை குறிப்பிட்டு வந்ததை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்களோ எனக்குத் தெரியாது – நான் என் தாய்மொழி என்ற நோக்கில் மட்டுமே எழுதுகிறேன்.

தமிழுக்கென்று சரியான கட்டமைப்பு உண்டு இலக்கண விதிகள் உண்டு. இது பல்லாயிரம் சான்றோர் தம் ஆர்வத்தால் ஈடுபாட்டால் உழைப்பால் முன்னெடுத்துச் சென்ற மொழி.

இந்த மொழியின் கட்டமைப்பை சிதைக்கும் வகையிலான எதிர்க் குரல்கள் இன்று வலிவடைந்திருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றன.

நாம் விழித்துக் கொண்டாக வேண்டும்.

வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சி. மொழியின் பயனும் அதுதான். மகிழ்வளிக்காத மொழியை ஒருவன் கற்பதுண்டா?

மணமே இல்லா மலரினை
மகிழ்ந்தே எவரும் அணிவாரோ

என்றார் குழந்தைக் கவிஞர்.

இனிமையான பலாச் சுளையை மறைத்து வைத்துவிட்டு முள் நிறைந்த தோலினை எவருக்கும் உண்ணக் கொடுத்தல் தகுமோ?

மகாகவி பாரதியின் வார்த்தைகளை அப்படியே தருகிறேன்:

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கும்
கலைப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.. ..

வலைப்பதிவைத் தொடங்கி 20 நாட்களாக நான் எழுதிய எல்லாவற்றுக்குமான அடிப்படை நோக்கம் இந்த ஒரு கவிதையில் சொல்லப்பட்டுவிட்டதென நினைக்கிறேன்.

உள்ளத்தில் உண்மையொளி உண்டாக வேண்டும்..

வெள்ளத்தின் பெருக்கைப் போல் கவிப்பெருக்கால்..

தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டு.. .. தமிழன் உயர வேண்டும்.


சின்னஞ்சிறு குழந்தைகள் மொழியின் இனிமையை உணரத் தாலாட்டுக் கேட்க வேண்டும்..

சிறுவர்கள் குழந்தைப் பாடல்கள் பாடி இன்புற வேண்டும்.

மொழியின் இனிமை கற்கண்டாய் நற்கனியாய் அவர்களுக்குத் தித்திக்க வேண்டும்.

மொழியின் இனிமையை உணர்ந்தால் மொழியின்பால் ஈர்ப்பு வரும். மொழியின் மீதான ஈடுபாட்டால் கற்றல் எளிதாகும். கற்றல் எளிதானால் அறிவு வளரும். நல்லறிவு வளர்ந்தால் தமிழன் மேம்படுவான். தமிழும் மேம்படும்.


என்னருந் தமிழ்நாட்டின் கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலைஞானத்தால்
பராக்கிரமத்தால் அன்பால்
உன்னத இமய மலைபோல்
ஓங்கிடும் மாட்சி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்த நாளோ!

என்ன ஒரு கற்பனை! எவ்வளவு நல்ல உள்ளம்!

(இந்த சிந்தனை பாரதிதாசனுடையது என்று நினைக்கிறேன்)

நடிகனுக்கு மன்றம் வைக்கவும் அரசியல்வாதிக்குக் கொடி பிடிக்கவும் தன் வாழ்வை அழித்துக் கொண்டிருக்கும் தமிழனுக்குத் தமிழின் அருமையைப் புரிய வைக்க வேண்டும்.

அலுப்பினை ஊட்டும் வகையிலான மொழிநடையில் பயமுறுத்தும் வகையிலான படிமங்கள் குறியீடுகளைக் கூவி விற்றுத் தமிழனைத் தமிழிடமிருந்து ஓடச் செய்யும் மடமையை நிறுத்தியாக வேண்டும்.
| (0) விரிவான மறுமொழி

7.5.04

கவிதை அறிவியல் 

மேலைநாட்டுச் சிந்தனைகளை மேற்கோள் காட்டாவிட்டால் எழுதுபவனுக்குள்ள அறிவாற்றல் திறன் பற்றி நம்மவருக்கு ஐயம் தோன்றிவிடும்.

விவேகானந்தர் போன்ற ஞானச்சுடர் கூட சிகாகோ மாநாட்டில் பேசிய பிறகுதான் நம்மவரால் கவனிப்புக்குள்ளானார் எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்.

எனவே இன்று முழுக்க முழுக்க மேலைநாட்டு அறிவியல் கருத்துக்களின் அடிப்படையில் கவிதை என்பது என்ன என்று பார்ப்போம்.

அழகியல் கோட்பாடு பற்றி கணிதத்தில் ஒரு தனிப்பிரிவே உள்ளது. ஒழுங்கு, சமச்சீர் நிலை, ஒத்த தோற்றம் (Order, symmetry, resemblance) போன்றவற்றைப் பற்றிய வரையறைக்குட்பட்ட கோட்பாடுகள் உயர்நிலை கணிதத்தில் உண்டு.

கலை வடிவங்கள் யாவும் அழகியல் கோட்பாட்டுக்கு உட்பட்டவையே.

மனிதனின் உருவ அமைப்பே சமச்சீரானது அல்லவா? அவனது ஒரு பாதி, மறுபாதியின் பிரதிபிம்பம் அல்லவா? (One half of the man is the mirror symmetry of his other half).

புவியும், நிலவும், ஆதவனும் கோள்களும் பிற தாரகைகள் யாவும் கோள வடிவமுடையவை அல்லவா? கோள வடிவிலும் பார்க்க சமச்சீரான வடிவம் ஏதுமில்லை என்பதும் கணிதக் கோட்பாடு தானே. மேல்கீழ், இடவலம் என்று எப்படி நோக்கினும் நுாற்றுக்கு நுாறு சமச்சீரானது கோள வடிவம். - இயற்கை பிரபஞ்சம் முழுவதையும் அப்படித்தான் படைத்துள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு மொழியின் ஆன்மாவாகிய கவிதை இயற்கையோடு உடன்பட்டு சமச்சீர் நிலையில் இருந்தால் மட்டுமே அது மக்களை எளிதில் சென்றடையும் - மக்கள் மனதில் நிலைபெற்றிருக்கும் - மக்களை மாமனிதராக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஒழுங்கற்ற நிலையை அளக்கவும், வரையறுக்கவும் முரண்டு நிலை (entropy) என்றதோர் கருத்து இயற்பியலில் உள்ளது. ஒழுங்கற்ற நிலை வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது இயற்பியலாளர் முடிவு. (Entropy always increases) மனித முயற்சி இதற்கு எதிரான செயல்பாடு. மனிதன் ஒழுங்கமைப்பை உருவாக்கத் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறான்.

ஒரு எளிய உதாரணம்: ஒரு தோட்டத்தை அல்லது வயலை நீங்கள் கவனிக்காமலே விட்டுவிட்டால் அங்கே புல்லும் முள்ளும் புதரும் வளருமேயன்றி வாழையும் தென்னையும் நெல்லும் கரும்பும் ஒரு போதும் வளராது. அவற்றை வளர்க்க – ஒழுங்கை உருவாக்க – மனித முயற்சி தேவை.

துாக்கத்தில் உளறுதலும் கனவில் பிதற்றலும் நவீன சிந்தனை என்று மேலைநாட்டு எண்ணங்களை அடையாளம் காட்டிக் கூறுவதைக் காணச் சிரிப்பு வருகிறது.

இயற்பியலில் குழப்ப நிலை (chaos) என்றொரு கோட்பாடு உண்டு. இந்தக் குழப்ப நிலையை Higher orders of Approximation காரணமாக எழுந்ததென்பர்.

(Approximation என்பதை ஏறத்தாழ என்று தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் First order Approximation, Second order Approximation, Third order Approximation என்றெல்லாம் சொல்லும் போது இது பொருந்தவில்லை. ஆனால் நான் சொல்ல வந்த கருத்து முக்கியமானது என்பதால் ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்திக் கொள்கிறேன்.)

ஓர் உயிர் வாழ்வதற்குக் காற்றும் நீரும் முதலாவது தேவைகள் (தேவைகள் குறித்தான உளவியலாளர் மாஸ்லோவின் கருத்துக்களைப் பிறகு பார்ப்போம் இங்கே அறிவியல் மட்டும்.) இவற்றை வாழ்வதற்கான First order Approximation, எனலாம். இவ்விரண்டும் இன்றி வாழ்க்கை சாத்தியமில்லை.

அடுத்த நிலையில் உணவு, பிறகு உடை. இருப்பிடம். அன்பு காட்டக் குடும்பம். உறவு இப்படியாகத் தொடரும் அடுத்தடுத்த தேவைகளை Second order Approximation, Third order Approximation என்று வகைப்படுத்திக் கொண்டே போகலாம்.

கோயம்பேடு காய்கறி விலையும் கோயம்புத்துார் தொழில் வளர்ச்சியும் இதில் ஏதாவது ஓரிடத்தில் வரலாம் – எழுபத்திரண்டாவதோ தொன்னுாற்று ஏழாவதோ – அவற்றுக்கு இடம் இல்லை என்பதல்ல அவற்றை ஒதுக்குதலால் பாதிப்பு ஒன்றுமில்லை என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியது.

ஒரு எளிமையான இயற்பியல் சமன்பாடு:

Rt = R0 (1 + ஆல்பா.t + பீட்டா.t2 + காமா.t3 + .. .. .. )

பள்ளிப் படிப்பு படித்த எவருக்கும் இந்தச் சமன்பாடு தெரியும். இதில் குறிப்பிட வேண்டிய கருத்து என்னவென்றால், பீட்டா.t2, காமா.t3 ஆகியவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் மிகுந்த குழப்பம் ஏற்படும் என்பதால் அவை எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு Rt = R0 (1 + ஆல்பா.t ) என்று மட்டும் குறித்துக் கொண்டு கணக்கிடுவர். அதுதான் First order Approximation,.

கவிதைக்கு படிமம் குறியீடு இவையெல்லாம் குழப்ப நிலை ஏற்படுத்தும் Higher orders of Approximation. ஒதுக்கித் தள்ளினால் ஒன்றும் மோசம் போகாது. ஆனால் First order Approximation ஆன உள்ளார்ந்த இசைத்தன்மையை ஒதுக்கித் தள்ளினால் அது உயிர்த் துடிப்பை இழந்து நிற்கும்.

என்ன இது மடத்தனமாக இருக்கிறது இலக்கியத்தை, கவிதையை அறிவியல் நோக்கில் காண்பதாவது என்று யாராவது முணுமுணுக்கக் கூடும்.

தமிழ்ப் பண்பாடும் தமிழ்க் கலாசாரமும் சார்ந்த, இவற்றின் பிரதிபலிப்பான தமிழ்க் கவிதைகளுக்கு, நமக்குக் கொஞ்சமும் ஒத்துவராத மேலைப் பண்பாட்டையும் வாழ்க்கை முறைகளையும் ஆதாரமாகக் கொண்ட பிரெஞ்சு ஆங்கிலக் கவிஞர்களையும் விமரிசகர்களையும் மேற்கோள் காட்டுவதை விட உலகு முழுமைக்கும் பொதுவான அறிவியல் அடிப்படையில் விவாதிப்பதில் என்ன தவறு?

(இன்னும் பேசுவேன்)
|

1.5.04

எனக்குப் புரியவில்லை.. 

பரத நாட்டியம் என்றொரு கலை தமிழ் நாட்டில் பரவலாகப் பலருக்கும் தெரிந்த கலையாக உள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் நடுத்தர, உயர் வகுப்புப் பெண்கள் பலரும் பரத நாட்டியம் கற்றுக் கொள்வதைத் தமக்குச் சூட்டிக் கொள்ளும் மற்றொரு மகுடமாகத் தான் கருதுகிறார்கள்.

பத்மா சுப்பிரமணியம், சித்ரா விசுவேசுவரன் போன்ற பெயர்களைக் கேட்டாலே நம்மில் பலர் புல்லரித்துப் போகிறோம். ஆடல் கலையில் அவர்களது ஈடுபாடு நம்மைப் பிரமிக்கச் செய்கிறது.

அதைப் போல் இசைக்கலையில் எம்.எஸ். அவர்களின் பெயரைச் சொன்னாலே ஒவ்வொரு தமிழனும் பெருமிதமடைகிறான். தம்மை இசைக்கு அர்ப்பணித்துக் கொண்ட அந்த இசையரசியின் இனிய குரல்வளம் எப்போது கேட்டாலும் நம்மை மெய் மறக்கச் செய்கிறது.

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் இசைவிழாக்களும் திருவையாறு தியாகராசர் ஆராதனை நிகழ்ச்சிகளும் முழுக்க முழுக்க மரபு சார்ந்த இசைக்கே அர்ப்பணிக்கப் படுவதும் நாமறிவோம்.

‘இவையெல்லாம் மரபுசார் கலைகள்’ என்ற ஒரு வரியை மட்டும் நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டும்.

இந்த மரபு சார்ந்த கலைகள், கடும் பயிற்சியால் தொன்று தொட்டு நாம் பின்பற்றி வருபவை. முக்கியமாக இத்துறைகளில் ‘நான் இவரது பாரம்பரியத்தில் வருபவர்’.. ‘அவரது பாரம்பரியத்தில் வருபவர்’.. என்றெல்லாம் சொல்வது நமது பெருமையை உயர்த்திக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

இதற்கு மாற்றாகக் கற்றறிந்த எவருக்கும் நவீன, மரபு சாராத இசையும் நடனமும் எள்ளி நகையாடத் தக்கதாகவே தோன்றுகிறது.
நவீன நாட்டியம் பற்றி எப்போதோ ஒருவர் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன:

“முதுகில், ஆடைக்குள் ஒரு கம்பளிப் புழு நுழைந்து விட்டால் அதை எடுத்து எறியவும் முடியாமல் அது கொடுக்கும் துயரும் தாங்காமல் ஒருவர் போடும் ஆட்டம் போல உள்ளது” என்றெல்லாம் எழுதி இருந்தார்.

இதில் எனக்கு மறுப்பேதும் இல்லை.

இத்துறைகளில் கற்றுத் துறை போகிய வித்தகர் யாவரும் மரபு சாராத நடனத்தையோ இசையையோ தம் கால் துாசிக்குக் கூடச் சமமாகக் கருதுவதில்லை. மரபு சாராத எந்தச் சோதனை முயற்சிகளையும் இவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.

ஆகவே இசை, நாட்டியக் கலைத் துறைகளைப் பொருத்தவரை மரபு சார் முயற்சிகள் மட்டும்தான் தழைக்க முடியும். முறைப்படி கற்றவன் மட்டுமே இத்துறைகளில் கால் பதிக்க முடியும் - காலம் தள்ள முடியும் என்ற நிலைமை உள்ளது.

இதற்கு மாறாகக் கவிதைத் துறையில் மரபுக் கவிதை காணாமல் போனதை – இல்லையில்லை கொன்றழிக்கப் பட்டதை – நினைத்துக் குமுறிக் கொண்டிருக்கும் தமிழ் ஆர்வலர்களில் நானும் ஒருவன்.

அகம், புறம், மேல், கீழ்க் கணக்கு, சிலம்பு, கம்பனைத் தாண்டி வளராத தமிழாசிரியன் அல்ல நான்.

பாரதி, பாரதிதாசன், கவிமணி, கண்ணதாசனுக்குப் பிறகு நல்ல தமிழ்க் கவிஞனைக் காணவேயில்லை என்று கண்ணீர் வடிக்கும் தமிழ் வாசகன்.

தற்காலக் கவிதை உலகின் முன்னோடி பாரதி தெரிந்தோ தெரியாமலோ எழுதி வைத்துப் போன ‘வசன கவிதை’ தான் இந்தப் புது வசன கர்த்தாக்கள் தமிழைப் புரட்டிப் போட்டதற்குக் காரணம்.

பாரதியைப் படித்துள்ள எவரும் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்: அவனது ஆக்கங்களில் வசன கவிதையின் உண்மையான மதிப்பு என்ன? அவனது படைப்புக்களில் வசன நடையை ஒட்டு மொத்தமாக நீக்கி வைத்தாலும் பாரதியின் மதிப்பு எள்ளளவாவது குறையுமா? பாரதி என்றதும் நம் நினைவில் நிழலாடுவது அவனது மரபு நடையா இல்லை வசன நடையா?

புதுக் கவிதை என்ற பெயரால் தமிழை அழித்த இவர்கள் கூறுவது என்ன?

எதுகையும் மோனையும் இன்புறக் கூடி அழகிய நடையில் கவிதை வடிப்பது குற்றமாம்.

இவர்கள் உடலுக்கு அழகு தேவை.
இவர்கள் ஆடைக்கு அழகு தேவை.
இவர்கள் வீட்டுக்கு அழகு தேவை.

ஆனால் தமிழில் கவிதைக்கு அழகிய மொழிநடை இருந்தால் குற்றமாம்.

இதற்கெல்லாம் பல காரணங்கள் உண்டென்று நான் நினைக்கிறேன்.

மரபு சார் கவிதைக்கு முயற்சியும் பயிற்சியும் தேவைப்பட்டது.

கண்டதைக் கிறுக்கி விட்டுக் கவிதை என்று பெயர் சூட்ட முடியவில்லை.

இலக்கணம் படித்து எழுதுதல் கடினம் என்று இவர்கள் எண்ணிக் கொண்டார்கள்.

கல்லடுக்கி வீடு கட்டுதல் போல சொல்லடுக்கிக் கவிதை கூற முயன்றார்கள். அடுக்கும் பயிற்சியில் தோற்றுப் போய்க் கவிதை மரபையே உடைத்து நொறுக்கி விட்டார்கள்.

நல்லதோர் மனிதன் சட்டம் பயின்று வாழ்வதில்லை. தேவையுமில்லை. பயிலா விட்டாலும் அவன் சட்டத்தை மீறி வாழ்வதில்லை.

இலக்கணம் பயின்று எவரும் கவிதை எழுதுவதில்லை. கவித்துவ உணர்வுள்ளவர்கள் எழுதுவதெல்லாம் இலக்கண விதிக்குள் வரும்.

கவித்துவம் என்பது கடவுள் வரமா? தெரியவில்லை.

“ஈதல் இசைபட வாழ்தல்” என்றான் வள்ளுவன். இந்த இசைபடுதலைப் புகழ்பட என்றுதான் பலரும் பொருள் எழுதியுள்ளார்கள். நான் ‘இசைபட’ என்றே எடுத்துக் கொள்கிறேன். உள்ளத்தில் ஒலிக்கும் இசை..

எவனது உள்ளத்தில் இசை ஒலிக்கிறதோ அவன் எழுத்துக்கள் எல்லாம் கவிதையாக மலரும். அது படிப்போரின் உள்ளத்தில் இசை எழுப்பும்.

உள்ளத்தில் இசை ஒலிக்கவில்லை எனில் இவர்கள் எழுதுவது எதுவாகவும் இருக்கலாம் – கவிதையைத் தவிர.

கற்பனை நயம் போதுமாம் – கருத்தாழம் போதுமாம் – அழகிய மொழிநடை மட்டும் வேண்டாமாம்.

வாலறுந்த நரி உங்கள் நினைவுக்கு வந்தால் அது என் குற்றம் அல்ல.

அழகிய மொழிநடையிலான மரபுசார் கவிதைகள் மட்டும் தொடர்ந்திருந்தால் தமிழும் தமிழனும் மென்மேலும் வளர்ந்திருப்பர் என்று நான் நம்புகிறேன்.

கற்பனையும் கருத்துமே கவிதையென்று புதுக்கவிதையில் புரட்சி செய்த பேரரசர்கள், காசுக்குக் கவிதை எழுதும் திரைத்துறைக்கு வரும்போது மட்டும் டப்பாங்குத்து இசைக்குத் தமிழெழுதும் அவலமும் அந்த டப்பாங்குத்துப் பாடல்களைத் தமிழன் தெருவெல்லாம் முழக்கித் திரியும் அசிங்கமும் இங்கே நடந்திருக்காது என்றும் நம்புகிறேன்.

இவையெல்லாம் பலப்பல ஆண்டுகளாக என்னுள்ளே குமுறிக் கொண்டிருந்த உணர்வுகள்.

இவற்றையெல்லாம் எந்த அச்சு வடிவிலான ஊடகமும் ஏற்று வெளியிடாது என நானறிவேன்.

ஏனென்றால் நாட்டியத்திற்கும் இசைக்கும் மரபுசார் நெறிகளைத் துாக்கிப் பிடிக்கும் இவர்கள் தமிழ்க் கவிதைக்கு மட்டும் மரபை உடைத்தெறிந்தது எதனால் என்று எனக்குப் புரியவில்லை.

உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
| (0) விரிவான மறுமொழி

This page is powered by Blogger. Isn't yours?